தில்லியில் பாலியல் பலாத்காரத்தில் உயிரிழந்த மாணவியின் நண்பர் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை தில்லி போலீஸார் மறுத்துள்ளனர்.
தில்லியில் பாலியல் பலாத்காரத்தில் உயிரிழந்த மாணவியின் நண்பர், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, சம்பவம் நடந்தபோது போலீஸாரின் செயல்பாடுகள் குறித்து குற்றம்சாட்டியிருந்தார்.
அதை மறுத்து சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தில்லி போலீஸ் இணை ஆணையர் விவேக் கோகியா கூறியதாவது:
பாலியல் பலாத்காரம் நடந்த அன்று போலீஸ் வாகனங்கள் தாமதமாக வந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்க்க நேரம் கடத்தியதாகவும் கூறப்படுவதில் உண்மை இல்லை. பிசிஆர் எனப்படும் காவல்துறை கட்டுப்பாட்டு அறை வாகனங்கள் போலீஸ் நிலையங்களின் கட்டுப்பாட்டில் இல்லை. அவை போலீஸ் தலைமை அலுவலகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருபவை. எனவே இந்த விஷயத்தில் போலீஸ் நிலையங்களைக் குறை கூற முடியாது.
சம்பவம் நடந்தது குறித்து டிசம்பர் 16-ஆம் தேதி இரவு 10.21-க்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. உடனே இஸட்-54 என்ற பிசிஆர் வேன் ஏற்பாடு செய்யப்பட்டு சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இது குறித்த தகவல் அறிந்தவுடன் இஸட்-74 என்ற பிசிஆர் வேன் சம்பவ இடத்துக்கு 10.27 மணிக்கு சென்றது. இஸட்-54 பிசிஆர் வேன் 10.29 மணிக்கு சம்பவ இடத்தை அடைந்தது.
பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணும் தாக்குதலுக்கு உள்ளான அவரது நண்பரும் ஆடை இல்லாமல் இருந்ததால் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து போர்வையை வாங்கிக்கொடுத்து இரவு 10.39 மணிக்கு இஸட்-54 பிசிஆர் வேன் அந்த இடத்திலிருந்து புறப்பட்டது.அவர்கள் இருவரும் சப்தர்ஜங் மருத்துவமனையில் இரவு 10.55-க்கு சேர்க்கப்பட்டனர். இந்த விவரங்கள் அனைத்தும் ஜிபிஎஸ் கருவி மூலம் அறிந்துகொள்ளப்பட்டன என்றார். அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்காமல் தொலைவில் இருந்த சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்த்தது ஏன் என கேட்டபோது,
""சட்ட வழக்குகளுக்கு உள்ளாகும் இதுபோன்ற விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கென உள்ள மருத்துவமனை என்பதாலேயே அங்கு சேர்க்கப்பட்டனர். இப்போது எங்களுடைய நோக்கமெல்லாம் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதுதான். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் வேறு எதையும் சொல்ல இயலாது'' என்றார் விவேக் கோகியா.
முன்னதாக, உயிரிழந்த மாணவியின் நண்பர் தனியார் தொலைக்காட்சிக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியல் கூறியிருந்ததாவது:
சம்பவத்தின்போது என் தோழியின் ஆடை நீக்கப்பட்டிருந்தது. எனக்கும் ஆடை இல்லை. சாலையின் ஓரத்தில் கிடந்தவாறே அருகிலிருந்தவர்களிடம் உதவி கேட்டோம். ஆனால் யாரும் உதவ முன் வரவில்லை. கார்கள், ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்களில் வந்த பலர் அந்த இடத்தில் நின்று எங்களைப் பார்த்துவிட்டு சென்றுவிட்டனர்.
45 நிமிடங்கள் கழித்தே போலீஸார் அங்கு வந்தனர். அவர்களும் ஆம்புலன்ûஸ அழைக்கவோ எங்கள் உடல்களைப் போர்த்த துணியோ தரவில்லை. வெறுமனே வேடிக்கை பார்த்துகொண்டிருந்தார்கள். தொடர்ந்து கெஞ்சிக் கேட்ட பிறகே சிலர் ஒரு போர்வையைத் தந்தனர் என்றும் பாதிக்கப்பட்ட தங்களை போலீஸார் தாமதமாகத்தான் மருத்துவமனையில் சேர்த்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.