பறிமுதலான வன விலங்குகளின் உடல் பாகங்கள் அழிப்பு

சட்டவிரோதமாகக் கடத்திய போது பறிமுதல் செய்யப்பட்ட வன விலங்குகளின் பதப்படுத்தப்பட்ட உடல் பாகங்கள் தில்லி தேசிய உயிரியல் பூங்கா வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை எரியூட்டி அழிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பங்கேற்றார்.
பறிமுதலான வன விலங்குகளின் உடல் பாகங்கள் அழிப்பு

சட்டவிரோதமாகக் கடத்திய போது பறிமுதல் செய்யப்பட்ட வன விலங்குகளின் பதப்படுத்தப்பட்ட உடல் பாகங்கள் தில்லி தேசிய உயிரியல் பூங்கா வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை எரியூட்டி அழிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பங்கேற்றார்.

பூமி உயிர்க்கோளத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கிய அங்கமாக திகழும் வனவிலங்குகளில் மான், புலி, சிங்கம், காண்டாமிருகம், யானை, நரி போன்ற பல அரிய விலங்குகளைக் கொன்று அவற்றின் உடல் பாகங்களான தோல், கொம்பு, நகம், பல், தந்தம், எலும்பு ஆகியவற்றை சட்டவிரோதமாக உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் கடத்தப்படுகின்றன. இதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், இதுபோன்று சட்டவிரோதமாக கடத்தப்பட்ட போது வனத் துறையினராலும், பிற துறையினராலும் பறிமுதல் செய்யப்பட்ட வன விலங்குகளின் பதப்படுத்தப்பட்ட உடல் பாகங்களை எரியூட்டி மையத்தில் வைத்து அழிக்கும் நிகழ்ச்சி தில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்கா வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய வனத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், புலித்தோல், புலிப் பல், யானைத் தந்தம், காண்டாமிருகத்தின் கொம்பு, சிறுத்தைத் தோல் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகளின் பதப்படுத்தப்பட்ட உடல் பாகங்களை பூங்காவில் உள்ள எரியூட்டி மையத்தில் இட்டு அழித்தார்.

இவற்றில் யானைத் தந்தம், காண்டாமிருகத்தின் கொம்பு, புலியின் சிதைபட்ட நகங்கள், புலி, நரி, ஓநாய் ஆகியவற்றின் மண்டையோடுகள் ஆகியவை தேசிய உயிரியல் பூங்காவில் பல்வேறு நிகழ்வுகளின் போது சேகரித்து வைக்கப்பட்டிருந்தவை ஆகும். முன்னதாக, செய்தியாளர்களுக்கு பிரகாஷ் ஜாவடேகர் அளித்த பேட்டி:

வன விலங்குகள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஆதாரமாக விளங்குகின்றன. நமது இயற்கையைக் காப்பதில் வனவிலங்குகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதனால்தான், மனிதர்களாகிய நாம் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடிகிறது. ஆனால், விலங்குகளை வேட்டையாடும் தீயசக்திகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனால், அரிய வகை விலங்குகள் பல அழியும் நிலைக்குச் சென்றுள்ளன. இதைக் கருத்தில் கொண்டு அதுபோன்ற விலங்குகளைப் காக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

விலங்குகளைக் கொன்று அதன் பதப்படுத்தப்பட்ட உடல் பாகங்களை சட்டவிரோதமாக விற்பதும், கடத்தும் போக்கும் உள்ளது. அவற்றின் விலை அதிகமாக இருப்பதுதான் இதற்கு காரணம். இதனால், அதுபோன்று சட்டவிரோதமாக கடத்தப்பட்ட போது மீட்கப்பட்டு, நீதிமன்ற நடைமுறைகளுக்குப் பிறகு அவற்றை எரியூட்டி அழிக்கும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் நோக்கம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதான்.

மேலும், சட்டவிரோத வனவிலங்கு கடத்தல் அத்துடன் முடிந்துவிடுவதில்லை. அதன் மூலம் கிடைக்கும் பணமானது தீவிரவாதச் செயல்கள் உள்பட வேறு பல சட்டவிரோதச் செயல்களுக்கும்கூட பயன்படுத்தப்படுகின்றன.

ஆகவே, வன விலங்குகளைப் பாதுகாக்கவும், அவற்றின் வாழ்க்கைக்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கவும், பொதுமக்களிடம் அவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேவையான நடவடிக்கைகளை மத்திய வனம், சுற்றுச்சூழல் அமைச்சகம் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றார் ஜாவடேகர்.

கூட்டத்தில் பல்வேறு வெளிநாட்டு வனவிலங்கு ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

விலங்குகளின் பதப்படுத்தப்பட்ட உடல் பாகங்களை எரியூட்டி அழிக்கும் மத்திய வனத் துறையின் முயற்சிக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு மத்திய உயிரியல் ஆணையகத்தின் செயலர் - உறுப்பினர் பி.எஸ். பொனால், தேசிய உயிரியல் பூங்காவின் இயக்குநர் அமிதாப் அக்னி ஹோத்ரி, வன விலங்கு மூத்த மருத்துவர் ந.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com