பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் அங்கம்தான்: பிரதமர் மோடி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் அங்கம்தான்: பிரதமர் மோடி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் ஒரு அங்கம்தான் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் ஒரு அங்கம்தான் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தேசப் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்து கொள்ளாமல், காஷ்மீர் பிரச்னைக்கு அரசமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டு நிரந்தர மற்றும் அமைதித் தீர்வு காண மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதி பர்ஹான் வானி, பாதுகாப்புப் படையினருடன் கடந்த மாதம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேரிட்ட வன்முறைச் சம்பவங்களுக்கு இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் பிரச்னைகள் எழுப்பின. இந்நிலையில், மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த புதன்கிழமை பேசியபோது, தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிகளின் கூட்டத்துக்கு வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அறிவித்தார்.
அதன்படி, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீர் பகுதியும், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஓர் அங்கம்தான். தேசப் பாதுகாப்பு விஷயத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளப்பட மாட்டாது. அதேசமயம், ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களின் நம்பிக்கையையும் நாம் பெற வேண்டும்.
காஷ்மீரில் நடைபெறும் சம்பவங்களால் ஒவ்வோர் இந்தியரையும் போல நானும் மிகவும் வேதனையடைந்துள்ளேன். இந்த விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே குரலில் பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது.
காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலைக்கு, பாகிஸ்தானால் ஆதரவு அளிக்கப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம்தான் காரணமாகும். ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த பல்வேறு மதத்தினரும், நாடு முழுவதும் வசித்து வருகின்றனர். அவர்களை அந்தந்த மாநில அரசுகள் அணுகி, தாங்கள் தற்போது வசிக்கும் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை ஜம்மு-காஷ்மீரில் வசிக்கும் உறவினர்களிடம் தெரிவிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நிரந்தரத் தீர்வுக்கு உறுதி:
ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பிரச்னைக்கு, அரசமைப்புச் சட்ட கோட்பாடுகளுக்கு உள்பட்டு நிரந்தர, அமைதித் தீர்வை காண்பதற்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. அரசமைப்பு சட்டத்துக்கு உள்பட்டு அனைத்து தரப்பினரின் துயரங்களுக்கும் தீர்வு காண்பதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது.
ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், பலூசிஸ்தானிலும் பாகிஸ்தான் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளது. அப்பகுதிகளில் நிகழ்த்தி வரும் அட்டூழியங்களுக்காக சர்வதேச சமூகத்திடம் பாகிஸ்தான் பதில் அளிக்க வேண்டும் என்றார் பிரதமர் மோடி.
கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் பேசியபோது, காஷ்மீரில் நிலவும் பதற்றத்தை தணிக்க மத்திய அரசு எத்தகைய நடவடிக்கையை எடுத்தாலும் அதற்கு தங்களது கட்சி முழு ஆதரவு அளிக்கும் என்றார்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, செய்தியாளர்களிடம் பேசியபோது, மத்திய அரசிடம் தாங்கள் ஆலோசனைகளை தெரிவித்திருப்பதாகவும், அதுகுறித்து ஆலோசிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாகவும் குறிப்பிட்டார்.
அனைத்துக் கட்சிக் கூட்டம் சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது. இதில் காஷ்மீர் பதற்றத்தை தணிக்கும் வகையில் மத்திய அரசு உடனடியாக நம்பிக்கைத் தரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தின. போராட்டக்காரர்கள் மீது பெல்லட் ரக துப்பாக்கிகளால் சுடுவதை நிறுத்த வேண்டும், பாதுகாப்புப் படையினருக்கு சிறப்பு அதிகாரங்கள் அளிக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை சில பகுதிகளில் இருந்து வாபஸ் பெற வேண்டும், ஜம்மு-காஷ்மீர் நிலவரத்தை நேரில் பார்வையிடுவதற்கு அங்கு அனைத்து கட்சிக் குழுவை அனுப்ப வேண்டும் என்று யோசனை தெரிவித்தன.
இதில், ஜம்மு-காஷ்மீருக்கு அனைத்துக் கட்சிக் குழுவை அனுப்பி வைப்பது தொடர்பாக எந்த வாக்குறுதியும் மத்திய அரசு தரப்பில் அளிக்கப்படவில்லை.
ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கருத்துத் தெரிவிப்பதும், அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாரென அறிவித்திருப்பதும் இந்த வாரத்தில் இது 2-ஆவது முறையாகும்.
காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டும்: மக்களவையில் தீர்மானம்
ஜம்மு-காஷ்மீரில் அமைதியும் ஒழுங்கும் திரும்புவதற்கு அவசர நடவடிக்கைகளை எடுக்கக் கோரும் தீர்மானம் மக்களவையில் வெள்ளிக்கிழமை ஒருமனதாக நிறைவேறியது.
ஜம்மு-காஷ்மீரில் நீடித்து வரும் வன்முறை, ஊரடங்கு ஆகியவற்றுக்கு கவலை தெரிவித்து மாநிலங்களவையில் ஒரு தீர்மானம் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இது போன்ற தீர்மானத்தை மக்களவையும் நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரியிருந்தார். இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த நாடும் ஓரணியில் நிற்க வேண்டும் என்று அவை கேட்டுக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அதை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் ஏற்றுக் கொண்டார்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் தொடர்பான தீர்மானத்தை மக்களவையில் அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் வெள்ளிக்கிழமை வாசித்தார். அதில், "ஜம்மு-காஷ்மீரில் அமைதியும், ஒழுங்கும் திரும்புவதற்கும், மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கும் அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது முக்கியமாகும்' என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, காஷ்மீர் தொடர்பான தீர்மானம் நிறைவேறிய சில நிமிடங்களில் மக்களவையில் மழைக்காலக் கூட்டத்தொடரை சுமித்ரா மகாஜன் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com