
மும்பை, ஏப்.19: மும்பை புறநகர் ரயிலின் மேற் கூரையில் பயணம் செய்த பயணிகள் 3 பேர் உயிரிழந்தனர். அதிக கூட்டம் காரணமாக ரயிலின் ஜன்னல் மற்றும் கதவோரம் தொங்கிக் கொண்டு பயணம் செய்தவர்களில் 12 பேர் காயமடைந்தனர்.
மும்பையில் புதன்கிழமை புறநகர் ரயில் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். வேலைக்குச் செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இயக்கப்பட்ட ரயில்களின் மேல் பகுதியில் அமர்ந்தும், ஜன்னல் மற்றும், கதவுகளில் தொங்கியபடியும் பலர் பயணம் செய்ய வேண்டிய சூழல் உருவானது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இப்படி பயணம் செய்தவர்களில் சிலர் கீழே விழுந்து காயமடைந்தனர். ரயில் பாதையில் உள்ள விளக்குக் கம்பங்களில் மோதி சிலர் காயமடைந்தனர். இவ்விதம் காயமடைந்தர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் சிலர் உள் நோயாளிகளாகவும், சிலர் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர்.
ரயில் போக்குவரத்து சீரடைந்தது: இந்நிலையில் வியாழக்கிழமை ரயில் போக்குவரத்து 90 சதவீதம் சீரடைந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். குர்லா மற்றும் வித்யவிஹார் ரயில் நிலையங்களுக்கு இடையிலான சிக்னல் கேபினில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ரயில் போக்கு வரத்து புதன்கிழமை முற்றிலும் முடங்கியது. இரவு பகலாக சிக்னல் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, வியாழக்கிழமை ரயில் போக்குவரத்து சீரடைந்ததாகமத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்புத்துறை அதிகாரி வி.ஏ. மலேகோங்கர் தெரிவித்தார். நீண்ட தொலைவு ரயில்கள் எதுவும் ரத்து செய்யப்படாமல் இயக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார். புதன்கிழமை நான்கு நீண்ட தூர ரயில்களை மத்திய ரயில்வே ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
ரூ. 2 லட்சம் இழப்பீடு: ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் அளிக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் முகுல் ராய் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.