
இந்தியாவில் நீதிபதிகள் நியமனத்தை கண்காணிப்பதற்கு நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கௌட கூறினார்.
மத்திய அரசு நிறைவேற்றிய நீதிபதிகள் நியமனம் தொடர்பான சட்டத்தை உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
இதைத்தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 10 உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு இன்று மக்களவையில் எழுத்துபூர்வமாக பதிலளித்த சட்ட அமைச்சர் சதானந்த கௌட, அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்தின் படி உச்ச, உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமிக்கப்படும் வழிமுறைகளை கண்காணிப்பதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றார்.
தற்போது, நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் முறை அமலில் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் கேட்டு கொண்டதற்கிணங்க கொலிஜியம் முறையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது என்றார் அமைச்சர்.
நீதிபதிகள் நியமனம் தொடர்பான சட்டத்தை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு பின்பு தற்போதுதான் அரசு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.