சென்னை போலீஸிடம் இருந்து தப்பியவர் யாசின் பட்கல்

இந்திய - நேபாள எல்லையில் பிடிபட்ட பயங்கரவாதி யாசின் பட்கல் 2011 ஆம் ஆண்டில் சென்னை சேலையூரில் பதுங்கியிருந்தபோது போலீஸாரிடம் சிக்காமல் தப்பியவர் எனத் தெரிய வந்துள்ளது.

இந்திய - நேபாள எல்லையில் பிடிபட்ட பயங்கரவாதி யாசின் பட்கல் 2011 ஆம் ஆண்டில் சென்னை சேலையூரில் பதுங்கியிருந்தபோது போலீஸாரிடம் சிக்காமல் தப்பியவர் எனத் தெரிய வந்துள்ளது.

இது குறித்து மத்திய உளவுத் துறை உயர் அதிகாரி கூறியது:

இரு முறை தப்பியவர்: "2008 ஆம் ஆண்டு தில்லியில் இருந்து தலைமறைவாகி மேற்கு வங்கத்தில் நடமாடிய யாசின் பட்கலை அம்மாநில காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். ஆனால், அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாததால் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

இதேபோல, 2011 ஆம் ஆண்டு நவம்பரில் சென்னை சேலையூர் பகுதியில் அப்துல் ரகுமான் என்பவரது வீட்டில் யாசின் பட்கல் பதுங்கியிருப்பதாக மத்திய உளவுத் துறைக்குத் தகவல் கிடைத்தது. அந்த வீட்டுக்கு மத்திய உளவுத் துறை, தில்லி போலீஸ், சென்னை போலீஸ் அதிகாரிகள் செல்வதற்குள் அங்கிருந்து யாசின் பட்கல் தப்பித்து விட்டார்' என்று உள்துறை உயரதிகாரி கூறினார்.

யாசின் பட்கல் யார்? யாசின் பட்கலின் நிஜப் பெயர் சையது அகமது ஜரார். கர்நாடகத்தின் பட்கல் பகுதியைச் சேர்ந்தவர். பொறியியல் பட்டம் படித்தவர்.

புணேவில் ஜெர்மன் பேக்கரியில் 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் யாசின் பட்கல், ரியாஸ் பட்கல் உள்ளிட்டோர் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. வெளிநாட்டினர் உள்பட 17 பேர் அந்த சம்பவத்தில் உயிரிழந்தனர். இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக 2010 ஆம் ஆண்டில் இந்தியாவும் 2011 ஆம் ஆண்டில் அமெரிக்காவும் அறிவித்தன. அதைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி மும்பையில் உள்ள மேற்கு தாதர், ஜாவேரி பஜார், காவேரி ஹவுஸ் பகுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் யாசின் பட்கல், அவரது கூட்டாளிகள் தஹசீன் அக்தர் வாசிம் அக்தர் ஷேக் (23), அசதுல்லா அக்தர் (26), வகாஸ் என்கிற அகமது (26) ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்த மூவர் குறித்தும் தகவல் தெரிவிப்போருக்கு தலா ரூ. 10 லட்சம் பரிசுத் தொகையை மகாராஷ்டிர மாநில பயங்கரதவாதத் தடுப்புப் படை அறிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி தஹசீன் நீங்கலாக மற்ற மூவரும் மும்பையில் உள்ள முக்கிய சாலையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக வழக்கு நிலுவையில் உள்ளது.

தில்லி உயர் நீதிமன்ற வளாக வெடிகுண்டு தாக்குதல் உள்பட மூன்று பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களில் யாசின் பட்கல் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவரது சகோதரர் ரியாஸ் பட்கலும் இக்பால் பட்கலும் தற்போது பாகிஸ்தானின் கராச்சியில் வசித்து வருவதாக மத்திய உளவுத் துறை சந்தேகிக்கிறது.

என்ஐஏ குற்றப்பத்திரிகை: கடந்த வாரம் தில்லி குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதில் யாசின் பட்கலுக்கு உள்ள பயங்கரவாதத் தொடர்புகளை அந்த அமைப்பு பட்டியலிட்டுள்ளது. தில்லி, பிகாரின் தர்பங்கா, மும்பை, கர்நாடகத்தின் பட்கல், ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் உள்ள கூட்டாளிகள் மூலம் அங்குள்ள இளைஞர்களுக்கு "ஜிஹாத்' (புனிதப் போர்) பயிற்சி அளிக்க யாசின் பட்கல் மூளையாக செயல்பட்டார்' என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியன் முஜாஹிதீன் இயக்கம் மீதான வழக்குகள்

2006 மார்ச் 7: வாராணசி குண்டு வெடிப்பு

2006 ஜூலை 11: மும்பை தொடர் குண்டு வெடிப்பு

2007 நவம்பர் 23: வாராணசி, ஃபைசாபாத், லக்னௌ நீதிமன்றங்களில்

நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்

2007 ஆகஸ்ட் 25: ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு சம்பவங்கள்

2008 மே 13: ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு

2008 ஜூலை 26: ஆமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு

2010 பிப்ரவரி 13: புணே ஜெர்மன் பேக்கரி வெடிகுண்டு தாக்குதல்

2010 ஏப்ரல் 17: பெங்களூரு சின்னசாமி விளையாட்டரங்க வெடிகுண்டு

தாக்குதல்

2011 ஜூலை 13: மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவங்கள்

2011 செப்டம்பர் 7: தில்லி உயர் நீதிமன்ற வளாக வெடிகுண்டு தாக்குதல்

விசாரிக்க கர்நாடகம், குஜராத் போலீஸ் தீவிரம்

கர்நாடகம், குஜராத் மாநிலங்களில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களில் யாசின் பட்கலுக்கு தொடர்பு இருப்பதால், அவரை விசாரணைக்கு தங்களிடம் ஒப்படைக்க சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் கோருவதற்கு இரு மாநில காவல் துறையும் திட்டமிட்டுள்ளன.

இதுதொடர்பாக கர்நாடக காவல் துறை இயக்குநர் லால் ரொகுமா பசாவ் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:

பெங்களூரில் இந்தியன் முஜாஹிதீன் நடத்திய பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக அவரிடம் விசாரிக்க நீதிமன்றம் மூலம் அனுமதி பெறப்படும்' என்றார்.

குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரக் காவல்துறை இணை ஆணையர் ஏ.கே. சர்மா கூறியது:

யாசின் பட்கலை எங்களிடம் விசாரணைக்கு ஒப்படைக்கும்படி நீதிமன்றத்தில் கோருவோம்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com