ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் நவ. 19-இல் தாக்கல்? 

மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பரிந்துரைகளை ஏழாவது ஊதியக் குழு வியாழக்கிழமை (நவம்பர் 19) தாக்கல் செய்யும் என
Published on
Updated on
2 min read

மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பரிந்துரைகளை ஏழாவது ஊதியக் குழு வியாழக்கிழமை (நவம்பர் 19) தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 மத்திய அரசுத் துறைகளில் நாடு முழுவதும் சுமார் 50 லட்சம் ஊழியர்களும், 54 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். இவர்களுக்கான ஊதியத்தை விலைவாசி உள்ளிட்டவற்றைக் கவனத்தில் கொண்டு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக் குழு பரிந்துரைகளை வழங்கும். கடைசியாக ஆறாவது ஊதியக் குழு அதன் அறிக்கையை கடந்த 2008-இல் மத்திய அரசிடம் தாக்கல் செய்தது.
 இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற அசோக் குமார் மாத்தூர் தலைமையிலான ஏழாவது ஊதியக் குழுவை மத்திய அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமித்தது. மொத்தம் 18 மாதங்கள் கொண்ட இந்தக் குழுவின் பதவிக் காலம் கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவடைந்தது.
 இருப்பினும், குழுவின் ஆய்வு முடிவடையாததால், அதன் பதவிக் காலத்தை வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்தது.
 இந்தக் குழுவிடம் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட "குரூப் 1' பிரிவு மத்திய அரசு அதிகாரிகள், "குரூப் சி',"டி' பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவு ஊழியர்கள் அங்கம் வகிக்கும் சங்கங்கள் சார்பில் ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.
 மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச மாத ஊதியத்தை ரூ.26 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும். மூன்று முறை பதவி உயர்வு என்பதற்குப் பதிலாக பணிக் காலத்தில் ஐந்து முறை பதவி உயர்வு வழங்க வேண்டும். 50 சதவீதமாக இருக்கும் ஓய்வூதியத்தை 67 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அசோக் குமார் மாத்தூர் குழுவிடம் ஊழியர்கள் சங்கங்களால் முன்வைக்கப்பட்டன.
 அவற்றின் கருத்துகளைக் கேட்ட ஊதியக் குழு, சுமார் 900 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையைத் தயாரித்துள்ளது. இதையடுத்து, குழுவின் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் வியாழக்கிழமை (நவம்பர் 19)அசோக் குமார் மாத்தூர் தாக்கல் செய்வார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
 மத்திய அரசு ஊழியர்களுக்கு 15 சதவீத அளவுக்கு ஊதிய உயர்வு அளிப்பது. இதனால், அரசுக் கரூவூலத்துக்கு ரூ.25 ஆயிரம் கோடி வரை கூடுதல் செலவினம் ஏற்படும் போன்ற யதார்த்த நிலைமைகளை ஊதியக் குழு அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. எனினும், ஓய்வூதியதாரர்களின் வயதை அதிகரிப்பது தொடர்பான நடவடிக்கையை ஊதியக் குழு ஆதரிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
 ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டால், வருகிற ஜனவரி 1-ஆம் தேதி கணக்கிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட ஊதிய உயர்வு கிடைக்கும். இதை முன்மாதிரியாகக் கொண்டு மாநில அரசுகளும் அவற்றின் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்குவது இதுவரை கடைப்பிடிக்கப்படும் மரபாக உள்ளது. அந்த வகையில், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமல்லாது மாநில அரசு ஊழியர்களிடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com