ஜூலியஸ் மேகி: நூடுல்ஸ் உணவு உருவானதன் சுவாரசிய பின்னணி!

பத்து நாள்களுக்கு முன்புவரை குழந்தைகள், பேச்சுலர்களின் விருப்ப உணவாக இருந்த மேகி நூடுல்ஸின் பூர்வீகம்...
ஜூலியஸ் மேகி: நூடுல்ஸ் உணவு உருவானதன் சுவாரசிய பின்னணி!
Updated on
2 min read

மனைவி: ராத்திரி மேகி ஓகே'வா ?

கணவன்: அது சாப்பிட கூடாதாம் ..பேப்பர் பாக்கலையா?

மனைவி: ஐயோ..சரி உப்புமா பண்ணவா ?

கணவன்: போற உசுரு மேகிலேயே போகட்டும்

இப்படி நேற்றுவரையில் எல்லோராலும் விரும்பி சாப்பிடப்பட்ட உணவு, இன்று தடை செய்யப்பட்டுள்ளது. இணையத்தில் தொடர்ந்து கிண்டல் அடிக்கப்படுகிறது. பத்து நாள்களுக்கு முன்புவரை குழந்தைகள், பேச்சுலர்களின் விருப்ப உணவாக இருந்த மேகி நூடுல்ஸின் பூர்வீகம் என்ன? சற்று அலசலாமா?

ஸ்விட்சர்லாந்தில் 1860-ம் வருடம் சில உணவுப்பொருள்களைத் தன் பெயரில் உருவாக்கினார் மைக்கேல் ஜோஹன்ஸ் மேகி என்பவர். குடும்பத்தின் ஐந்தாவது குழந்தையாக பிறந்த மேகியின் பூர்விகம் இத்தாலி. ஸ்விட்சர்லாந்தில் பிறந்து வளர்ந்த அவர் 23 வயதிலேயே தந்தையின் மில் பொறுப்பை ஏற்று நடத்தினார். அந்தச் சமயம் மில் தொழிற்சாலை இக்கட்டான நிலையில் இருக்கவே, நிலைமையைச் சரிசெய்ய புதிய தொழில்முறைகளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தார் மேகி.

அவருடைய நண்பர் மருத்துவர் ப்ரிடொலின் ஷுலருடன் சேர்ந்து உணவு ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பேக் செய்யப்பட்ட, அதே சமயம் சத்தான உணவை தங்கள் மில் தொழிலாளர்களின் வசதிக்காக உருவாக்கும் முயற்சிகளில் இருவரும் ஈடுபட்டார்கள். இரண்டு வருட கடும் ஆராய்ச்சிக்குப் பிறகு பருப்புப் பொடிகளைத் தயார் செய்து அதை ஸ்விஸ் மார்கெட்டில் 1884-ம் ஆண்டு சந்தைப்படுத்தினார்கள். ஆரம்பத்தில் அதற்கு எவ்வித வரவேற்பும் இல்லை. அதன்பிறகு உத்தியை மாற்றினார்கள். வாங்கியவுடன் பயன்படுத்தக்கூடிய சூப் வகைகள் மற்றும் உணவின் சுவையை அதிகரிக்கச் செய்யும் ஃபேளவர்களை 1886-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்கள். இது ஓரளவு விற்பனை ஆனது. ஸ்விஸ் அரசின் கவனம் இவர்கள் பக்கம் திரும்பியது.

நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, அவர்களின் கிச்சன் வேலைச் சுமையைக் குறைக்க அரசு முடிவெடுத்து, மேகியிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தது. அதாவது எளிதாகத் தயார் செய்யக்கூடிய உணவுப்பொருள்களைத் தயாரித்து தரும்படி கேட்டுக்கொண்டது. இதுதான் மேகியின் பிறப்புக்கான காரணம். இன்ஸ்டன்ட் உணவுக் கலாசாரத்தின் ஆரம்பமும் இந்தப் புள்ளியிலிருந்துதான் தொடங்கியது. உடனடியாகத் தயாரித்து உண்ணக் கூடிய வேர்க்கடலை மற்றும் பீன்ஸ் சூப்புகள் தயாரிக்கப்பட்டன.

1912-ம் வருடம் தன் 66-ம் வயதில் இறந்த மேகி, பாரிஸ், பெர்லின், வியன்னா, லண்டன் மற்றும் அமெரிக்காவிலும் மேகி விற்பனைச் சந்தையை விரிவுபடுத்தினார்.

1947-ம் வருடம் நெஸ்லே கம்பெனி இந்த மேகி பிராண்டை விலை கொடுத்து வாங்கித் தனதாக்கிக் கொண்டது. வேலைக்குச் செல்லும் பெண்களை இலக்காகக் கொண்டு இந்தியாவிலும் 1983-ம் ஆண்டு மேகி களம் இறங்கியது. இரண்டே நிமிடத்தில் உணவைத் தயார் செய்துவிடலாம் என்பதுதான் அதன் தாரகமந்திரம். இந்தக் கவர்ச்சியான விளம்பரம் வாடிக்கையாளர்களை மிகவும் ஈர்த்தது. அன்றிலிருந்து ஏறுமுகமாகவே இருந்துவந்த மேகியின் விற்பனை, மற்ற நூடுல்ஸ் தயாரிப்புகளின் போட்டிக்கு மத்தியிலும் நிலைத்து நின்றது. மேகிக்குப் பிறகுதான் மற்ற பிராண்டுகள் என்கிற நிலைமை தடை செய்யப்படும் வரை இருந்தது அதன் மகத்தான சாதனை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com