பாஜகவுக்குப் புதிய தலைவர் - அமித்ஷாவுக்கு அமைச்சர் பதவி?

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, பாஜகவில் எழுந்துள்ள உள்கட்சிப் பூசலுக்கு முடிவு காண்பதற்கான
பாஜகவுக்குப் புதிய தலைவர் - அமித்ஷாவுக்கு அமைச்சர் பதவி?

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, பாஜகவில் எழுந்துள்ள உள்கட்சிப் பூசலுக்கு முடிவு காண்பதற்கான புதிய வியூகத்தை பிரதமர் நரேந்திர மோடி வகுத்து வருவதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், எல்.கே. அத்வானி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்களைச் சமாதானப்படுத்தலாம் என மோடி கருதுவதாகத் தெரிகிறது.
 அண்மையில் நடந்து முடிந்த பிகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அந்த மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களில் சுமார் 26 பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், நிதின் கட்கரி, வெங்கய்ய நாயுடு உள்பட சுமார் 20 பேர் அந்த மாநிலத்தில் தொடர்ச்சியாக முகாமிட்டு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். ஆனால், முடிவில் பாஜக எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்தத் தேர்தலில் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகியவை இடம் பெற்ற மகா கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது.
 அத்வானி அதிருப்தி: இதையடுத்து, "பிகார் தேர்தல் முடிவு தேசிய அளவில் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது' என்று அதன் தலைவர் அமித் ஷா கூறினார். எனினும், நரேந்திர மோடியை முன்னிறுத்தி இந்தத் தேர்தலில் பாஜக தலைமை நடத்திய பிரசாரம், அந்த மாநில மக்களை ஈர்க்கவில்லை என்பதைத்தான் தேர்தல் முடிவு உணர்த்துகிறது என்று கட்சியின் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் குற்றம்சாட்டினர். இதேபோல, மத்தியில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளை நெருங்கும் வேளையில், அரசின் செயல்திறன் மீதான மக்கள் நம்பிக்கை குறைந்து வருவதாகவும், இதற்கு மோடி என்ற தனிநபரின் ஆதிக்க மனப்பான்மையுடன் கூடிய வழிநடத்தலே காரணம் என்றும் பாஜகவின் ஒரு பிரிவுத் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
 மூத்த அமைச்சர்கள் கவலை: மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை ஏற்று மூத்த அமைச்சர்களான ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு, அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், நிதின் கட்கரி ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். ஆனால், முக்கிய முடிவுகள் எடுக்கும் போது நரேந்திர மோடியோ, அமித் ஷாவோ தங்களைக் கலந்து ஆலோசிப்பதில்லை என்று இந்த மூத்த அமைச்சர்கள் மனதில் குறையிருக்கிறது. நிதி, சாலைப் போக்குவரத்துத் துறைகள் நீங்கலாக, பல துறைகளில் கேபினட் அமைச்சர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படாமலேயே முக்கியக் கோப்புகள் பிரதமர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு, அங்கிருந்து ஒப்புதல் வழங்கப்படும் நிலை நிலவுவது சில அமைச்சர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது.
 இதுதொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களிடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டால், பாஜக தேசியத் தலைவர் பதவியில் இருந்து அமித் ஷா விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக தலைவர் பதவியில் மத்திய அமைச்சர்களான வெங்கய்ய நாயுடுவோ, ஜே.பி. நட்டாவோ நியமிக்கப்படலாம். குஜராத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் பாஜக பின்னடைவை சந்தித்தால் முதல்வர் ஆனந்திபென் படேல் அகற்றப்பட்டு அமித்ஷா முதல்வராக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அமித்ஷாவைத் தலைவர் பதவியிலிருந்து அகற்றி, மூத்த தலைவர்களுடன் சுமூக உறவு கொண்டுள்ள ஒருவரை, பாஜக தலைவராக்குவதன் மூலம் பாஜக தலைமையில் காணப்படும் பூசலுக்கு முடிவு காணலாம் என்று பிரதமர் மோடி தீர்மானிதிருப்பதாகத் தெரிகிறது.
அத்வானியைச் சமாதானப்படுத்த முயற்சி
 பிகார் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, கட்சித் தொண்டர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் விதமாக டிசம்பர் 25-ஆம் தேதி முன்னாள் பிரதமரும், மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளில் பாஜகவின் மூத்த தலைவர்கள் அத்வானி தலைமையில் ஒன்று கூடி ஆலோசிக்க முடிவு செய்துள்ளனர். "பாஜக-அடல்' என்ற அணியை கட்சிக்குள்ளேயே உருவாக்குவது குறித்து அவர்கள் தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றனர். நரேந்திர மோடி வழிகாட்டுதலின்படி அமித் ஷா பாஜக தலைவரான பிறகு, அந்தக் கட்சியில் இருந்து ஒதுங்கியுள்ள பல தலைவர்களும் இந்த முயற்சிக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளதாக மத்திய உளவுத் துறை மூலம் மத்திய அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, வரும் 25-ஆம் தேதி உத்தேசித்துள்ள கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அத்வானி தரப்பிடம் நரேந்திர மோடி சார்பில் மூத்த அமைச்சர்கள் நிதின் கட்கரியும், அருண் ஜேட்லியும் கடந்த சில நாள்களாக சமரசம் பேசி வருகின்றனர்.
அமித் ஷாவுக்கு புதிய பொறுப்பு!
 தற்போதையே பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மீது மூத்த தலைவர்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். இதனால், அவர்களைத் திருப்திப்படுத்தும் வகையிலும், அமித் ஷாவுக்கு புதிய பொறுப்பை அளிக்கும் வகையிலும் அவரை பாஜக தேசியத் தலைவர் பதவியில் இருந்து விடுவித்து மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
 தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளம், புதுச்சேரி, அசாம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு பாஜகவை பலப்படுத்துவதற்காக மூத்த தலைவர்களை அரவணைத்துச் செல்ல மோடி விரும்புகிறார். இதனால்தான், கட்சியில் அமித் ஷா விடுவிப்பு, மத்திய அமைச்சரவையில் மாற்றம் ஆகிய நடவடிக்கைகளை எடுப்பது குறித்து அவர் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com