கேரள இளம் பெண் பலாத்கார - கொலை வழக்கு: விருதுநகர் வாலிபருக்கான மரண தண்டனை ரத்து

கேரள இளம் பெண் ஓடும் ரயிலில் இருந்து தள்ளி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தது தொடர்பாக தமிழகத்தின்
Published on
Updated on
1 min read

கேரள இளம் பெண் ஓடும் ரயிலில் இருந்து தள்ளி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தது தொடர்பாக தமிழகத்தின் விருதுநகரைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனை 7 ஆண்டு சிறைத் தண்டனையாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது.
இதுதொடர்பாக அந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பி.சி. பந்த், யு.யு. லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, கோவிந்தசாமி மீது சுமத்தப்பட்டிருந்த கொலைக் குற்றச்சாட்டை விலக்கிக் கொண்டது.
எனினும், இந்திய தண்டனைச் சட்டத்தின் 376 (பாலியல் பலாத்காரம்), 394 (கொள்ளையின்போது வேண்டுமென்றே தாக்குதல்), 325 (வேண்டுமென்றே ஆபத்தான காயங்களை ஏற்படுத்துதல்) ஆகிய சட்டப் பிரிவுகளின்கீழ் கோவிந்தசாமி மீது கேரள உயர் நீதிமன்றம் சுமத்தியிருந்த குற்றச்சாட்டுகளை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
இதையடுத்து, கோவிந்தசாமிக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனை, 7 ஆண்டு சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
கேரளத்தின் ஷோரனூரைச் சேர்ந்த செளமியா, கடந்த 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி இரவு எர்ணாகுளம் - ஷோரனூர் பயணிகள் ரயிலில் பயணம் செய்தார்.
பெண்களுக்கான பெட்டியில் அவர் தனியாக பயணம் செய்துகொண்டிருந்தபோது அந்தப் பெட்டிக்கு வந்த கோவிந்தசாமி, செளமியாவின் உடமைகளை கொள்ளையடித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், செளமியாவை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிய கோவிந்தசாமி, தானும் குதித்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த செளமியா, மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.  இந்தச் சம்பவம் கேரளம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழகத்தின் விருதுநகரைச் சேர்ந்த கோவிந்தசாமியை போலீஸார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக நடைபெற்று வந்த வழக்கை விசாரித்த திருச்சூர் விரைவு நீதிமன்றம், கோவிந்தசாமிக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து கோவிந்தசாமி சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, அந்த நீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், கோவிந்தசாமிக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை தற்போது உச்ச நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத் தண்டனையாகக் குறைத்துள்ளது.
மேல்முறையீடு செய்ய அரசு முடிவு: இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மாநில முதல்வர் பினரயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: செளமியா கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு நியாயமற்றது. அந்தத் தீர்ப்பை கேரள மக்களால் ஜீரணிக்கவே முடியாது.
செளமியாவின் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைப்பதற்காக, விரைவில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்வோம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com