

தேசிய அளவில் 16ஆவது மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், தமிழகத்தில் அ.தி.மு.க.வைத் தவிர, ஏனைய கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பது இருக்கட்டும், கூட்டணியைக்கூடத் தீர்மானிக்க முடியாத நிலையில்தான் தொடர்கின்றன. அதிகாரபூர்வ எதிர்க்கட்சியான தே.மு.தி.க., எந்த அணியில் சேர்வது, யாருடன் கூட்டணி அமைப்பது என்று முடிவெடுக்க முடியாமல் குழம்புகிறது என்றால், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வோ தன்னுடன் யார் கைகோக்கப் போவது என்றுகூடத் தெரியாமல் தவிக்கிறது.
குறிப்பாக, காங்கிரஸ் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ், தேசிய அளவில் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்க இருப்பதாக, எல்லா கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், தமிழகத்திலும் சீமாந்திராவிலும் காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வைப்புத் தொகையை (டெபாசிட்) தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போனால் கட்சியின் மரியாதை என்னாகும் என்பதுதான் காங்கிரஸின் கவலைக்குக் காரணம்.
""ஆந்திர மாநிலத்தில் சீமாந்திரா பகுதியில் எந்தவொரு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி வைப்புத் தொகையைப் பெறுமளவுகூட வாக்குகள் பெறாது என்பது ஊரறிந்த உண்மை. தமிழகத்திலும் சரி, தனித்து போட்டியிட்டால் காங்கிரஸின் நிலைமை அநேகமாக அதுவாகத்தான் இருக்கும். சீமாந்திராவின் 25 தொகுதிகளிலும், தமிழகத்தின் 39 தொகுதிகளிலுமாக 64 தொகுதிகளிலும் வைப்புத் தொகையை காங்கிரஸ் இழப்பது என்பது, தேசிய அளவிலான தோல்வியை மேலும் பூதாகரமாக்கிக் காட்டும் என்பதுதான் காங்கிரஸ் தலைமையின் கவலைக்குக் காரணம்'' என்று விளக்கினார் அரசியல் விமர்சகர் விவேக் சிப்பர்.
""காங்கிரஸýடன் கூட்டணி அமைவதால் தி.மு.க.வுக்குத்தான் அதிகம் லாபமே தவிர, காங்கிரஸýக்கு அல்ல. இது தெரியாமல் அவர்கள் திருச்சி மாநாட்டில் காங்கிரஸýடன் கூட்டணி வேண்டாம், கூடாது என்றெல்லாம் பேசியது வேடிக்கையாக இருக்கிறது. காங்கிரஸ் - தே.மு.தி.க. கூட்டணி அமைந்தால் தி.மு.க. மூன்றாவது அல்லது நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிடும். அப்படி ஒரு கூட்டணி அமைவதுதான் காங்கிரஸýக்கும் நல்லது, தே.மு.தி.க.வுக்கும் நல்லது'' என்று கருத்துத் தெரிவித்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன்.
இளங்கோவனின் கருத்தைத்தான் பல முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் பிரதிபலிக்கிறார்கள் என்றாலும், ப. சிதம்பரம், ஜி.கே. வாசன் உள்ளிட்ட தலைவர்கள், தி.மு.க.வும் கூட்டணியில் இருந்தால் மட்டுமே வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்த முடியும் என்று நினைக்கிறார்கள். கட்சித் தலைமையும் இதே மனநிலையில்தான் இருப்பதாகத் தெரிகிறது.
""காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சி வைப்புத் தொகையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மட்டும் கூட்டணி அமைக்க முடியாது. குறைந்தது ஆறு அல்லது ஏழு இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும். தி.மு.க.வும் தே.மு.தி.க.வும் கூட்டணியில் இருந்தால் மட்டும்தான் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்த முடியும்'' என்பது அவர்களது வாதம். இந்த வாதத்தை மக்களவை உறுப்பினர்களாக இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் அனைவருமே வழிமொழிகிறார்கள்.
ஆனால், காங்கிரஸ் தி.மு.க.விடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் இன்னொரு வாதத்தை முன்வைக்கிறார்கள். ""கீழ்மட்ட அளவில் தி.மு.க. தொண்டர்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இணக்கமான சூழ்நிலை இல்லை. கூட்டணி அமைத்தாலும், தி.மு.க.வினர் காங்கிரஸýக்கும், காங்கிரஸ்காரர்கள் தி.மு.க.வுக்கும் வாக்களிப்பார்களா என்பது சந்தேகம்தான்'' என்பது இவர்கள் வாதம்.
அதற்கு அவர்கள் 2ஜி அலைக்கற்றை ஊழலைக் காரணமாக்குகிறார்கள். ""கடந்த தேர்தலில் 2ஜி ஊழல் இந்த அளவுக்குப் பெரிய பிரச்னையாக இருக்கவில்லை. இணைந்து பணியாற்றினோம். இப்போது தி.மு.க.வினர், ஆ. ராசா, கனிமொழியின் கைதுக்கும், 2ஜி முறைகேட்டின் பழிக்கும் காங்கிரஸ்தான் காரணமென்றும், காங்கிரஸ் தொண்டர்கள் தி.மு.க.வால்தான் மன்மோகன் அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியும் அவப்பெயரும் ஏற்பட்டது என்றும் பரஸ்பரம் கருதுகிறார்கள். அதனால் இந்தக் கூட்டணி பலமாக அமையாது. அதேபோல, தி.மு.க.வினர் தே.மு.தி.க. வேட்பாளர்களுடன், அ.தி.மு.கவினர் இணைந்து செயல்பட்டது போல பணியாற்ற மாட்டார்கள். நடிகர் கட்சி என்றுதான் பார்ப்பார்கள். தி.மு.க.வுக்கு வேண்டுமானால் காங்கிரஸ், தே.மு.தி.க. கூட்டணி பயன்படுமே தவிர எங்களுக்கு பயனளிக்காது'' என்பது அவர்கள் வாதம்.
தி.மு.க.வில் காங்கிரஸýடன் கூட்டணி அமைப்பதற்கு கடுமையான எதிர்ப்பு காணப்படுகிறது. கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் தே.மு.தி.கவுடனான கூட்டணிக்குத் தயாராக இருக்கிறாரே தவிர, காங்கிரஸ் தேவையில்லை என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். காங்கிரஸýடன் "கை' கோப்பதால், தி.மு.க.வுக்குக் கிடைக்க இருக்கும் வாக்குகளும் கிடைக்காமல் போய்விடும் என்பது அவரது கருத்து.
""தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸýம், தே.மு.தி.க.வும் இணைந்தால், எங்கள் கூட்டணி வலுவான கூட்டணி என்கிற தோற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில், காங்கிரஸால் கிடைக்கும் வாக்குகளைவிட, காங்கிரஸ் எதிர்ப்பால் இந்தக் கூட்டணி இழக்கும் வாக்குகள் அதிகமாக இருக்கக் கூடும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தாலே போதும். அந்தக் கூட்டணி வலுவான கூட்டணியாகி விடும். கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த மனிதநேய மக்கள் கட்சியும், புதிய தமிழகமும் ஏற்கெனவே தி.மு.க. கூட்டணிக்கு வந்துவிட்ட நிலையில், தே.மு.தி.க.வும் எங்கள் கூட்டணியில் இருந்தால், விரல் விட்டு எண்ணக் கூடிய தொகுதிகளில்தான் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்பது எனது தனிப்பட்ட கருத்து'' என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரின் பார்வை.
தே.மு.தி.க.வைப் பொருத்தவரை, நேரடியாகத் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கத்
தயாராக இல்லை; காங்கிரஸýடன் மட்டுமே கூட்டணி என்று ஏற்பட்டால், அந்தக் கூட்டணி மிக மோசமான பின்னடைவை சந்திக்கக் கூடும் என்றும் பயப்படுகிறது. அகில இந்திய ரீதியில் காங்கிரஸýக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயரால், தே.மு.தி.கவும் பாதிக்கப்படலாம் என்கிற அச்சமும் இருக்கிறது.
""தே.மு.தி.க.வின் வாக்கு வங்கி 9% என்று வைத்துக் கொண்டால், அதில் 3% மட்டும்தான் விஜயகாந்தின் ரசிகர்கள், அனுதாபிகளின் வாக்கு. தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்று என்பதால் 3%, அ.தி.மு.க.வின் இன்றைய தலைமையை விரும்பாத, அல்லது அ.தி.மு.க.வில் தங்களுக்கு உரிய இடம் கிடைக்காதவர்கள் 3% என்று ஏனைய 6% தே.மு.தி.க. வாக்குகளைப் பிரிக்கலாம். தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. நேரிடையாகவோ, மறைமுகமாகவோ சேர்ந்தால் இந்த 6% வாக்குகள், அ.தி.மு.க.வுக்கும், பா.ஜ.க. தலைமையிலான மூன்றாவது அணிக்கும் போய்விடும். அ.தி.மு.க. அணியில் சேர்ந்தபோது விஜயகாந்த் அந்த அணிக்கு பலம் சேர்த்ததுபோல, தி.மு.க. அணிக்கு பலம் சேர்க்க மாட்டார்'' என்பது தனது பெயரை வெளியிட விரும்பாத மு.க. அழகிரியின் ஆதரவாளரான முக்கியமான தி.மு.க. தலைவர் ஒருவரின் கருத்து.
மேலும், தி.மு.க.வுடன் கூட்டணிக்குத் தே.மு.தி.க. தயாராகிவிட்டால், விஜயகாந்த் தனது முதலமைச்சர் கனவை மறந்துவிட வேண்டியதுதான் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ""தி.மு.க.வுடன் சேர்ந்தால் கட்சி காப்பாற்றப்படும்; சேராவிட்டால் முதல்வர் கனவு காப்பாற்றப்படும்'' என்று அவருக்கு ஆலோசனை கூறுபவர்களின் வாதத்தை பொறுமையாகக் கேட்டுக் கொள்ளும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் இணையத் தயங்குவதற்கு இன்னொரு காரணமும் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்தால் வெற்றி உறுதி என்று சொல்லிவிட முடியாத நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து தோல்வியைத் தழுவினாலும்கூடத் தவறில்லை என்று விஜயகாந்த் கருதுவதாகச் சொல்கிறார்கள். தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்புப் பிரகாசமாக இருக்கும் நிலையில், பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியாக இருப்பதால், அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தே.மு.தி.க. வலுவான கட்சியாக உருவெடுக்கும் என்பதுதான் அதற்குக் காரணம்.
பா.ஜ.க. கூட்டணியில் சில மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற முடிந்து, மத்திய அமைச்சரவையிலும் இடம்பெற முடியும் என்பதுதான் விஜயகாந்தை காங்கிரஸின் வற்புறுத்தலுக்கும், தி.மு.க.வின் சார்பில் விடுக்கப்படும் அழைப்புக்கும் இணங்காமல் இருக்கச் செய்கிறது என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
கட்சியையும் காப்பாற்றியாக வேண்டும், தனது முதல்வர் கனவும் கலைந்துவிடக் கூடாது என்கிற தர்மசங்கடம்தான் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் தயக்கத்திற்கும், முடிவெடுக்காமல் இழுத்தடிக்கும் போக்குக்கும் காரணம் என்று தெரிகிறது.
மிகப்பெரிய கலக்கத்தில் இருப்பது காங்கிரஸ்தான். கூட்டணி பலமாக அமையாவிட்டால் அத்தனை இடங்களிலும் வைப்புத் தொகையை இழந்து படுதோல்வியை காங்கிரஸ் சந்திக்க நேரிடும். அது அகில இந்திய ரீதியில் கட்சியைக் கேலிப் பொருளாக்கிவிடும். அதனால்தான் என்ன விலை கொடுத்தாவது தனது மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளத் துடிக்கிறது காங்கிரஸ்.
தனித்து விடப்படுவோமோ என்கிற கலக்கத்தில் காங்கிரஸýம், தே.மு.தி.க. கூட்டணியில் இணைய வேண்டுமே என்கிற தவிப்பில் தி.மு.க.வும், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்து தனக்கு இருக்கும் வாக்கு வங்கியையும் இழந்து விடுவோமோ என்கிற தயக்கத்தில் தே.மு.தி.க.வும் தொடர்கின்றன.
""புலி, ஆடு, புல்லுக்கட்டு கதைதான் நினைவுக்கு வருகிறது!'' - என்று ஒருவர் சத்தியமூர்த்திபவனில் சலித்துக் கொண்டார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.