
பர்த்வான் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு வங்கதேசத்தில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தேசியப் புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெள்ளிக்கிழமை இரவு விடுத்துள்ள அறிக்கை:
பர்த்வான் குண்டுவெடிப்பு தொடர்பாக முதல்கட்ட விசாரணை முடிவடைந்துள்ளது. இந்தக் குண்டுவெடிப்பில் காயமடைந்த அப்துல் ஹக்கிம் மற்றும் இரண்டு பெண்கள் இதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசராணையில், அவர்களுக்கும் வங்கதேசத்தில் செயல்பட்டு வரும் ஜமாத்-உல்-முஜாஹிதீன் அமைப்புக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் வெடிபொருள்களைத் தயாரித்து அந்த அமைப்புக்கு அனுப்பி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தத் பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கையை என்.ஐ.ஏ. தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தற்போது தலைமறைவாகியுள்ள ஜமாத்-உல்-முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த நபர் குறித்து தகவல் அளிப்போருக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, என்.ஐ.ஏ. இயக்குநர் சரத்குமார் வெள்ளிக்கிழமை காலையில் பர்த்வான் சென்று, குண்டு வெடிப்பு நிகழ்ந்த வீட்டை நேரில் ஆய்வு செய்தார். இந்நிலையில், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்யவுள்ளார்.