தேர்தல் நேர சிந்தனைகள்...

16ஆவது மக்களவைக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 12ஆம் தேதி வரை ஒன்பது கட்டங்களாக 35 நாள்கள் நடத்தப்பட இருக்கிறது.
தேர்தல் நேர சிந்தனைகள்...

16ஆவது மக்களவைக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 12ஆம் தேதி வரை ஒன்பது கட்டங்களாக 35 நாள்கள் நடத்தப்பட இருக்கிறது. இந்தப் பொதுத் தேர்தலில் பங்கு பெறும் வாக்காளர்களின் எண்ணிக்கை, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றின் மொத்த மக்கள் தொகையைவிட அதிகம் என்கிறபோது, இந்திய மக்களவைக்கான தேர்தலின் பிரம்மாண்டம் புரியும்.

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 545. இதில் ஆங்கிலோ இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். ஏனைய 543 உறுப்பினர்கள் 18 வயதுக்கு மேற்பட்ட இந்தியக் குடியுரிமை பெற்றவர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அப்படித் தேர்ந்தெடுக்கப்படும் 543 மக்களவை உறுப்பினர்களில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு பெற்றவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடியரசுத் தலைவரால் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்படுகிறார்.

இதுவரை இந்தியக் குடியரசு சந்தித்த 15 மக்களவைகளில், 13 பிரதமர்கள் தலைமைப் பொறுப்பு வகித்திருக்கிறார்கள். அவர்களில் குல்சாரிலால் நந்தா 1964லும், 1966லும் இரண்டு முறை தலா 13 நாள்கள் பண்டித

ஜவாஹர்லால் நேருவின் மறைவுக்குப் பின்னும், லால்பகதூர் சாஸ்திரியின் மறைவுக்குப் பின்னும் இடைக்காலப் பிரதமராகப் பதவி வகித்தார்.

இந்தியாவின் ஐந்தாவது பிரதமராக ஜூலை 28, 1979இல் பதவி ஏற்ற சரண்சிங் 170 நாள்கள் மட்டுமே பதவி வகித்தார் என்பது மட்டுமல்ல, ஒரு தடவை கூட நாடாளுமன்றத்தை சந்திக்காத பிரதமர் என்கிற பெருமைக்கும் உரியவர்.

அவருக்கு அடுத்தபடியாகக் குறைந்த நாள்களே பதவி வகித்தவர் சந்திரசேகர். 1990ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் நாள் பிரதமராகப் பதவி ஏற்ற சந்திரசேகர் 223 நாள்கள் மட்டுமே பதவி வகித்தார். மக்களவை உறுப்பினராக இல்லாத ஒருவர் பிரதமராகத் தொடர்ந்து இரண்டு முறை, அதாவது 10 ஆண்டுகள், பதவி வகித்தது தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மட்டுமே!

இந்தியக் குடியரசின் முதல் தேர்தல் 1951ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி தொடங்கி 1952 பிப்ரவரி 21ஆம் தேதி வரை பல கட்டங்களாக நடந்தது. மொத்தமுள்ள 489 இடங்களில் 364 இடங்களை பண்டித ஜவாஹர்லால் நேருவின் தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் கைப்பற்றியது. பதிவான வாக்குகள் 45.7%

21 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வாக்குரிமை தரப்பட்டு நடந்த அந்த முதல் பொதுத் தேர்தல் பல சரித்திரங்களைப் படைத்தது; விசித்திரங்களையும் கண்டது. 1952இல் இந்தியாவின் நிலைமை என்ன தெரியுமா? இந்திய மக்கள்தொகையில் பத்தில் எட்டு பேருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. பாதிக்கும் அதிகமான பேருக்கு இரண்டு வேளை உணவு உண்ணும் வசதி கிடையாது. அந்த நிலையிலும் அத்தனை பேருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது சாதனையா இல்லை அப்படி இருந்தும் இந்தியா கடந்த 62 ஆண்டுகளாக நாடாளுமன்ற ஜனநாயகம் தடம் புரண்டு விடாமல் காப்பாற்றியது பெருமையா, சொல்லத் தெரியவில்லை.

1952 பொதுத் தேர்தலில் சுயேச்சைகள் அல்லாமல் 52 கட்சிகள் போட்டியிட்டன.

ஆனால் அதில் 21 கட்சிகளின் வேட்பாளர்களால் மட்டுமே வெற்றி பெற்று மக்களவையில் இடம்பிடிக்க முடிந்தது.

அதுவரை பண்டித நேருவின் அமைச்சரவையில் அங்கம் வகித்த பாபா சாகேப் அம்பேத்கரும், சியாம பிரசாத் முகர்ஜியும் தனிக்கட்சி அமைத்து காங்கிரஸýக்கு எதிராகப் போட்டியிட்டனர். பாபா சாகேப் அம்பேத்கரின் பட்டியலின மக்கள் கூட்டமைப்பு (பின்னால் குடியரசுக் கட்சி) 2 இடங்களிலும், சியாம பிரசாத் முகர்ஜியின் ஜனசங்கம் 3 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதுமட்டுமல்ல, மும்பை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட, இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சராக இருந்து வடிவம் தந்த பாபா சாகேப் அம்பேத்கர், தோல்வியைத் தழுவினார் என்பதுதான் வேதனை.

ஆச்சார்ய கிருபாளனியின் கிஸான் மஸ்தூர் பிரஜா பரிஷத், ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராம் மனோகர் லோகியா ஆகியோரின் தலைமையில் இயங்கிய சோஷலிஸ்ட் கட்சி போன்றவையும் காங்கிரஸை எதிர்த்துக் களமிறங்கின. 12 இடங்களில் சோஷலிஸ்ட் கட்சியும், 9 இடங்களில் கிஸான் மஸ்தூர் பிரஜா பரிஷத்தும் வெற்றி பெற்றன என்றாலும், 16 இடங்களில் வென்ற எஸ்.ஏ. டாங்கே தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான் பிரதான எதிர்க்கட்சியாக இயங்கியது.

முதலாவது பொதுத் தேர்தலில், மொத்த வாக்காளர்கள் 17.32 கோடியில் வாக்களித்தவர்கள் 10.59 கோடி பேர் மட்டுமே. நடக்க இருக்கும் 16ஆவது மக்களவைக்கான தேர்தலில் முதன் முறையாக வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையே 10 கோடியை நெருங்கும் என்று தோன்றுகிறது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையோ 81 கோடியாக இருக்கும். மக்கள்தொகைப் பெருக்கத்தின் தாக்கம் தலைசுற்ற வைக்கிறது.

இன்றைய நிலையில், இந்திய மக்கள் தொகையில் 65% பேர் 35 வயதுக்குக் கீழே உள்ளவர்கள். அதுமட்டுமா! வாக்களிக்கப் போகும் வாக்காளர்களில் 18 முதல் 23 வயதுக்கு உள்பட்டவர்கள் மட்டுமே 14%. இந்தப் பதினான்கு விழுக்காடு வாக்காளர்கள் ஏதாவது ஒரு கட்சிக்கு ஒட்டுமொத்தமாகவோ அல்லது கணிசமாகவோ வாக்களிக்கத் தலைப்பட்டால் அது அந்தக் கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திவிடும் வலிமையுடையது.

65% வாக்காளர்களுக்கு, அதிலும் குறிப்பாக 23 வயதுக்குக் கீழேயுள்ள 14% இளைய தலைமுறை வாக்காளர்களுக்கு அரசியலைப் பற்றியும், அரசியல்வாதிகள் பற்றியும் காணப்படும் எண்ணம், அது அயோக்கியர்களின் கூடாரம், ஊழலின் ஊற்றுக்கண் என்பதாகத்தான் இருக்கிறது.

ஜாதிய அரசியல், அரசு நிர்வாகத்தின் மெத்தனம், அரசியல்வாதிகள் அள்ளி வீசும் வாக்குறுதிகள் இவற்றால் எல்லாம் எரிச்சலும் கோபமும் அடைந்திருக்கும் இந்த இளம் தலைமுறை முதல் தடவை வாக்காளர்கள், 2014 பொதுத் தேர்தலின் முடிவுகளை நிர்ணயிக்கப் போகிறார்கள் என்றும், பிரிவினைவாத, வாக்கு வங்கி அரசியல் போக்கை முறியடிக்கப் போகிறார்கள் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிப்பார்களா மாட்டார்களா என்பதுதான் மிக முக்கியமான கேள்வி. இப்படியொரு கேள்வியை எழுப்பக் காரணம் இருக்கிறது.

சமீபத்தில் நடந்த தில்லி சட்டப்பேரவை தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி 28 இடங்கûக் கைப்பற்றியதற்கு இளம் வாக்காளர்கள்தான் காரணம் என்கிற தவறான கருத்து நிலவுகிறது. உண்மை அதுவல்ல. தில்லியிலுள்ள 18 - 19 வயது வாக்காளர்களில் 50% மேற்பட்டவர்கள் தங்களை வாக்காளர்களாகவே பதிவு செய்து கொள்ளவில்லை என்கிற அதிர்ச்சிகரமான உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?

ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு, குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களும், மத்தியதர வகுப்பினரும் ஆதரவளித்ததுதான் காரணம் என்பதுதான் உண்மை. அந்தக் கட்சியின் இலவசத் தண்ணீர், குறைந்த கட்டண மின்சாரம் போன்ற வாக்குறுதிகள்தான் வெற்றிக்குக் காரணமே தவிர, இளைஞர் சமுதாயத்தின் ஒருமித்த ஆதரவல்ல!

இன்னொரு புள்ளிவிவரத்தையும் பார்ப்போம். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2004இல் 67 கோடியிலிருந்து 2009இல் 71.14 கோடியாக அதிகரித்தது. ஏறத்தாழ 4 கோடி அதிகம் வாக்காளர்கள், அனைவரும் இளைஞர்கள், வாக்காளித்திருந்தால் வாக்குப்பதிவு கணிசமாக அதிகரித்திருக்க வேண்டுமா இல்லையா? அப்படி அதிகரிக்கவில்லையே. கடந்த மூன்று மக்களவைத் தேர்தல்களிலும், தேர்தலுக்குத் தேர்தல் சில கோடி புதிய, இளைஞர்கள் வாக்காளர்களாக அதிகரித்தும்கூட, வாக்குப்பதிவு என்னவோ 58% தாண்டி உயர மறுக்கிறதே...

சமூக வலைதளங்களால் விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதும், இளைஞர்கள் ஊழலுக்கும், முறைகேடுகளுக்கும், அரசியல் கட்சிகளின் ஜாதிய அடாவடி அரசியலுக்கும் எதிராகக் கொதித்தெழுந்திருப்பதும் உண்மை.

ஆனால், இவர்களில் எத்தனை பேர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து தேர்தலில் பங்கெடுக்கப் போகிறார்கள், எத்தனை பேர் அவரவர் வீட்டில் உட்கார்ந்து மடிக்கணினியில் இணையதளங்களில் அமிழ்ந்து போயோ, தொலைக்காட்சிச் சேனல்களின் நிகழ்ச்சிகளில் மகிழ்ந்து போயோ தேர்தலைக் கொண்டாடப் போகிறார்கள் என்பதைப் பொருத்துத்தான் 2014 தேர்தல் முடிவுகள் அமையப் போகிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com