
ஜம்மு காஷ்மீரின் உரி ராணுவ முகாம் தாக்குதலுக்கு காரணமாக அமைந்தவர்கள் தப்ப முடியாது என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி மாதந்தோறும் வானொலியில் உரையாற்றும் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:
உரி ராணுவ முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். இந்த தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது.
நமது ராணுவம் மீது நமக்கு பெரிய நம்பிக்கை உள்ளது. குடிமக்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் எதையாவது பேசிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் ராணுவ வீரர்கள் பேசுவதில்லை. அவர்கள் தங்கள் வீரம் மற்றும் தைரியம் நிரம்பிய செயல்கள் மூலம் அதை வெளிப்படுத்துகிறார்கள்.
காஷ்மீர் மக்கள் தங்களின் வழக்கமான வாழ்க்கையை மீண்டும் வாழ விரும்புகின்றனர். அங்கு இயல்பான நிலை ஏற்பட்டு வர்த்தகங்கள் மற்றும் கல்வி தொடர வேண்டும் என விரும்புகின்றனர். காஷ்மீர் மக்களை பாதுகாப்பது அரசின் கடமையாகும். அதற்கான தகுந்த நடவடிக்கைகளை அரசு நிர்வாகம் மேற் கொண்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக்கில் நமது வீரர்கள் சிறப்பான செயல்பட்டு 4 பதக்கங்களை பெற்று பெருமை சேர்த்துள்ளனர். உலக அரங்கில் நம்மை தலைநிமிரச் செய்துள்ளனர். இது மாற்று திறனாளிகள் மீது மக்களின் கவனம் திரும்ப வழி வகுத்துள்ளது.
தூய்மை இந்தியா திட்டம் பொது மக்களின் மனதில் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் 2.48 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு மேலும் 1.5 கோடி கழிவறைகளை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 1969 என்ற கட்டணமில்லா சேவை எண்ணை பயன்படுத்தி தூய்மை இந்தியா திட்டம் பற்றி மக்கள் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.