அழகு ப்ளஸ் ஆரோக்கியம்! நிஷா கணேஷ்

காலை வேளையில் உடற்பயிற்சி செய்வது  மிகவும் நல்லது. சூரிய நமஸ்காரம்
அழகு ப்ளஸ் ஆரோக்கியம்! நிஷா கணேஷ்
Published on
Updated on
2 min read

நமக்கு அறிமுகமான ஒருவரை சில நாட்கள் கழிந்து பார்த்தால், என்ன கேட்போம்? 'சௌக்கியமா' என்று தானே ?  சௌக்கியம்  என்றால், உடல், உள்ளம், நிதிநிலைமை எல்லாமே அந்த சொல்லில் அடக்கம். உடல் ஆரோக்கியமாக இருந்தால், மற்ற எல்லாவற்றையுமே சமாளித்து விடலாம்.

உடலை எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்பதை பற்றி, ஜீ டிவியில், ஒலிபரப்பு ஆகி வரும், ' தலையணைப் பூக்கள்' தொடரில், கதாநாயகி,வேதவல்லியாக வலம் வந்து கொண்டு,  ரசிகர்களின் மனத்தில் இடம்பிடித்திருக்கும் நடிகை, 'நிஷா கணேஷ்' [மகாபாரதம் தொடரில், திரௌபதியாக நடித்தவர்] என்ன கூறுகிறார் பார்ப்போம்.

'ஆரோக்கியம்’ என்றால், உடல்வாகினைப் பொறுத்துதான் இருப்பதாக அநேகம் பேர்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். குண்டாக இருப்பவர்கள் நிறைய பேர், குனிந்து, நிமிர்ந்து வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள். ஒல்லியாக இருப்பவர்களிடம்  குனியவே சோம்பேறித்தனம் ஒட்டிக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம், உண்ணும் உணவும், செய்யும் உடற்பயிற்சியும்தான். தேகத்தை 'சிக்’ என்று வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை பெண்ணிற்கும், கட்டுமஸ்தாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை ஆணுக்கும் இருப்பது இயற்கைதான். அதற்காக, போஷாக்கான உணவினை சாப்பிடுவதாக நினைத்துக் கொண்டு யார் யார் எதை எதைக் கூறுகிறார்களோ, அவை  எல்லாவற்றையும் உட்கொள்ளும் பழக்கத்தினை சிலர் மேற்கொண்டு இருக்கிறார்கள்.

போஷாக்கான உணவு என்பது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி ஆகும் காய், ஜூஸ்  மற்றும் பழவகைகள் மட்டும்தான்  என்பது பலரின்  தவறான கருத்து. அதன் விலையும் அதிகம் இருக்கும். சாமானிய மனிதனால், அதிக விலை கொடுத்து பல பொருட்களை தினமும் வாங்கி சாப்பிட முடியாது. நாமெல்லாம் fruitarian அதாவது காய் மற்றும் கனி உணவாளர்கள். பரம்பரை பரம்பரையாக நம் நாட்டில் விளையும் காய்கள் மற்றும் பழவகைகளை உட்கொள்ளும் பழக்கமுடையவர்கள். நம் தாத்தாக்கள்,  பாட்டிமார்கள் எல்லாம் நமக்கு அந்த உணவைத்தான் உண்ண பழக்கி இருக்கிறார்கள் அதன்படி, காலை எழுந்தவுடன், சுமார் 5.30 முதல் 6 மணிக்குள் ,1/2 மூடி எலுமிச்சம் பழ சாரினில் சுத்தமான தேன் ஒரு ஸ்பூன் சேர்த்து, ஒரு தம்பளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்தல் நல்லது. .ஏனென்றால் காலை நேரத்தில், blood sugar இன் அளவு குறைந்திருக்கும்.காபி குடித்தால் அதிகமாக ஏறிவிடும், எலுமிச்சைச் சாறு சீராக சமனாப் படுத்தும்.

காலை வேளையில் உடற்பயிற்சி செய்வது  மிகவும் நல்லது. சூரிய நமஸ்காரம் செய்தால், நல்ல பலனைத் தரும். சூரிய நமஸ்காரம் செய்வதற்கென்று முறை இருக்கிறது.. யோகா மேற்கொள்ளலாம்   தகுந்த குரு மூலம் பயிற்சி பண்ணலாம். முடியாதவர்கள், You Tube மூலம் அறிந்து கொள்ளலாம்.

காலை 71/2 மணி முதல் 8 மணிக்குள், பப்பாளி, கிருணி, கருப்பு திராட்சை, பேரீச்சம்பழம் இவைகளை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, அதில்  தேனும், தயிரும் கலந்து சிற்றுண்டியாக உண்ணலாம்.

மதியம் ஒரு மணிக்கு உப்பு போட்டு, வெந்த காய்கள் 1/2 கிண்ணம், கறுப்பு கொண்டை கடலை சிறிதளவு, வெந்த உருளைக்கிழங்கு ஒன்று, முட்டை விரும்பிகள், ஒரு அவித்த முட்டையில் வெள்ளை பகுதி மட்டும், சிறிதளவு சாதம் அல்லது இரண்டு சப்பாத்திகள் சாப்பிடலாம்.

மாலை நான்கு மணிக்கு, அவித்த வேர்க்கடலை, பிஸ்கட், சிப்ஸ் போன்றவை ஸ்நாக்ஸ் ஆக எடுத்துக்கொள்ளலாம் (எண்ணையில் பொரித்ததை சாப்பிடவே கூடாது என்பதில்லை. எதுவுமே அளவோடு இருக்க வேண்டும்.)

இரவு ஏழு மணிக்கு, ஒரு கிண்ணம் சாலட்,கூட்டு அல்லது பொரியல் ஒரு கிண்ணம் எடுத்துக் கொள்ளலாம். பிறகு மஞ்சள் பொடி சேர்த்த பால் ஒரு தம்பளர் குடித்துவிட்டு, சிறிது நேரம் கழித்து உறங்கச் செல்லலாம்.

சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் போனால், பசி அதிகரித்து விடுகிறது. பசி நேரத்தில், உணவு உட்கொள்ளும் பொழுது, சாப்பிடும் அளவு நமக்குத் தெரிவதில்லை. வளைத்துக் கட்டிக் கொண்டு சாப்பிட்டு விடுகிறோம். பின்புதான் அவஸ்தை படுகிறோம். தின்பண்டங்களை சிலர் வாங்கியவுடன் அதன் ingredients என்ன என்று பார்த்து, போஷாக்கானதா என்பதை மட்டும் உறுதி செய்து கொண்டு உண்கிறார்கள். அது மிகவும் தவறு. எல்லா உணவும் எல்லோருக்கும் ஒத்துக்கொள்ளாது.

நாம் வாழும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப நம் உடல் தட்ப வெப்பத்தினை ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதனால், இங்கு விளையும் காய்கனிகள்  [நம் நாட்டில் என்ன விளைகிறதோ, அது மட்டும் தான்]  நம் உடலுக்கு ஒத்து வரும். நம் நாட்டிலேயே கூட வட மாநிலத்திற்கும், தென் மாநிலத்திற்கும் உணவுமுறைகள் மாறியிருப்பதற்கு சீதோஷ்ண நிலைதான் காரணம் என்பது புரிகிறது அல்லவா? ஆகையால், உடல் நலம் காக்க, உண்பதில் தெளிவு வேண்டும். புலியைப் பார்த்து, பூனை சூடு போட்டுக்கொண்ட கதை ஆகிவிடக் கூடாது. குறிப்பிட்ட நேரத்தில், சரியான உணவினை உட்கொண்டு,முறையான உடற்பயிற்சி செய்து, தேவையான உறக்கத்தினைத் தழுவினால், அதைவிட ஆரோக்கியம் வேறு எதுவுமே இல்லை .

தீபாவளி வருகிறது. இனிப்புப் பண்டங்களுக்கு குறையிருக்காது. எதிலும் அளவு இருக்கட்டும். வாசகர்களுக்கு, தீபாவளி நல்வாழ்த்துக்கள்.’ என்று ஒரே மூச்சில் கூறி முடித்தார் நிஷா கணேஷ். அவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்களைச் சொல்லிவிட்டு கிளம்பினோம்.

தொகுப்பு: மாலதி சந்திரசேகரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com