அமைச்சர்கள் பதவிநீக்கம் அகிலேஷின் காலம் கடந்த நடவடிக்கை: ராகுல்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஊழல் புகார்களில் சிக்கிய அமைச்சர்கள், தலைமைச் செயலர் ஆகியோரை முதல்வர் அகிலேஷ் யாதவ் பதவிநீக்கம் செய்திருப்பது
உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான ஹேமாவதி நந்தன் பகுகுணாவின் உருவப்படத்துக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான ஹேமாவதி நந்தன் பகுகுணாவின் உருவப்படத்துக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஊழல் புகார்களில் சிக்கிய அமைச்சர்கள், தலைமைச் செயலர் ஆகியோரை முதல்வர் அகிலேஷ் யாதவ் பதவிநீக்கம் செய்திருப்பது காலம் கடந்த செயல் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, "விவசாயிகள் மகா யாத்திரை' என்ற பெயரில் சுற்றுப் பயணத்தைத் தொடங்கியுள்ள அவர், அலாகாபாதில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மேலும் பேசியதாவது:
ஊழல் புகார்களில் சிக்கிய 2 அமைச்சர்கள், அரசின் தலைமைச் செயலரும், உறவினருமான சிவபால் யாதவ் ஆகியோரை முதல்வர் அகிலேஷ் யாதவ் பதவிநீக்கம் செய்துள்ளார். இதன் மூலம், அரசு மீது ஏற்பட்டிருக்கும் களங்கத்தைத் துடைப்பதற்கு அவர் முயலுகிறார். பழுதடைந்த தனது சைக்கிளின் (சமாஜவாதி கட்சியின் சின்னம்) டயர்களை மாற்றுவதற்கு முயல்கிறார். ஆனால், இது மிகவும் தாமதமான நடவடிக்கை என்பதை அவர் உணர்ந்தாக வேண்டும். இந்த மாநிலத்தில் நாலரை ஆண்டுகள் வீணடிக்கப்பட்டுவிட்டன. அடுத்து எஞ்சியுள்ள சில மாத கால ஆட்சியையும் அவரால் நிறைவுசெய்ய முடியாது.
மற்றொரு புறம், மக்களவைத் தேர்தலின்போது அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்ட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. மாறாக, விவசாயிகள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களின் பிரச்னைகளைக் கண்டுகொள்ளாமல், பெரும் தொழிலதிபர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசுக்கு எதிராக, அனைத்து எதிர்க்கட்சிகளும் குரல் கொடுக்கும்போது சமாஜவாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் மட்டும் மெளனம் சாதிப்பது வியப்பளிக்கிறது.
பாஜக தலைமையிலான மதவாத சக்திகளுக்கு எதிராக, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜவாதி ஆகிய கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டது. ஆனால், பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன், பாஜகவை மறைமுகமாக ஆதரிக்கும் வகையில் மதச்சார்பற்ற கூட்டணியில் இருந்து வெளியேறியது சமாஜவாதி கட்சி என்றார் ராகுல் காந்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com