அஸ்ஸாமின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் இரண்டாம்கட்டத் தேர்தல்!

அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என கருத்து கணிப்புகள் ஏற்கெனவே தெரிவித்துள்ளன. இருப்பினும், இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள அஸ்ஸாமின் மத்திய மற்றும் சமவெளிப் பகுதிகள்,

அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என கருத்து கணிப்புகள் ஏற்கெனவே தெரிவித்துள்ளன. இருப்பினும், இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள அஸ்ஸாமின் மத்திய மற்றும் சமவெளிப் பகுதிகள், காங்கிரஸின் "கை' ஓங்கியுள்ள மாவட்டங்கள் என்பதால், தேயிலை தேசமான அஸ்ஸாமில் பாஜக வெற்றிவாகை சூடுவது அவ்வளவு எளிதல்ல என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தில்லி மற்றும் பிகார் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக தொடர் தோல்வியை சந்தித்துள்ளதால், அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அந்தக் கட்சி களம் இறங்கியுள்ளது.

பாஜகவின் வெற்றிக்கு வித்திடும் விதத்தில், அஸ்ஸாமில் பிரதமர் மோடியை பிரதானப்படுத்தாமல், அந்த மாநில மக்களுக்கு நன்கு பரிச்சயமான மத்திய அமைச்சர் சர்வானந்த சோனோவாலை முதல்வர் வேட்பாளராக பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டார். மேலும், அஸ்ஸாமில் இரண்டு முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்த, முக்கிய மாநிலக் கட்சியான அஸ்ஸாம் கண பரிஷத் கட்சியுடன் பாஜக வலுவான கூட்டணி அமைத்து களம் கண்டுள்ளது.

காங்கிரஸ் கூட்டணியும், பாஜக கூட்டணியும் நீயா? நானா? என்ற ரீதியில் போட்டியிடும் அஸ்ஸாமில், கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 82.20 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இது, கடந்த 2011ஆம் ஆண்டு, அங்கு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளைவிட 12 சதவீதம் அதிகமாகும்.

"தேர்தலில் வாக்குப் பதிவு சதவீதம் அதிகமானால், பொதுமக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என அர்த்தம்' என்ற பொதுவான அரசியல் வரையறையின்படி, அஸ்ஸாமில் இந்தமுறை எப்படியும் ஆட்சியைப் பிடித்து, அங்கு காங்கிரஸின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்ற நம்பிக்கை பாஜக கூட்டணிக் கட்சியினர் மத்தியில் வலுப்பெற்றுள்ளது. ஆனால், பாஜகவின் எண்ணம் ஈடேற, அஸ்ஸாமில் திங்கள்கிழமை (ஏப்.11) நடைபெற உள்ள இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. காரணம், இரண்டாம்கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள குவாஹாட்டி (கிழக்கு மற்றும் மேற்கு), கோக்ரஜார் (கிழக்கு மற்றும் மேற்கு), தேஜ்பூர், பர்ஹாம்பூர், தர்மாபூர், ராஹா, நகாவ்ன், சாமாகுரி, கோல்பாரா, செங்கா, மங்கள்தாய், பார்பேட்டா, ஜனியா உள்ளிட்ட 61 சட்டப்பேரவைத் தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் "கை' ஓங்கியுள்ள இடங்களாகும். அஸ்ஸாமின் மத்திய மற்றும் சமவெளிப் பகுதிகளில் அமைந்துள்ள இந்த 61 தொகுதிகளில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 41 இடங்களைக் கைப்பற்றியது. மாறாக பாஜக கூட்டணி 17 இடங்களில்தான் வெற்றி பெற்றது. எனவே, காங்கிரஸ் வலுவாக உள்ள இந்த மாவட்டங்களில், பாஜக கூட்டணி அதிகப்படியான வாக்குகளைப் பெற்றால் மட்டுமே, அதன் "மிஷன் 84'(பெரும்பான்மை இடங்களில் வெற்றி) எண்ணம் வெற்றி பெறும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிரான மாநில மக்களின் மனநிலையும், பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களின் தேர்தல் பொதுக் கூட்டங்களுக்கு அலைகடலென திரளும் மக்கள் கூட்டமும் பாஜகவுக்கு சாதகமான அம்சங்கள்தான். இருந்தாலும், இரண்டாம்கட்டத் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் பெருவாரியாக உள்ள சிறுபான்மையினரின் ஆதரவு காங்கிரஸýக்கு உள்ளதால், கடைசி நேரத்தில் தேர்தல் முடிவுகள் மாற வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.

இரண்டாம் கட்டத் தேர்தலில், காங்கிரஸ் தரப்பில், மாநில அமைச்சர்களான ராகிபுல் ஹுசைன், சந்தன் சர்க்கார், நஜ்ருல் இஸ்லாம், அதன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவரும், துப்ரி தொகுதி எம்.பி.யுமான பத்ருதீன் அஜ்மல் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் களம் காண்கின்றனர்.

இவர்களுக்குப் போட்டியாக பாஜக தரப்பில், காங்கிரஸிலிருந்து பாஜகவில் இணைந்துள்ள மாநில முன்னாள் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, பாஜக கூட்டணியில் அங்கம்வகிக்கும் முக்கிய கட்சியான அஸ்ஸாம் கண பரிஷத்தின் தலைவரும், மாநில முன்னாள் முதல்வருமான பிரஃபுல்ல குமார் மஹந்தா உள்ளிட்டோர் களம் காண்கின்றனர். எனவே, இறுதிகட்டத் தேர்தலில் காங்கிரஸ்-பாஜக கூட்டணிகளுக்கு இடையே கடும்போட்டி நிலவும் என்பதில் ஐயமில்லை. இந்தப் போட்டியில் பாஜக வெற்றி வாகை சூடுமா? அல்லது காங்கிரஸ் தொடர்ந்து 4ஆவது முறை வெற்றி பெறுமா? என்பது மே மாதம் 19ஆம் தேதி தெரிந்துவிடும்.

-வெ.ந.கிரிதரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com