முகப்பு மருத்துவம் உணவே மருந்து
இந்த 6 காய்களும் இந்த 6 நோய்கள் வராமல் தவிர்க்க உதவும்!
By சினேகா | Published On : 30th January 2018 03:02 PM | Last Updated : 30th January 2018 03:02 PM | அ+அ அ- |

நம்முடைய வாழ்க்கையில் நவீன வசதிகள் பெருக பெருக உடல் நலத்தை இழந்துவருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். இந்தத் தலைமுறையினர் தான் முப்பது வயதிலிருந்து நாற்பது வயதிற்குள் பலவிதமான நோய்களுக்கு சொந்தக்காரர்களாகிவிடுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் சரியான உடல் உழைப்பு இல்லாததும், சத்துள்ள உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதாகும்.
குப்பை உணவுகளிலுள்ள நச்சுப் பொருட்கள், கொழுப்புகள் போன்றவை நமது ரத்தத்தில் அதிகமாக கலக்கிறது.இதனால் ரத்த ஓட்டம் குறைய ஆரம்பிக்கும். ரத்த ஓட்டம் குறைவதனாலேயே பெரும்பாலான நோய்கள் உண்டாகின்றன. ஆரோக்கியமான உணவுகள் ரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு, ரத்தத்தை சுத்தப்படுத்திக் கொள்ளவும் செய்யும்.
முருங்கைக்காய்
முருங்கைக் காய் ஆஸ்துமா சம்மந்தப்பட்ட பிரச்னைகளுக்கு நல்ல மருந்தாகும். முருங்கைக் காய் போட்டு ஆவி பிடித்தால் சுவாசப் பிரச்னைகளுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
எலுமிச்சை
எலுமிச்சை, நோய்த் தொற்றுக்களை அழிக்கும் தன்மைக் கொண்டது. தைராய்டு பிரச்னைகள் வராமல் தடுக்க எலுமிச்சை பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சளி, ஆஸ்துமா, அலர்ஜி, தொண்டை அடைப்பு போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும். நினைவுத்திறன் அதிகரிப்பதோடு, மனம், மூளையின் செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்கும் என்பது ஜப்பானிய விஞ்ஞானிகள் கருத்து.
வெண்டைக்காய்
வெண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் அது ரத்த அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்க உதவும். காரணம் வெண்டைக்காயில் பொட்டாஷியம் மற்றும் வைட்டமின் சி சத்து உள்ளது. இதில் மிக அதிக அளவில் ஃபோலிக் அமிலமும் உள்ளது. மேலும் அதில் புரதம், இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின் ஆகியவை இருப்பதால் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.
புடலங்காய்
சிலருக்கு படுத்தவுடன் உறக்கம் வராது. அல்லது ஆழ்ந்த தூக்கம் வராமல் சிரமப்படுவார்கள். உணவில் புடலங்காய் சேர்த்து சாப்பிட்டுவந்தால் இத்தகைய உறக்கமின்மை பிரச்னை தீரும். நார்ச்சத்தும் ஃபோலிக் அமிலமும் கொண்ட குறைந்த கலோரி அளவுள்ள காய்களுள் ஒன்று புடலங்காய். சர்க்கரை, இதய நோய்கள், ரத்த அழுத்தம் ஆகிய பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் புடலங்காய் சேர்த்துக் கொள்வது நல்லது.
கோவைக்காய்
உடம்பில் சேரும் அதிகப்படியான கொழுப்பை கரைக்கவல்லது கோவைக்காய். கோவைக்காயில் இயற்கையாகவே கொழுப்பை வெளியேற்றும் தன்மை இருப்பதால், வளர்சிதை மாற்றத்தால் உண்டாகும் உடல்பருமன் போன்ற பிரச்சனை நீங்கும். அனேக ஊட்டச்சத்துகள் மற்றும் தாது பொருட்கள் நிறைந்துள்ள இந்தக் கோவைக்காய் உடலில் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும்.
பீர்க்கங்காய்
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பாகற்காய்க்கு பதிலாக பீர்க்கங்காயை சாப்பிடலாம். பீர்க்கங்காய் இலையிலிருந்து சாறு எடுத்து அதனை சூடாக்கி தினமும் ஒரு டீஸ்பூன் அருந்தி வர சர்க்கரை வியாதி கட்டுப்பாட்டில் இருக்கும்.
இந்த 6 காய்கறிகளும் குறைந்த கலோரிகள் கொண்டவை. மேலும் இவற்றில் வைட்மின்களும் மினரல்களும் புரதச்சத்தும் தேவையான அளவு நிறைந்திருக்கின்றன.