புது தில்லி, பிப்.17: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) வர்த்தகப் பிரிவான ஆந்த்ரிக்ஸ், தனியார் நிறுவனமான தேவாஸ் மல்டி மீடியா இடையிலான ஒப்பந்தம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
இரு நிறுவனங்களிடையே எதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டது, அதை ரத்து செய்ய ஏன் இவ்வளவு காலம் ஆனது என்பது வரை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.
இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இஸ்ரோ பரிந்துரை செய்த பிறகும் அதை அமல்படுத்த இத்தனை மாதங்கள் காலதாமதம் ஏன் என்பதையும் அரசு விளக்க வேண்டும் என்றார்.
இது தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தி மக்களுக்கு அதன் விவரங்களை தெளிவுபடுத்த வேண்டும். எஸ்-பாண்ட் அலைக்கற்றையில் 70 மெஹாஹெர்ட்ஸ் அளவு வரை ரூ. 1,000 கோடிக்கு தேவாஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதை தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) சுட்டிக்காட்டியள்ளார். இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவே இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் சிஏஜி அறிவுறுத்தியிருந்தது.
இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான காரணம் என்ன?. இந்த ஒப்பந்த நடைமுறையில் நிகழ்ந்த தவறு என்ன என்பதை அரசு விளக்க வேண்டும். அரசு நிறுவனங்களுடன் வெளிநாட்டு நிறுவனங்கள் கூட்டு சேர்வதற்கு பின்புற வாசலைத் திறந்து வைத்து வரவேற்பதைப் போல் அரசின் செயல்பாடு உள்ளது.
இந்நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்ட அலைக்கற்றையை கடலோரக் காவல்படை பயன்படுத்தி வந்தது. அதை தனியார் நிறுவனத்துக்கு அளிக்க முன்வந்ததன் மூலம் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
காலதாமதமான நடவடிக்கை: ஆந்த்ரிக்ஸ்-தேவாஸ் இடையிலான ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக அரசு அறிவித்துள்ளது காலம் கடந்த நடவடிக்கை என்று பொதுக் கணக்குக் குழு தலைவரும் பாஜக மூத்த தலைவருமான முரளி மனோகர் ஜோஷி குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் இன்னும் ஆராயப்பட வேண்டும் என்றே நாடாளுமன்ற குழு கருதுவதாக அவர் சொன்னார். வெறுமனே ஒப்பந்தத்தை ரத்து செய்தது மட்டும் போதுமானதல்ல. இது முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.
இத்தகைய ஒப்பந்தத்தை மேற்கொண்டது யார் என்பதை சட்ட ரீதியாக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இது போன்ற நிறுவனங்கள் குறித்த அறிக்கை பொதுக்கணக்குக் குழுவின் பரிசீலனைக்கு வராது. இந்த விவகாரத்தை விசாரிக்கலாம் என்று குழு கருதினால் அதை விசாரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.