Enable Javscript for better performance
இளம் தம்பதிகள் நிறைய பேரிடம் இந்த பிரச்னை உள்ளது- Dinamani

சுடச்சுட

  

  இளம் தம்பதிகள் நிறைய பேரிடம் இந்த பிரச்னை உள்ளது

  Published on : 07th March 2019 10:55 AM  |   அ+அ அ-   |    |  

  mqp463

  மனநலம் சார்ந்த வாசகர்களின் கேள்விகளுக்கு மனோ தத்துவ நிபுணர் டாக்டர் லட்சுமி விஜயகுமார் அளித்த பதில்கள்:

  திருமணமான எனது மகளுக்கு சிறுவயதில் இருந்தே எண்ணச் சுழற்சி நோய் (ஓ.சி.டி) இருந்து வருகிறது. இந்த குறைபாடு இருப்பதையே அவளால் உணர முடியவில்லை. அருகிலுள்ள மனநல மருத்துவர்களிடம் கடந்த 25 ஆண்டு பெற்ற சிகிச்சையில் முன்னேற்றம் இல்லை. தனக்கு எந்த நோயும் இல்லை. ஏன் வீணாக என்னை துன்புறுத்துகிறீர்கள் என்ற அவளது வினாக்கள் அதிகமாகிவிட்டன. தனது இருகைகளையும் மூட்டு வரை பல தடவை சோப்பு போட்டு கழுவிக் கொண்டே இருக்கிறாள். குளிக்கும் நேரமும் அதிகமாகி இருக்கிறது. மாத்திரைகள் எடுத்துக் கொள்ளாத நிலையில் அவளுக்கு தெரியாமல் FLUNIL  LIQUID-ஐ உணவில் கலந்து கொடுத்து விடுகிறோம். அதிலும் முன்னேற்றம் இல்லை. இதை குணப்படுத்த வேறு ஏதாவது வழிகள் உங்களது அனுபவத்தில் உள்ளதா? 
  - அ.காஜா நஜிமுதீன், திருநெல்வேலி.

  பொதுவாக இந்த கை கழுவுதல் நோயைப் பொருத்தவரை, சிலர் அடிக்கடி கையை கழுவிக் கழுவி கை வெள்ளைப் பூத்து விடும் அளவிற்கு கழுவார்கள். அல்லது சோப்பு தீரும் வரை கழுவுவார்கள். அவர்கள் செய்வது அநாவசியம் என்று அவர்களுக்கே தெரியும். தன்னை மற்றவர்கள் கவனிக்கிறார்கள் என்பதும் அவர்களுக்கு தெரியும். ஆனால், அவர்களால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை என்பார்கள். அதாவது, ஆப்ஸஸிவ் கம்ப்ல்ஸிவ் டிஸ்ஸாடர் எனும் இந்த நோயைப் பொருத்தவரை தான் செய்வது தவறு என்று பாதிக்கப்பட்டவர்களுக்கே தெரிந்திருக்கும். ஆனால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதுதான் இவர்களது பிரச்னை. ஆனால், உங்களுடைய விஷயத்தில் உங்களது மகள், எனக்கு ஒன்றுமில்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்று சொல்வதாக கூறியுள்ளீர்கள். அதனால், இவரைப் பொருத்தவரை மனச்சிதைவு நோய்க்கான அறிகுறி தென்படுகிறது. இதனால்தான் அவர் மருத்துவரிடம் வர மறுக்கிறார். ஆனால், இதற்கு தற்போது புதுவகையான சிகிச்சைகள் எல்லாம் வந்திருக்கிறது. மாத்திரைகள் இல்லாமல், டீப் ரெஸ்ட் ஸ்டிமுலேஷன், பிரைன் ஸ்டிமுலேஷன் என புதுவகையான டிரீட்மெண்ட்டும், புதுவகையான மருந்துகளும் வந்திருக்கின்றன. அதனால், நீங்கள் அருகில் உள்ள மனோ தத்துவ மருத்துவரை அணுகினால் , லேட்டஸ்ட் சிகிச்சைகளை பற்றி கூறுவார்கள். அது உங்களுக்கு தீர்வு தரலாம். 

  **

  என் மகன் - மருமகள் திருமணம் முடிந்து 6 ஆண்டுகள் 3 மாதங்கள் ஆகின்றன. இதில் 1 வருடம் 6 மாதம் இந்தியாவிலும், மீதி ஆண்டுகள் யூ.எஸ்.இல் வசித்து வருகின்றனர். மகன் சாப்ட்வேர் என்ஜினியர், மருமகள் ஆர்கிடெக்ட். நல்ல குடும்பம், நல்ல பெண், நல்ல படிப்பு என்பதால் திருமணம் நன்றாக முடிந்தது. திருமணத்தின் போது என் மகனுக்கு 28 வயதும், மருமகளுக்கு 25 வயதும் இருந்தது. வெளிநாடு கிளம்பும் போது இருவரும் சீக்கிரம் குழந்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லித்தான் இரண்டு குடும்பமும் அனுப்பி வைத்தோம். 

  இரண்டு ஆண்டுகள் வரை நான் ஒன்றும் கேட்கவில்லை. புது இடம், மொழிப் பிரச்னை இதனால் தள்ளிப் போட்டிருக்கலாம் என்று நினைத்தேன்.  3- ஆவது ஆண்டு கேட்ட போது, என் மகன் இப்போது குழந்தைக்கு என்ன அவசரம் என்று சொன்னான். குழப்பம் அடைந்தேன். இதனால் மருமகளின் தாயாரிடம் இது குறித்து பேசினேன். உடலில் ஏதும் பிரச்னை உள்ளதா? அல்லது பயப்படுகிறார்களா? என பேசி பாருங்களேன் என்று சாதாரணமாக நான் சொல்ல, உடனே என் மருமகள் அங்கிருந்து தொலைபேசியில் அழைத்து, "என் அம்மாவிடம் ஏன் அப்படி பேசினீர்கள், எனக்கு வாழ்க்கையில் நிறைய சாதிக்க வேண்டும். அதன்பிறகு தேவையென்றால் பிள்ளை பெற்றுக் கொள்வேன். இதைப் பற்றி என் அம்மாவிடம் இனி பேசக் கூடாது'' என்றாள். அதன்பிறகு என் மகனிடம் பேசினேன். அவள் மனதில் ஏதும் பயமோ, தேவையில்லாத எண்ணங்களோ இருந்தால் டாக்டரிடம் சென்றால் சரி பண்ணிவிடுவார் என்று ஆன மட்டும் கெஞ்சிப் பார்த்தேன். அவளுக்குப் பிடிக்கவில்லை, "அதனால் எனக்கும் குழந்தை வேண்டாம்'' என்று சொல்லிவிட்டான். இதனால் மனம் உடைந்து போனேன். மேலும், இதைப் பற்றி பேசுவதை நிறுத்திக் கொண்டேன். இருந்தாலும், இதில் வேறு ஏதாவது பிரச்னை இருக்குமோ என்று தோன்றுகிறது. 

  நல்ல வேலை, கை நிறைய சம்பளம், நிம்மதியான வாழ்க்கை என எங்கள் குடும்பம் மற்றவர்கள் பார்த்து பொறாமைபடும்படியான வாழ்க்கையாக அமைந்திருந்தாலும், மனம் வெறுமையாக உள்ளது. 

  தற்போது, எனது மகள் 6 மாதம் கர்ப்பமாக இருக்கிறாள். அது கொஞ்சம் ஆறுதலாக இருந்தாலும், மகன் விஷயத்தில் நான் என்ன செய்வது? முதல் வருடமே ஒரு மாமியாராக இருந்து குழந்தை பெற்றுக்கொள்ள சொல்லி இருக்க வேண்டுமா? அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டபின் பிள்ளை பெற்றுக் கொள்ளட்டும் என்று விட்டது தவறா? ஒரே ஒரு குழந்தையைப் பெற்று கொடு நான் வளர்த்து தருகிறேன். என்று கண்ணீர் விட்டு கெஞ்சியும் இவ்வளவு பிடிவாதமாக இருக்கின்றாள். மருமகளின் பெற்றோர் யு.எஸ். சென்று பேசிவிட்டு வருகிறோம் என்று சென்று வந்தார்கள். "இரண்டும் பேரும் என்ன சொல்கிறார்கள்'' என்று அவர்களிடம் கேட்டால், நன்றாக இருக்கிறார்கள். என்று ஒரு வரி மட்டும் பதில் அளித்து வேறு வேலை இருப்பது போன்று பேச்சை மாற்றுகிறார்கள். இதற்கு மேல் என்ன செய்வதென்றே புரியவில்லை. இப்பொழுது கடவுளை மட்டுமே நம்பியுள்ளேன். எனக்கு நல்ல வழி கூறுங்கள்.
  - ஆர். உஷா, சென்னை.

  இன்றைய இளம் தம்பதிகள் நிறைய பேரிடம் இந்த பிரச்னை உள்ளது. குழந்தைகள் பெற்றுக் கொண்டால் தனது கெரியர் பாதிக்கப்படும் என நினைக்கிறார்கள். மேலும், கணவன் - மனைவிக்குள் உள்ள அன்னோன்யம், அந்தரங்கம் குறைந்து விடும் என எண்ணி தற்போது குழந்தைப் பெற்றுக் கொள்வதை விரும்புவதில்லை. மேலும், திருமணத்திற்கு பின் குழந்தை வேண்டுமா? வேண்டாமா? என்றெல்லாம் முடிவு செய்த பின்னரே திருமணம் செய்து கொள்கிறார்கள். தற்போது இந்த கலாசாரம் இளையோரிடம் பரவி வருகிறது. அதனால் உங்கள் மகன் விஷயத்தைப் பொருத்தவரை, கணவன்- மனைவி தான் பிள்ளையைப் பெற்றுக் கொள்வது பற்றி முடிவு செய்ய வேண்டும். எதனால் அவர்கள் குழந்தை வேண்டாம் என்கிறார்கள் என்பது நமக்கு தெரியவில்லை.

  உங்களது மகனுக்கோ அல்லது மருமகளுக்கோ உடல்ரீதியான பிரச்னையாகவும் இருக்கலாம். என்ன என்பது தெரிந்தால் அதற்கான ஆலோசனைகள் சொல்லலாம். ஒரு அம்மாவாக நீங்கள் ஒரு பேரப் பிள்ளை வேண்டும் என்று நினைப்பது நியாயம். ஆனால், அதே சமயம், நீங்கள் அதையே நினைத்துக் கொண்டிருந்தால் உங்கள் உடல்நிலையும், மனநிலையும் பாதிப்புக்குள்ளாகும். மேலும், நீங்கள் அழுத்தம் கொடுக்க கொடுக்க உங்கள் மீது வெறுப்புதான் உண்டாகும். எனவே, நீங்கள்தான் மனதை மாற்றிக் கொள்ள வேண்டும். நீங்கள் நல்ல மகனை பெற்று வளர்த்து உள்ளீர்கள், அதையே திருப்தியாக எடுத்துக் கொள்ளுங்கள். மகன்-மருமகள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவுக்கு மதிப்பு கொடுங்கள். அவர்களுக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது பெற்றுக் கொள்ளட்டும். இன்னொரு விஷயம் பார்த்தீர்கள் என்றால் குழந்தை வேண்டும் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு குழந்தை பிறப்பதில்லை. அதனால் உங்கள் கடமையை நீங்கள் சரியாக செய்து விட்டீர்கள் என்ற எண்ணம் கொள்ளுங்கள். நீங்கள் கேட்டது போல் திருமணத்திற்கு முன்பு குழந்தை பெற்றுக் கொள்வேன் என்று கூறிவிட்டு, பின்னர், வேண்டாம் என்றால் என்ன செய்ய முடியும். அதனால், நீங்கள் அவர்களையே நினைத்திருப்பதனால் ஒரு பயனும் இல்லை. உங்கள் மகள் தற்போது கர்ப்பமாக இருப்பதாக சொன்னீர்கள். அதனால் உங்களின் ஆசைகளை அந்தக் குழந்தை மூலம் தீர்த்துக் கொள்ளுங்கள். மகனைப் பற்றி கடவுளிடம் பிரார்த்திக் கொள்ளுங்கள். உங்கள் மனதை வருத்திக் கொள்ளாதீர்கள். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai