ஆபத்து நேரத்தில் பெண்களுக்கு உதவும் நவீன காலணி: பள்ளி மாணவிகள் உருவாக்கம்

ஆபத்தில் சிக்கிய பெண்களுக்கு உதவும் வகையில், காலணியுடன் இணைந்த புதிய கருவியை தாணேவைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் 4 பேர் கண்டறிந்துள்ளனர்.

ஆபத்தில் சிக்கிய பெண்களுக்கு உதவும் வகையில், காலணியுடன் இணைந்த புதிய கருவியை தாணேவைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் 4 பேர் கண்டறிந்துள்ளனர்.

தாணே, மராத்தா மந்திர் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி சித்தார்த் வாணி, ஏ.கே. ஜோஷி பள்ளி 7ஆம் வகுப்பு மாணவிகள் சின்மயி மராத்தே, சாம்பவி ஜோஷி, மவுண்ட் மேரிஸ் கெல்லர் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி சின்மயி ஜாதவ் ஆகிய 4 மாணவிகளும் இந்த நவீன காலணியைக் கண்டறிந்துள்ளனர்.

இவர்களது கண்டுபிடிப்பில், வழக்கமாக பெண்கள் அணியும் காலணியின் அடிப்பாகத்தில் சில சிறு கருவிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. காலணியை, தரையில் இரு முறை உதைத்ததும் அதிலுள்ள கருவிகள் 5 வோல்ட் மின்சக்தியுடன் செயல்படத் தொடங்கும்.

உடனடியாக, அப்பெண்ணின் கைப்பை அல்லது பர்ஸில் ஏற்கெனவே வைக்கப்பட்டுள்ள, வயர்லெஸ் எச்சரிக்கை மணி அடிக்கத் தொடங்கும்.

அத்துடன், பதிவு செய்யப்பட்ட சில செல்போன் எண்களுக்கு எஸ்.எம்.எஸ்.கள் தானாக அனுப்பப்பட்டு விடும்.

இதன் மூலம், அபாய சூழலில் இருக்கும் பெண் உள்ள இடத்தை எளிதாகக் கண்டறிந்து அவரை மீட்க முடியும்.

மேலும், இந்த காலணியின் அடிப்பாகத்தில் இணைக்கப்பட்டுள்ள நுண் கருவிகள் செயல்படத் தொடங்கிய பின், எதிராளியை அப்பெண் உதைக்கும் போது, காலணியின் அடியில் பொருத்தப்பட்டுள்ள உலோக ஆணியில் இருந்து மின்சாரம் எதிராளியின் மீது பாய்ச்சப்பட்டு, அவருக்கு மின்அதிர்ச்சி ஏற்படும்.

இது கடந்த மாதம் தாணேவில் நடைபெற்ற மாணவர் கண்காட்சியில் இந்தக் கண்டுபிடிப்பு காட்சிக்கு வைக்கப்பட்டது. அது தற்போது மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொடுக்கும் தனியார் அமைப்பின் உதவியுடன் இந்தக் காலணியை 4 மாணவிகளும் உருவாக்கியுள்ளனர்.

பெப்பர் ஸ்பிரே, மிளகாய்த்தூள் என பல்வேறு பாதுகாப்புக் கருவிகள் இருந்த போதும், இந்த காலணி மிகவும் உபயோகமாக இருக்கும்.

"செல்போன் உள்ளிட்ட எந்தப் பொருளையும் மறந்து விட்டுச் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், காலணி அணியாமல் எந்தப் பெண்ணும் வீட்டை விட்டு வெளியேற மாட்டார் என்பதால் இது மிகவும் பாதுகாப்பான சாதனம்' என்று அந்த மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com