Enable Javscript for better performance
வெண்பூசணியில் இத்தனை இத்தனை நன்மைகளா?- Dinamani

சுடச்சுட

  

  வெண்பூசணியில் இவ்ளோ நன்மைகளா?

  By Dr. S. அருள்சொரூபி  |   Published on : 19th January 2019 11:18 AM  |   அ+அ அ-   |    |  

  kootu

  பூசணிக்காயில் மஞ்சள் நிறமுள்ள கல்யாண பூசணியும், வெண்மை நிறமுள்ள பூசணியும் காணப்படுகிறது. பூசணிக்காயின் சதைப் பகுதியும், விதைகளும் மருத்துவத்தில் பயன்படுகின்றன. அதனைப் பற்றி நாம் பார்ப்போம்.

  ‘உணவே மருந்து’ என்பதை நாம் நன்கு அறிவோம். காரணம், உணவு என்பது வெறுமனே பசியைப் போக்குவதற்காகவும், நாவின் சுவைக்காகவும் மட்டுமே உருவானது அல்ல. அதற்கு அப்பாலும் அபாரமான மருத்துவக் காரணங்கள் அதற்கு உண்டு. அதனால்தான் அர்த்தம் பொதிந்த இந்த சொற்றொடரை நம் முன்னோர் சொல்லி வைத்தனர்.

  ‘உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
  அப்பால் நாற்கூற்றே மருந்து.'

  இந்த கருப்பொருளின் அடிப்படையிலேயே பூசணியின் நற்குணங்கள் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

  கொடி இனத்தைச் சார்ந்த ஒரு காய் வகைதான் பூசணி. Cucurbita maxima என்பது இதன் தாவரப் பெயர் ஆகும். Red pumpkin, squash melon என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். மத்திய அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது பூசணி. 

  பூசணியில் இரண்டுவகை உண்டு. சர்க்கரைபூசணி, வெண்பூசணி.

  இந்த இரண்டு பூசணிகளுமே உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. பரங்கிக்காய் பற்றிய அகத்தியர் பாடல்

  அனலழலை நீக்கும் அதிபித்தம் போக்குங்
  கனலெனவே வன்பசியைக் காட்டும்புனராரும்
  மிக்கவையம் உண்டாகும் மென்கொடியே எப்போதும்
  சர்க்கரைப் பரங்கிக்காய் தான்.

  அகத்தியர் குணபாடம்

  சிறப்பு அம்சங்கள்:

  மிகக் குறைவான கலோரி கொண்ட காய் இது. 

  100 கிராம் காய் 26 கலோரிகள் கொண்டது. இதில் கொழுப்பும் (Fat), கொலஸ்ட்ராலும் இல்லை.

  இதில் செரிமானத்துக்கான நார்ச்சத்து, ஆன்டிஆக்சிடென்ட், தாதுச் சத்து மற்றும் வைட்டமின் ஆகியவற்றைக் கொண்டது. 

  குறிப்பாக இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை அதிகம். உடலுக்குத் தேவையான இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட்டாக செயல்படுகிறது. 

  சரும ஆரோக்கியத்தையும் சளி சவ்வுப் பகுதிகளையும் (Mucous Membrances) பாதுகாக்கிறது. பார்வைத் திறன் மேம்படவும் உதவுகிறது.

  இது ஆல்ஃபா, பீட்டா கரோட்டின், லூட்டின் மற்றும் ஸியாக்ஸான்தின் ஆகியவற்றைக் கொண்டது. Zeaxanthin என்பது இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட். 

  இது வயது முதிர்ந்த காலத்தில் ஏற்படும் தசை நோய்களைத் தடுக்கிறது. பரங்கியில் கெராட்டினாயிட்ஸ் (Carotenoids) அதிகம் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது. ஃபோலேட், நியாசின், வைட்டமின் பி6, தையாமின் மற்றும் பான்டோதெனிக் அமிலம் போன்ற பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் இதில் அதிகம். தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவற்றை சிறந்த அளவில் உள்ளடக்கிய காய். பரங்கி விதைகளில் நார்ச்சத்தும், ஒற்றை - நிரம்பாத கொழுப்பு அமிலமும் (Monounsaturated fatty acid) உள்ளன. 

  இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதில் ட்ரிப்டோஃபன் எனப்படுகிற அமினோ அமிலம் உள்ளது. 1 டீஸ்பூன் பரங்கி விதையை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் நமது முழு ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து உள்ளது.

  பரங்கியில் நமது சருமத்துக்குத் தேவையான நல்ல கொழுப்பு அமிலமும் உள்ளது. சருமப் பளபளப்புக்குக் காரணமான வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் மக்னீசியமும் உள்ளது. 

  பரங்கியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சருமத்தில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படுவதுடன் மேலும் பாக்டீரியா தொற்றுக்கு எதிராகப் போராடவும் செய்கிறது.

  பரங்கியில் எல்லா விதமான மருத்துவ குணங்களும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் வாயு தொந்தரவு, செரிமான கோளாறு மற்றும் அல்சர் ஆகியவையும் சரி செய்யப்படுகிறது.

  உடற்சூடு, வெப்பு ஆகியவற்றை நீக்கும் தன்மையுடையது பரங்கிக்காய். அதிகமான பித்தத்தை நீக்கக்கூடியது. 

  வயிற்றில் நெருப்பை வைத்தாற்போல பசியை உண்டாக்கக் கூடியது. 

  உடலுக்கு உரத்தை உண்டாக்கும் என்று பாராட்டும் அகத்தியர், பூசணியை அதிகமாக உண்பதால் சீதள நோய்கள் உண்டாகக் கூடும் என்றும் தவறாமல் எச்சரிக்கிறார்.

  பூசணியின் மருத்துவ குணங்கள்: 

  பூசணியின் முற்றிய காய்கள் தலைவலியைப் போக்கவும், நெஞ்சகச் சளியை நீக்கவும், மூச்சிரைப்பைப் போக்கவும், சிறுநீரகக் கோளாறுகளுக்காகவும் பயன்படுகிறது.

  நாடாப்புழுக்களை வெளியேற்றும் புழுக்கொல்லியாகவும் இந்த முற்றிய காய்கள் பயன்படுகிறது. 

  வெண்பூசணியின் விதையிலிருந்து பல மருத்துவ வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

  வெண்பூசணியின் தண்டுப்பகுதியை முறையற்ற மாதவிலக்கை சீர் செய்யவும், சருமத்தில் மேற்புறத் தழும்புகளை குணப்படுத்தவும் பயன்படுத்துகின்றனர். 

  அதன் வேர்ப்பகுதியை மஞ்சள் காமாலை, சிறுநீர் பாதை எரிச்சல், சீதபேதி ஆகியவற்றைக் குணப்படுத்தவும் பயன்படுத்துகின்றனர்.

  வெண்பூசணி நெய் அல்லது கூழ்பாண்ட கிருதம் என்ற இந்தப் பூசணி நெய்யைச் சாப்பிட்டு வந்தால் சூலை நோய்கள் நிவர்த்தியாகும். 

  தோல் நோய்கள், பெண்குறிப் புற்று முதலியன நீங்கும். 

  உடல் சூடு, சூட்டுடன் எரிச்சல், நீர்க்கட்டு, நீர்க்குத்து முதலியன ஆண்களுக்கும், பெண்களுக்கும் நிவர்த்தியாகும். 

  எலும்புருக்கி முதலிய கொடிய நோய்கள் நிவர்த்தியாகும். 

  உடல் வலி நீக்கும் ஆண்டுக்கணக்கில் உடல் வலியால் அவதிப்படுபவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும்.

  புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும். 

  குளிர்ச்சியான குணம் கொண்ட பரங்கிக்காயின் சதைப் பற்றும் பல மருத்துவ குணங்கள் கொண்டது. 

  இதனாலேயே தீப்புண்களை ஆற்றவும், வீக்கங்களைக் கரைக்கவும் பரங்கிக்காயின் சதைப்பற்றை மருத்துவர்கள் உபயோகிக்கின்றனர்.

  பரங்கிக்காயின் விதைகள் சிறுநீரைப் பெருக்கக் கூடியது, நாடாப் புழு போன்ற வயிற்றுப்பூச்சிக்களை வெளித்தள்ளக் கூடியது, ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பி யின் வீக்கத்தைத் தடுக்கவல்லது

  பரங்கிக் கொடியின் 100 கிராம் இலையில் சுண்ணாம்புச்சத்து 36.38 மி.கி. அளவும், மெக்னீசியம் 38.80 மி.கி. அளவும், இரும்புச்சத்து 2.04 மி.கி. அளவும், துத்தநாகச்சத்து 0.76 மி.கி. அளவும், செம்புச்சத்து 0.42 மி.கி. அளவும் அடங்கியுள்ளது.

  பரங்கிக் காயின் விதையில் இருந்து பிரிக்கப்படும் எண்ணெயில் Sterols மற்றும் Triterpenoids ஆகிய சத்துகள் அடங்கியுள்ளன.

  இந்த எண்ணெய் ஒற்றைத் தலைவலியையும் நரம்பு வலியையும் போக்கும் தன்மையுடையது.

  பரங்கிக்காயில் அடங்கியிருக்கும் சத்துகள் 100 கிராம் பரங்கிக்காயில் பின்வரும் ஊட்டச்சத்துகள் அடங்கியிருக்கின்றன.

  எரிசக்தி (எனர்ஜி) 26 கலோரி, மாவுச்சத்து 6.50 கிராம், புரதச்சத்து 1.0 கிராம், கொழுப்புச்சத்து 0.1 கிராம், நார்ச்சத்து 0.5 கிராம் ஆகியவற்றுடன் வைட்டமின்களான ஃபோலேட்ஸ் 16 மைக்ரோகிராம், நியாசின் 0.600 மி.கி, பான்டோதெனிக் அமிலம் 0.298 மி.கி, பைரிடாக்ஸின் 0.061 மி.கி, ரிபோஃப்ளேவின் 0.110 மி.கி, தயாமின் 0.050 மி.கி, வைட்டமின் சி 9.0 மி.கி, வைட்டமின் ஈ 1.06 மி.கி, வைட்டமின் கே 1.1 மைக்ரோகிராம், நீர்ச்சத்துக்களான ‘சோடியம்’ 1 மி.கி, பொட்டாசியம் 340 மி.கி, தாது உப்புக்களான சுண்ணாம்புச்சத்து 21 மி.கி, செம்புச்சத்து 0.127 மி.கி, இரும்புச்சத்து 0.80 மி.கி, மெக்னீசியம் 12 மி.கி, மாங்கனீசு 0.125 மி.கி, பாஸ்பரஸ் 44 மி.கி, செலினியம் 0.3 மை.கி, துத்தநாகம் 0.32 மி.கி, உயிர்ச்சத்துகளான கரோட்டீன் ஏ 515 மைக்ரோ கிராம், கரோட்டீன் பி 3100 மைக்ரோ கிராம், கிரிப்டோ சாந்தின் பி 2145 மைக்ரோகிராம்.

  பரங்கிக்காய் சாறு தரும் மருத்துவப் பயன்கள்

  பரங்கிக்காய்ச் சாறு கல்லீரல் மற்றும் சிறுநீரகத்துக்கு பலம் சேர்க்கிறது.

  சிறுநீரகக் கற்களால் பாதிப்படைந்தவர்களும், பித்தப்பையில் கோளாறு உடையவர்களும் தினம் 3 வேளை என பரங்கிக்காய் சாற்றை அரை டம்ளர் அளவு 10 நாட்கள் பருகுவதால் சிறுநீரக மற்றும் பித்தப்பைக் கோளாறுகள் தணியும்.

  பரங்கிச் சாறு ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பைப் போக்கக்கூடியது.  இதனால் மாரடைப்பு உட்பட பல இதய நோய்கள் தடுக்கப்படுகிறது. 

  பரங்கிச்சாறு ஜீரணத்தைத் தூண்டி, மலச்சிக்கலையும் போக்கக் கூடியது. 
  பரங்கிச்சாறு அமிலச் சத்தினைக் குறைக்கக்கூடியது. புண்களை ஆற்றக் கூடியது. 

  பரங்கிச்சாறு லேசான மயக்கமூட்டும் தன்மையைப் பெற்றுள்ளது. இதனால் தூக்கமின்மையைப் போக்கவல்லது. ஒரு டம்ளர் பரங்கிச் சாற்றோடு சிறிது தேன் கலந்து சாப்பிடுவதால் தூக்கம் தூண்டப்படுகிறது.

  பரங்கிச்சாற்றில் Pectin எனும் வேதிப் பொருள் அடங்கியுள்ளதால் இதைக் குடிப்பதனால் கொழுப்புச் சத்தினைக் குறைக்க உதவுகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்தும் தீய விளைவுகளிலிருந்து பாதுகாப்பைப் பெற இயலுகிறது.

  பரங்கிச் சாற்றோடு சிறிது தேன் கலந்து சாப்பிடுவதால் உடலுக்குக் குளிர்ச்சி தரும் சிறந்த பானமாக அமைகிறது. இதனால் உடல் உஷ்ணம் தணிகிறது.

  கல்லீரலைப் பற்றிய நுண்கிருமியான ஹெப்படைட்டிஸ் ‘ஏ’ வை போக்கக்கூடியது பரங்கிச் சாறு. இதனால் கல்லீரலின் செயல்பாடுகள் மேன்மை அடைகின்றன.

  பரங்கிச்சாற்றில் அடங்கியிருக்கும் ‘வைட்டமின் ‘சி’ சத்து’ நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்குத் தந்து பல்வேறு நோய்களினின்று பாதுகாப்பைத் தருகிறது. 
  பரங்கிச்சாற்றிலுள்ள வைட்டமின்களான ‘ஏ’, ‘சி’ மற்றும் ‘ஈ’ மேலும் துத்தநாகம் ஆகியன கொப்புளங்கள், கட்டிகள், வீக்கங்கள், வண்டுக்கடி ஆகியவற்றினின்று சீக்கிரத்தில் குணமடையச் செய்கின்றன.

  பரங்கிச் சாற்றை தலைக்குத் தடவி வைத்திருந்து குளிப்பதால் தலைமுடி கொட்டுவது தவிர்க்கப்படுகிறது.

  பூசணி மருந்தாகும் விதம் பரங்கிக்காயின் உட்புறச் சதையை விதைகள் நீக்கிய பின் வேகவைத்துப் பின் பிசைந்து பசையாக்கிப் புண்களின் மீது வைத்துக் கட்டுவதால் நாட்பட்ட ஆறாத புண்களும் ஆறும். 

  பரங்கிக்காயின் விதைகளைத் தோல் நீக்கிப் பொடிசெய்து 5 முதல் 10 கிராம் அளவுக்கு தினம் இருவேளை உள்ளுக்கு எடுத்துக் கொள்வதால் சிறுநீரகக் கற்கள் உண்டாவது தவிர்க்கப்படுகிறது.

  பரங்கிக்காயின் பழுத்த காம்பை எடுத்து நன்கு உலர்த்தி நீரில் அரைத்து உள்ளுக்குக் கொடுக்க நச்சுக்கள் நீங்கும்.

  20-30 கிராம் விதையை எடுத்து குடிநீரில் இட்டு தினம் இரண்டு வேளை குடித்து வர வெள்ளைப்போக்கு குணமாகும், சிறுநீரும் தாராளமாக இறங்கும். வெண்பூசணியைத் தொடர்ந்து மூன்று மாதம் உணவோடு சேர்த்து வர இளைத்த உடம்பு பருக்கும். 

  வெண்பூசணியின் சாறு 30 மி.லி. அளவு எடுத்து அதனுடன் 10 மி.லி. தேன் கலந்து உள்ளுக்குப் பருகுவதால் இதயம் பலப்படும், ரத்தமும் சுத்தமாகும்.

  ரத்தபித்தம், சயம், இளைப்பு, பலவீனம், இதய நோய், இருமல் உள்ளவர்கள்

  நல்ல நோய் நிவாரணம் கிடைப்பதைத் தெரிந்துகொள்ள முடியும். 

  சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், இரண்டு தேக்கரண்டி தேனும் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக நிவர்த்தியாகும். 

  பூசணி விதையை பொடி செய்து வைத்துக்கொண்டு வேளைக்கு 10 கிராம் அளவில் தினசரி இருவேளை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா குணமாகும்.

  சுவாச உறுப்புக்கள் பலப்படும். இருதய பலவீனம் நீங்கி பலப்படும். நல்ல பசியுண்டாகும். மலச்சிக்கல் நீங்கும்.

  பூசணிக்காய் சாறு 30 மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வர வலிப்பு நோயின் தீவிரம் குறைந்துவிடும். நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும்.


  - Dr. S. அருள்சொரூபி.M.D.,(S), தலைமை சித்த மருத்துவர்,
  சித்தன் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம், மேல்மருவத்தூர்.

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  flipboard facebook twitter whatsapp