மறைந்த மத்திய அரசு ஊழியரின் விதவைகள் மற்றும் விவாகரத்தான மகள்களும் குடும்ப ஓய்வூதியம் பெறலாம் என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
மத்திய அரசின் மற்ற அமைச்சகங்களும், துறைகளும் இது தொடர்பாக விளக்கங்கள் கேட்ட நிலையில், இது குறித்த சுற்றறிக்கையை மத்திய பணியாளர் நலன் அமைச்சகம் கடந்த வாரம் அனுப்பியுள்ளது.
அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
மத்திய அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரரின் வாழ்க்கைத் துணையோ அல்லது பெற்றோரைச் சார்ந்த வாரிசோ குடும்ப ஓய்வூதியம் பெறத் தகுதியானவர் ஆவார்.
அகவிலைப்படியுடன் கூடிய குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியத்துக்கு சமமாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ வருவாய் ஈட்டாத வாரிசே பெற்றோரைச் சார்ந்தவராக கருதப்படுவார்.
எனவே, அரசு ஊழியர் இறப்பின்போது அல்லது அவரது வாழ்க்கைத் துணையின் இறப்பின்போது, எது பிந்தையதோ, அதன் பின்னர் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான மற்ற நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் வாரிசுதாரரே குடும்ப ஓய்வூதியம் பெற முடியும்.
அதேபோன்று, தனது பெற்றோர் இறந்த பின்னர் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான மற்ற நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும்பட்சத்தில் விதவையான அல்லது விவாகரத்து பெற்ற மகள்களும் குடும்ப ஓய்வூதியம் பெறமுடியும்.
விதிமுறைகளின்படி, அரசு ஊழியர் இறந்த பின் அல்லது ஓய்வூதியதாரர் மறுமணம் புரிந்த பின், 25 வயதுக்குள்பட்ட அவர்களது திருமணமாகாத வாரிசு குடும்ப ஓய்வூதியம் பெற முடியும்.
மாற்றுத் திறனாளியான வாரிசுதாரருக்கு வாழ்நாள் முழுவதுமும், அதன் பின்னர் 25 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத, விதவையான, விவாகரத்து பெற்ற மகள்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.
விதவைகளான அல்லது விவாகரத்து பெற்ற மகளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்குவது குறித்த விதிமுறைகள் ஏற்கெனவே உள்ளன.
நிலுவையில் உள்ள மனுக்களைப் பொருத்தவரை, தகுதியானவர்களுக்கு 2004 ஆகஸ்ட் 30-ம்தேதி முதல் குடும்ப ஓய்வூதியம் வழங்கலாம் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.