பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம்: மத்திய அரசு

பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்) செலவினத்தைக் குறைக்கும் வகையில், அதன் ஊழியர்கள் ஒரு லட்சம் பேருக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டம் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம்: மத்திய அரசு
Updated on
1 min read

பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்) செலவினத்தைக் குறைக்கும் வகையில், அதன் ஊழியர்கள் ஒரு லட்சம் பேருக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டம் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் குழுத் தலைவர் டாக்டர் மைத்ரேயன், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், நஷ்டத்தில் இயங்கி வரும் பிஎஸ்என்எல்லுக்கு செலுத்த வேண்டிய தொலைத்தொடர்பு சேவைக்குரிய நிலுவைக் கட்டணத்தை வசூலிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ரவிசங்கர் பிரசாத் வெள்ளிக்கிழமை அளித்த எழுத்துப்பூர்வ பதில் வருமாறு:

இந்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி பிஎஸ்என்எல்லுக்கு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.1,206.65 கோடி அளவுக்கு நிலுவைக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அதில், ரூ.1,053.84 கோடிக்குரிய கட்டணம் தொடர்பாக தனியார் நிறுவனங்கள் சில முறையீடுகளை செய்துள்ளன.

நிலுவைக் கட்டணத்தை வசூலிக்க தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து வங்கி உத்தரவாதம் பெறுவது, மத்தியஸ்த முறையில் பேச்சு நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றில் பிஎஸ்என்எல் ஈடுபட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் தரைவழி தொலைபேசி சேவையில் இருந்து செல்போன் சேவைக்கு வேகமாக மாறி வருவதால் பிஎஸ்என்எல் சேவை எண்ணிக்கை சரிவடைந்து வருகிறது. தொலைத் தொடர்புத் துறையில் கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், போட்டியை சமாளிக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதியை விரிவுபடுத்த தேவைப்படும் முதலீடுகள் பிஎஸ்என்எல் வசம் இல்லை. அதன் ஊழியர்களுக்கான செலவினம் கூடுதலாக உள்ளது.

பிஎஸ்என்எல் புனரமைப்பு நடவடிக்கையாக, அந்த நிறுவனம் மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய ரூ.1,411 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல்லின் வளங்களை உரிய முறையில் பயன்படுத்தவும், அதன் ஊழியர் செலவினத்தைக் கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைந்த புனரமைப்புத் திட்டத்தை மத்திய அரசு வகுத்து வருகிறது. பிஎஸ்என்எல் நிர்வாகமும் தனியாக புனரமைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, சுமார் ஒரு லட்சம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டத்தை அந்த நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் மூலம் ஊழியர்களுக்கான செலவினம் குறையும். இந்தத் திட்டம் தொடர்பான பரிந்துரைகளை மத்திய அமைச்சர்கள் குழு ஆய்வு செய்த பிறகு, பிஎஸ்என்எல்லுக்கு தேவைப்படும் நிதியுதவியை மத்திய அரசு வழங்கும் என்றார் ரவிசங்கர் பிரசாத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com