
பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகுவதாக அதன் மூத்த தலைவர் ஆஷிஷ் சுக்லா வியாழக்கிழமை அறிவித்தார். மாயாவதியின் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவராக இருந்த ஆஷிஷ் சுக்லா, திடீரென இத்தகைய முடிவை எடுத்திருப்பது பகுஜன் சமாஜ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த சில மாதங்களில் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அக்கட்சியில் இருந்து முக்கியத் தலைவர்கள் பலர் ஒருவர் பின் ஒருவராக வெளியேறி வருவது குறிப்பிடத்தக்கது.
சுவாமி பிரசாத் மெளரியா, ஆர்.கே.செளதரி, ரவீந்திரநாத் திரிபாதி ஆகியோர் ஏற்கெனவே கட்சியில் இருந்து விலகினர். தற்போது சுக்லாவும் அதுபோன்ற முடிவை எடுத்திருப்பது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் சுக்லா. இருப்பினும், கட்சியிலிருந்து விலகியதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்த அவர் மறுத்துவிட்டார். உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதி வேட்பாளராக சுக்லாவை முன்னிறுத்த மாயாவதி முதலில் திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது. தற்போது வேறு ஒரு நபரை அங்கு களமிறக்க அவர் முடிவு செய்ததால் சுக்லா கட்சியில் இருந்து விலகியதாகக் கூறப்படுகிறது. அதிக பணம் தருபவர்களுக்கு மட்டுமே மாயாவதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து வெளியேறிய தலைவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.