பெண்களுக்கு ஏற்படும் சில பிரச்னைகள்

‘பதினொரு  வயதில் இருந்து 35 வயதுக்குள் பெண்கள் பூப்படைதல், திருமணம், குழந்தைப்பேறு போன்ற வாழ்வின் முக்கியமான விஷயங்களை கடக்கிறார்கள்.
பெண்களுக்கு ஏற்படும் சில பிரச்னைகள்

‘பதினொரு  வயதில் இருந்து 35 வயதுக்குள் பெண்கள் பூப்படைதல், திருமணம், குழந்தைப்பேறு போன்ற வாழ்வின் முக்கியமான விஷயங்களை கடக்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் கவனத்துடன் இருந்தால் எதிர்காலத்தில் பல பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்’ என்கிறார் சென்னை மருத்துவர்  லீமா ரோஸ்.

ரத்த சோகை

அறிகுறி - சோர்வு, உற்சாகம் இன்மை, உடல் மெலிவு. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்தான் ஆக்சிஜனை உடலின் எல்லா பகுதிக்கும் கொண்டு செல்கிறது. ஆக்சிஜன் கொண்டு செல்லும் திறன் பாதிக்கப்படும்போது, உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்க அதிக அளவில் இதயம் துடிக்க வேண்டியதாகிறது. இதனால் இதயம் பெரிதாவது, செயலிழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். ரத்த சோகை இருந்தால் சோர்வு இருக்கும். சருமமும் வெளிறிவிடும். 

காரணம் - நம் உடலுக்கு தினமும்  10 முதல் 15 மில்லி கிராம் அளவுக்கு இரும்புச் சத்து தேவைப்படுகிறது. அதற்கும் குறைவான அளவில் இரும்புச் சத்து கிடைக்கும்போது ரத்தசோகை ஏற்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது.

சோதனை முடிவுகளுக்கு ஏற்ப மருந்து மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள்.

தீர்வு - ஈரல், கோழி இறைச்சி, மீன், கீரை, மாதுளை, பேரீச்சம் பழம் போன்ற இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் இரும்புச் சத்துக் குறைபாட்டைத் தவிர்க்கலாம். இதனுடன், வைட்டமின் சி உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். இரும்புச் சத்தை கிரகிக்க அது உதவும்.

உடல் பருமன்:

பல‌ நோய்களுக்குக் உடல் பரும பிரச்னை தான் காரணம்.  உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டுத் தேய்மானம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, மாதவிடாய்ப் பிரச்னை, குழந்தைப் பேறின்மை, மன அழுத்தம், மனச் சோர்வு போன்றவை ஏற்படும்.

கால்சியம் பற்றாக்குறை

அறிகுறி - எலும்பு மற்றும் இதர உறுப்புகளின் செயல்பாடு பாதிக்கப்படும். இந்நிலை நீடித்தால் ஆஸ்டியோபெராசிஸ் ஏற்படலாம். குழந்தை மற்றும் டீன் ஏஜில் எலும்பு வளர்ந்துகொண்டே இருக்கும். 30 வயதில் அது இன்னும் அதிகரிக்கும். எனவே, இந்தக் காலக்கட்டத்தில் பெண்களுக்கு அதிக அளவில் கால்சியம் தேவைப்படுகிறது.

காரணம் - கால்சியமானது எலும்பு மற்றும் பற்களில் உறுதித்தன்மைக்கு அவசியமானது. மேலும் இதயம் சீராகத் துடிக்கவும், நரம்பு, தசைகள் ஒழுங்காகச் செயல்படவும் உதவுகிறது. உணவில் இருந்து போதுமான அளவு கால்சியம் (தினசரி உணவில் 600 மி.கி.) கிரகிக்கப் படவில்லை எனில் பிரச்னைதான்.

தீர்வு - கால்சியம் பற்றாக்குறை உள்ளவர்களுக்கு, கால்சியம் சத்து மாத்திரையுடன் வைட்டமின் டி மாத்திரையும் பரிந்துரைக்கப்படும். பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் சத்து உள்ளது. முட்டை, எண்ணெய் சத்து நிறைந்த மீன் போன்றவற்றில் வைட்டமின் டி உள்ளது.

ஹைபோதைராடிசம்

அறிகுறி - சோர்வு, திடீரென உடல் எடை அதிகரித்தல், மாதவிலக்கில் ஒழுங்கின்மை, பொலிவற்ற சருமம் 

காரணம் - ஐயோடின் பற்றாக்குறை, மரபியல் பிரச்னை, மருந்துகளின் பக்கவிளைவு, சீரற்ற‌ இதயத் துடிப்பு போன்ற பல காரணங்களால் இந்தக் குறைபாடு ஏற்படலாம்.

தீர்வு - ரத்தப் பரிசோதனை செய்து அதன் முடிவுகளை வைத்து ஒருவருக்கு ஹைபோதைராடிசம் இருக்கிறதா இல்லையா என்பதை ஆய்வு செய்வார்கள். ஹைபோதைராடிசம் இருந்தால், கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள தைராய்டு சுரப்பி போதுமான அளவுக்கு தைராய்டை உற்பத்தி செய்யவில்லை என்ற முடிவுக்கு வரலாம்.

கர்ப்ப காலத்தில் தாயின் தைராய்டு குறைபாடு கருவைப் பாதிக்க வாய்ப்பு உள்ளது. கருவில் உள்ள குழந்தைக்கு முதல் 12 வாரங்கள் வரை தைராய்டு சுரப்பி உருவாகுவது இல்லை. எனவே முதல் 3 மாதங்கள் வரை தாயின் உடலில் உள்ள தைராய்டு ஹார்மோன் அளவைக் கொண்டே கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சி நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, கருவுறும் முன்பு பெண்கள் தைராய்டு ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுதல் நல்லது.

முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை என்றால் மன அழுத்தம், கெட்ட கொழுப்பு அளவு அதிகரித்தல், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். கருச்சிதைவு மற்றும் குழந்தைப்பேறின்மைக்கும் இது வழிவகுக்கும். கர்ப்ப காலத்தில் தாயின் தைராய்டு குறைபாடு கருவைப் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

சமச்சீரான சத்துள்ள‌ உணவு, தேவையான அளவு உடற்பயிற்சி போன்றவற்றை கடைபிடித்தால் நோய்க்கு நோ என்ட்ரி  சொல்லிவிடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com