வெடிகுண்டு வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிப்பு

பெங்களூரில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெடிகுண்டு வைத்திருந்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

பெங்களூரில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெடிகுண்டு வைத்திருந்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

பெங்களூரில் கடந்த 2002-ஆம் ஆண்டு பிரேசர் டவுன் பகுதியில், வெடிகுண்டு வைத்திருந்ததாக பெங்களூரைச் சேர்ந்த விஜயமூர்த்தி, சிவக்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் மொத்தம் 15 பேர் மீது வெடிபொருள், வெடிகுண்டு வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இவர்கள் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மற்றும் கர்நாடகத் தமிழ் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின்படி, ஜான் செல்வராஜ், டி.குமார், சீனிவாசன், போதேந்தர் ரவி, ஏ.பி.ராஜா, சத்யராஜ், முருகன், குணசீலன், அல்சூர் ரவி, திருச்சியைச் சேர்ந்த பேராசிரியர் நெடுஞ்செழியன், புதுக்கோட்டையைச் சேர்ந்த முத்துக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

முருகானந்தம், இளங்கோவன் ஆகியோர் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் சிலர் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளும், சிலர் 5 ஆண்டுகளும், ஒருவர் 7 ஆண்டும் சிறையில் இருந்துள்ளனர்.

பின்னர், கர்நாடக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்து, ஜாமீன் பெற்றனர். இவர்களில் விஜயமூர்த்தி, ஏ.பி.ராஜா, முத்துக்குமார் ஆகியோர், வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே இறந்து விட்டனர்.

இந்த வழக்கு, பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்த வழக்கு தனி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் 165 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் 72 பேரின் சாட்சியம் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை 18 நீதிபதிகள் விசாரித்துள்ளனர். கடைசியாக, நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா விசாரித்து வந்தார். இந்த வழக்கின் தீர்ப்பை வியாழக்கிழமை நீதிபதி பாலகிருஷ்ணா வழங்கினார்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள 15 பேர் மீதான குற்றத்திற்கு போதிய ஆதாரம் இல்லை. அதனால் இவர்களை இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். தலைமறைவாக இருக்கும் இருவர் மற்றும் இறந்து விட்ட மூவர் தவிர, மற்ற 10 பேரும் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜராகியிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com