
புதுதில்லி,நவ.1: அனைத்திந்திய காங்கிரஸ் பேரவை (ஏ.ஐ.சி.சி.) தில்லி தல்கதோரா அரங்கில் செவ்வாய்க்கிழமை கூடுகிறது. கட்சியின் தலைவராகத் தொடர்ந்து 4-வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சோனியா காந்தி கூட்டத்துக்குத் தலைமை தாங்குகிறார்.
125-வது ஆண்டில்: காங்கிரஸ் கட்சி தொடங்கிய 125-வது ஆண்டில் இந்தப் பேரவைக் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
சி.டபிள்யு.சி.: காங்கிரஸ் காரியக்கமிட்டி (சி.டபிள்யூ.சி) புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும். இதில் 12 இடங்களுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்யலாம், 11 இடங்களுக்கு உறுப்பினர்களை நியமனம் மூலம் நியமிக்கலாம் என்று கட்சியின் அமைப்பு விதி கூறுகிறது.
ஆனால் காங்கிரஸ் கட்சியில் தேர்தல் என்பது அதிகம் கிடையாது. காரியக் கமிட்டியின் அனைத்து உறுப்பினர்களையுமே நியமிக்கும் அதிகாரத்தைக் கட்சித் தலைவர் சோனியாவுக்கு அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று தெரிகிறது.
1,000 உறுப்பினர்கள்: நாடு முழுவதிலுமிருந்து சுமார் ஆயிரம் உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். இந்தக் கூட்டத்தில் நடப்பு அரசியல் விவகாரங்கள் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும்.
ஊழல்களால் உற்சாகக் குறைவு: அரசியல்ரீதியாக காங்கிரஸ் கட்சிக்கு பலத்த பின்னடைவு என்று சொல்லத்தக்க விஷயங்களாக ஸ்பெக்ட்ரம் ஏல ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்ததில் ஊழல், மகாராஷ்டிரத் தலைநகர் மும்பையில் கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் உறவினர்களுக்கு முறைகேடாக வீடுகள் ஒதுக்கப்பட்ட ஊழல் என்று பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இடையே இந்தப் பேரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
எனவே காங்கிரஸ் கட்சி தோன்றிய 125-வது ஆண்டில் நடைபெறும் கூட்டமாக இருந்தாலும் கட்சித் தலைவர்களிடையே உற்சாகம் குறைவாகவே காணப்படுகிறது.
கேரளத்தில் வெற்றி: அதே சமயம் கட்சியின் தொண்டர்கள் மகிழ்ச்சி அடையும் நிகழ்ச்சிகளும் நடைபெறாமல் இல்லை. கேரளத்தில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியைச் சந்தித்திருக்கிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான வெற்றிகளைப் பெற்றிருக்கிறது.
மேற்கு வங்கத்திலும் இடதுசாரி முன்னணி ஆட்சி மக்களிடையே மதிப்பிழந்து செல்வாக்கிழந்து சரிவை நோக்கிச் செல்கிறது. அடுத்த பொதுத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் - காங்கிரஸ் இடையிலான கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிக்கு வரும் என்று எல்லா தரப்பினரும் கூறி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம், பிகாரில்: உத்தரப்பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் பழைய ஆதரவாளர்களான சிறுபான்மைச் சமூகத்தவரும் தாழ்த்தப்பட்ட மக்களும் மீண்டும் கட்சியை நோக்கித் திரும்பத் தொடங்கியிருக்கின்றனர்.
கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் சுற்றுப்பயணங்களும், தனித்து நின்று போட்டியிட வேண்டும் என்ற உத்தியும் நல்ல பலனைத் தரத் தொடங்கியிருக்கின்றன.
தமிழகம்: தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இளைஞர் காங்கிரûஸ வலுப்படுத்த ராகுல் எடுத்துவரும் நேரடி முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைத்து வருகின்றன. கட்சியை நோக்கி இளைஞர்கள் ஈர்க்கப்படுகின்றனர்.
காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டாலும் உலகமே வியக்கும் வண்ணம் கலை நிகழ்ச்சிகளும் விளையாட்டுப் போட்டிகளும் சர்வதேச தரத்தில் நடந்து முடிந்தன.
காஷ்மீர நிலைமை: காஷ்மீரத்தில் பிரிவினைவாதிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் தணிந்து இப்போது சுமுக நிலைமை திரும்பிக் கொண்டிருக்கிறது.
அயோத்தியில் அமைதி: நாடே கொந்தளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி இடம் யாருக்கு என்ற வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பு அனைத்து தரப்பாலும் அமைதியாக ஏற்கப்பட்டது.
ஒபாமா பாராட்டு: இந்தியாவைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள், கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று அதிபர் பராக் ஒபாமாவே அமெரிக்கர்களுக்குக் கூறும் அளவுக்கு இந்தியாவில் கல்வி வளர்ச்சியும் தகவல் தொழில்நுட்பத் துறையும் வளர்ச்சி அடைந்துள்ளன.
இளைஞர்களுக்கு வாய்ப்பு: காங்கிரஸ் கட்சியிலும் ஆட்சியிலும் இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகள் தரப்படுகின்றன. மக்களும் ராகுல், பிரியங்கா ஆகியோரின் அடக்கமான பண்பு, ஏழைகள்பால் அவர்கள் காட்டும் பரிவுகண்டு காங்கிரஸ் கட்சியை நோக்கித் திரும்புகின்றனர்.
ஜாதி அரசியலை நடத்திய கட்சிகள் குடும்ப நலனையே மையமாகக் கொண்டு செயல்படுவதால் அவர்களை நம்பிச் சென்றவர்கள் இப்போது காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர்.
தமிழகத்திலிருந்து..... தமிழகத்திலிருந்து அகில இந்திய காங்கிரஸ் பேரவைக்கு புதிய உறுப்பினர்கள் அறிவிக்கப்படாததால், தில்லி கூட்டத்தில் தமிழகப் பிரதிநிதியாக யாரும் கலந்துகொள்ள முடியாது.
ஆனால் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்ள கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சிறப்பு அழைப்பாளர்களுக்கு வாக்கு அளிக்கவோ அல்லது காரிய கமிட்டி தேர்தலில் போட்டியிடவோ உரிமை இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.