

கலைச் செல்வங்களைச் சேர்க்க ""சென்றிடுவீர் எட்டு திக்கும்'' என்றார் பாரதி. ஆனால் தேசிய இனங்கள் அவர்கள் சார்ந்த படைப்புகளை வெளிக் கொணர்ந்து தங்களை அடையாளம் காட்டும் முயற்சிகளைக் கார்ப்பரேட்டுகள் தகர்த்து விடுகின்றன.
சாகித்ய அகாதமி நிகழ்ச்சியொன்றில் பெங்களூரில் சமீபத்தில் ஒரு கன்னடக் கவிஞரைச் சந்தித்தபோது மொழிபெயர்ப்பு வெளியீடும், வாசிப்பும் பற்றி பேச்சு வந்தது. சமீபத்தில் தமிழில் அதிக மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவருவதைப் பற்றிப் பெருமிதம் கொண்டேன்.
வங்காளம், கன்னடம், மலையாள மொழிகளில் அதிக மொழிபெயர்ப்புகள் வருவது பற்றிய மனதில் பதிந்த பொதுப் புத்தியுடன்தான் இந்த பெருமிதத்துடன் இருந்தேன். ஆனால் தற்போதைய கன்னட நிலைமை பற்றிய அவரின் கணிப்பு தமிழில் வரும் மொழிபெயர்ப்புகள் குறித்த பெருமிதத்தை இன்னும் கூடுதலாக்கியது. கன்னட இலக்கிய மொழிபெயர்ப்புகள் புகைவண்டியின் கடைசிப் பெட்டி போல கவனிப்பற்று இருப்பதாகச் சொன்னார்.
கவிதையோ மற்ற இலக்கிய நவீன வடிவங்களோ வாழ்க்கையின் கடைசிப் பெட்டிகளாகத்தான் பெரும்பான்மையோருக்குத் தென்படுகின்றன. கவனிக்கப்படாததாகத் தான் இருக்கின்றன. இந்த நிலையில் மொழிபெயர்ப்பு சார்ந்த அக்கறை இன்னும் உதாசீனப்படுத்தப்படுவதாய் கன்னடக் கவிஞர் சொன்னது உறுத்தியது.
ஒரு கன்னடக் கவிஞர் பற்றிக் குறிப்பிட்டு, அவரின் கவிதைகள் தேசிய அளவில் கவனத்துக்குரியதாக இருப்பதைப் பற்றிச் சொன்னபோது அதன் ரகசியத்தைச் சொன்னார். அந்தக் கன்னடக் கவிஞர் ஓர் இந்திப் பேராசிரியர் என்பதாலும் தேசிய அளவிலான பல இலக்கிய அமைப்பு சார்ந்த தொடர்புகள் இருப்பதாலும் அவர் கவிதைகள் சாதாரணமாக மொழிபெயர்ப்புக்குச் சென்று விடுகின்றன. அதற்கான அவரின் முயற்சிகளின் பலன்களும் வெளிப்படையாகத் தெரிகின்றன என்றார்.
ஆனால் கன்னடக் கவிஞர்களின் கவிதைகளோ பிற இலக்கிய வடிவங்களோ வெகு சொற்பமாகத்தான் மொழிபெயர்க்கப்படுகின்றன. இதைவிட சொற்பமாகத்தான் பிற இந்திய மொழிப் படைப்புகளும் கன்னடத்துக்கு சமீபமாய் வந்து சேர்கின்றன. மொழிபெயர்ப்பு முயற்சிகளும் அருகிக் கொண்டிருக்கின்றன என்றார். புகைவண்டியின் கடைசிப் பெட்டியின் ஒரு மூலையில் மொழிபெயர்ப்புப் பணிகள் முடங்கிப் போய் இருக்கின்றன என்றார்.
ஆனால் அதே சமயம் இந்தியாவில் வெளியாகும் ஆங்கில மொழிபெயர்ப்புகளின் வருகையும், ஏற்றுமதியும் கணிசமாகத்தான் இருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் இரண்டு சதவீதத்துக்குக் குறைவானவர்களே ஆங்கிலம் படிக்கத் தெரிந்தவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் வெளியாகும் ஐம்பது சதவீதப் புத்தகங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவையாகவும், ஆங்கில மொழி பெயர்ப்புகளாகவும் அமைந்திருக்கின்றன. இதற்குக் காரணம் இந்தியா ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்துக்கு உள்பட்டு இருந்ததன் பாதிப்புகள்தான். சுதந்திரத்துக்கு முன் ஆங்கில காலனித்துவ ஆதிக்கம் பண்பாடு, கல்வி போன்ற முக்கியத் துறைகளிலும் நீக்கமற நிறைந்திருந்தது. அது ஆட்சியின் அதிகாரத்துவத்தால் வெளிப்படையாகவும் தெரிந்தது. இன்றைய உலகமயமாக்கல் நவீன காலனித்துவச் சூழலை இறுக்கமாக உருவாக்கிவிட்டது. இந்த ஆதிக்க சூழல் கலை இலக்கிய முயற்சிகளை வெகுவாகப் பாதித்திருக்கிறது.
ஆங்கில நூல்களுக்கு இருக்கும் மாபெரும் சந்தை, படைப்பிலக்கியமாகட்டும், மொழிபெயர்ப்பாகட்டும் எல்லா திசைகளிலும் ஆங்கில நூல்களின் வெளியீட்டை எப்போதைக்கும் இல்லாத வகையில் விரிவாக்கியிருக்கிறது.
சின்னத் திரை ஊடகங்களில் குழந்தைகளுக்காக இருக்கும் தொலைக்காட்சி வரிசைகளும் சுயமான தமிழ் நிகழ்ச்சிகளை தயாரித்துத் தராமல், ஹாலிவுட் மற்றும் ஆங்கில நிகழ்ச்சிகளின் மொழிபெயர்ப்பையும் ஆங்கிலத் திரைப்படங்களின் "டப்பிங்' படங்களையுமே தருகின்றன.
முன்பெல்லாம் இந்தியில் வெற்றி பெற்ற "பாக்ஸ் ஆபீஸ்' கவர்ச்சிப் படங்கள், வன்முறை கோலோச்சிய படங்கள் தமிழில் வெகுவாக மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தன. இப்போது ஹாலிவுட் படங்களும், வன்முறைத் திரைப்படங்களும் மொழி மாற்றம் செய்யப்பட்டு நிறைய வெளிவருகின்றன. இவை குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படங்கள், மத்திய வகைப் படங்களை அலட்சியப்படுத்தி தூரத் துரத்தி விட்டன. புதிய காலனித்துவத்தின் புனைவுகளும், வேடங்களும் இதன் தாக்கத்தால் வெற்றி பெற்றுக் கோலோச்சுகின்றன.
புத்தகத் தயாரிப்பு என்பது பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தலையீட்டால் சந்தையை விரிவாக்கிக் கொண்டிருக்கும் சூழலில் கலை இலக்கிய அமைப்புகளும் அவற்றின் வெளியீட்டுத் தன்மையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் விருப்பத்திற்கேற்ப வளைந்து கொடுக்கும் சூழல் உருவாகி வருகிறது. படைப்பாளனாக ஒருவனை மாற்றுவதையோ, படைப்பாளனின் இருப்பை நிரந்தரமாக்குவதிலோ எவ்வித அக்கறையும் கொள்ளாமல் ஒருவனை நிரந்தர நுகர்வோனாக இருக்கச் செய்வதில் அவை அக்கறை காட்டுகின்றன.
கல்வித் துறை சார்ந்தவர்கள் மொழிபெயர்ப்பு நூல்கள் குறித்த அக்கறையைப் பெருமளவில் எடுத்துக் கொள்ளும்போது மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவருவது அதிகரிக்கும். ஆனால் அவர்களுக்காக ஒதுக்கப்படும் தொகையில் மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்கானது சொற்பமானது.
கலைச் செல்வங்களைச் சேர்க்க ""சென்றிடுவீர் எட்டு திக்கும்'' என்றார் பாரதி. ஆனால் தேசிய இனங்கள் அவர்கள் சார்ந்த படைப்புகளை வெளிக் கொணர்ந்து தங்களை அடையாளம் காட்டும் முயற்சிகளைக் கார்ப்பரேட்டுகள் தகர்த்து விடுகின்றன. இதனால் இம் முயற்சிகள் ""கடைசிப் பெட்டியாய்'' நகர்ந்து கொண்டிருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.