
உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள சில முஸ்லிம்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் புதன்கிழமை குற்றம்சாட்டினர். இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மாநிலங்களவையில் பேசியதாவது:
ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த சிலர் ஆக்ராவில் உள்ள சில முஸ்லிம்களை வசீகரப் பேச்சால் மயக்கி, ஹிந்து மதத்துக்கு மாறச் செய்துள்ளனர். ஏழை மக்களை மயக்கி மதமாற்றம் செய்வது முக்கியப் பிரச்னையாக உள்ளது. இதேபோல், அலிகர் பகுதியில் கிறிஸ்தவ மக்களை மதமாற்றம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மதச் சுதந்திரம் உள்ள நாட்டில், விரும்பிய மதத்தைப் பின்பற்றுவதற்கான பாதுகாப்பை வழங்குவதில் மத்திய, மாநில அரசுகளுக்கு பங்குள்ளது. மதமாற்ற நடவடிக்கைகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது போன்ற செயல்பாடுகள், மதநல்லிணக்கம் சீர்குலைய வழிவகுக்கும் என்றார் அவர்.
இது தொடர்பாக காங்கிரûஸச் சேர்ந்த ஆனந்த் சர்மா கூறுகையில், "சர்ச்சைக்குரிய இந்த விவகாரத்தை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்' என்றார். இதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி பதிலளித்து பேசியதாவது:
மதமாற்ற விவகாரம் தொடர்பாக உத்தரப் பிரதேச மாநில போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது அந்த மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்னை. இதில் மத்திய அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை. இந்த விவகாரத்தில் அரசியல் காரணங்களுக்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பெயரை இழுப்பது தவறு என்றார் அவர்.
இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று எழுந்து நின்று கோஷமிட்டனர். இதனால் அவை அலுவல்கள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே, மக்களவையில் இப்பிரச்னையை எதிர்க்கட்சிகள் எழுப்பின. திரிணமூல் காங்கிரûஸச் சேர்ந்த சுல்தான் அகமது, இப்பிரச்னையை விவாதிக்க ஒத்திவைப்புத் தீர்மானம் கோரினார். அவரது கோரிக்கையை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் நிராகரித்தார்.