
ஆயுள் தண்டனை என்பது 14 அல்லது 20 ஆண்டுகளில் முடிவடைவதல்ல; வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆயுள் தண்டனை தொடர்பான வழக்கு ஒன்றில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் மதன் பி. லோகுர் ஆகியோரடங்கிய அமர்வு இவ்வாறு தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் மேலும் கூறியது:
ஆயுள் தண்டனை என்பதை 14 ஆண்டுகள் அல்லது 20 ஆண்டுகளில் முடிவடைவது என்று சிலர் தவறாக எண்ணிக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அவ்வாறு 14 அல்லது 20 ஆண்டுகள் தண்டனைக்காலம் முடிவடைந்தவுடன் தங்களை விடுதலை செய்து விட வேண்டும் என்று கூறுவதற்கு, சிறைக்கைதிக்கு எவ்வித உரிமையும் இல்லை.
ஆயுள் தண்டனை வாழ்நாள் முழுமைக்குமானது. ஆயுள்காலம் உள்ளவரை சிறையிலேயே கழிக்க வேண்டும்.
அதிகாரம் பெற்ற மாநில அரசானது, அந்த தண்டனையைக் குறைக்க விரும்பலாம். ஆனால், குற்றவியல் தண்டனைச் சட்டம் (சிஆர்பிசி) 433-ஏ பிரிவின்படி, 14 ஆண்டுகளுக்கும் குறைவாக, தண்டனைக்காலத்தை குறைக்க முடியாது.
சில மாநில அரசுகள் பண்டிகைகள், தலைவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏராளமான கைதிகளை மொத்தமாக விடுதலை செய்கின்றன. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும்.
மரண தண்டனை விதித்தலிலும், புதிய பார்வை தேவை. நிகழ்த்தப்பட்ட குற்றம், குற்றவாளியின் சூழல் ஆகியவற்றைப் பொருத்தே மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.