எல்லை தாண்டும் மீனவர்களைத் தாக்கக் கூடாது: இந்திய - இலங்கை உயரதிகாரிகள் கூட்டத்தில் முடிவு

இந்திய - இலங்கை கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிக்க வரும் இரு தரப்பு மீனவர்களை இருநாட்டு கடற்படையோ,
எல்லை தாண்டும் மீனவர்களைத் தாக்கக் கூடாது: இந்திய - இலங்கை உயரதிகாரிகள் கூட்டத்தில் முடிவு

இந்திய - இலங்கை கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிக்க வரும் இரு தரப்பு மீனவர்களை இருநாட்டு கடற்படையோ, கடலோரக் காவல் படையோ தாக்கக் கூடாது என்று தில்லியில் நடைபெற்ற இரு நாடுகளின் பாதுகாப்புத் துறைச் செயலர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
 "இந்திய - இலங்கை பாதுகாப்பு பேச்சுவார்த்தை' எனும் பெயரில் இரு நாடுகளின் பாதுகாப்புத் துறைச் செயலர்கள், முப்படைகளின் தளபதிகள், கடலோரக் காவல் படை உயரதிகாரிகள் பங்கேற்ற உயர்நிலைக் குழுக் கூட்டம் தில்லியில் திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது.
 முதல் நாள் கூட்டத்தில் இரு நாடுகளிடையிலான ராணுவ ஒத்துழைப்பு, ஆயுதங்கள் கொள்முதல், பயிற்சியை விரிவுபடுத்துதல் ஆகியவை தொடர்பாக அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்தியது. இதில், இலங்கை முப்படையினருக்கு இந்திய ராணுவக் கல்லூரிகளில் இடங்களை அதிகரிப்பது, நவீன ஆயுதங்கள் பயிற்சி அளிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.
 இரண்டாம் நாள் கூட்டம்: இதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் கூட்டத்தில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பு, அமைதி நிலவ இரு நாடுகளின் பாதுகாப்புப் படைகளும் இணைந்து ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
 இதில் பங்கேற்ற இந்திய கடலோரக் காவல் படை அதிகாரிகள், இந்திய கடல் எல்லையைத் தாண்டும் தமிழக மீனவர்கள் உள்ளிட்டோர் மீது இலங்கை கடற்படை, கடலோரக் காவல் படை வீரர்கள் நடத்தும் தாக்குதல்கள் குறித்து பிரச்னை எழுப்பினர். அப்போது, கடல்சார் வளங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை கடலோரக் காவல் படை ஏற்றிருப்பதால், இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் மீனவர்களை விரட்டி அடிக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், மீனவர் பிரச்னையை மனிதாபிமானத்துடன் அணுகும்படி தங்கள் நாட்டுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளதாகவும் அந்நாட்டு கடலோரக் காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 செயலர்கள் ஆலோசனை: இதைத் தொடர்ந்து, இந்திய பாதுகாப்புத் துறைச் செயலர் ஜி. மோகன் குமார், இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் கருணசேனா ஹெட்டியராச்சி ஆகிய இருவரும் தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மீனவர்கள் பிரச்னை குறித்து விரிவாக விவாதித்தனர்.
 பேச்சுவார்த்தை குறித்து இலங்கை பாதுகாப்புத் துறை உயரதிகாரி கூறியதாவது:
 மீனவர்கள் விவகாரத்தை, வாழ்வாதாரப் பிரச்னையாக அணுகி மனிதாபிமானத்துடன் அவர்களை நடத்தும்படி இரு தரப்பு கடலோர காவல் படைகளும் பரஸ்பரம் கேட்டுக் கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து, கடல் எல்லையைத் தாண்டும் மீனவர்களை எக்காரணத்தைக் கொண்டும் தாக்கக் கூடாது. அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்வதைத் தவிர்க்க இரு தரப்பிலும் முடிவெடுக்கப்பட்டது.
 ஆனால், இரு நாட்டு கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் பிடிபட்டால் அவர்கள் மீது அந்தந்த நாட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
 அதுவும் இரு நாட்டு அரசுகளின் அரசியல் முடிவுகளுக்கு உள்பட்டது என்றும் அதிகாரிகளிடம் பாதுகாப்புத் துறைச் செயலர்கள் விளக்கினர்.
 இலங்கை கடலோரக் காவல் படைக்கு கூடுதலாக கண்காணிப்புப் படகுகளை வழங்கும் திட்டத்தை விரைவுப்படுத்துதல், கடல் எல்லை தொடர்பாக ஏற்படும் குழப்பங்களைக் களைய அவ்வப்போது கடலோரக் காவல் கண்காணிப்பில் ஈடுபடும் இலங்கைக் கடற்படை வீரர்களுக்கு இந்தியக் கடற்படை மூலம் பயிற்சி அளித்தல் ஆகிய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்று இலங்கை பாதுகாப்புத் துறை உயரதிகாரி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com