சட்டப்பூர்வ நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்: காங்கிரஸுக்கு பாஜக எச்சரிக்கை

பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களும்,
சட்டப்பூர்வ நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்: காங்கிரஸுக்கு பாஜக எச்சரிக்கை
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களும், செய்தித் தொடர்பாளர்களும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று பாஜக எச்சரித்துள்ளது.
கணக்கில் வராத ரொக்கம் ரூ.13,860 கோடி வைத்திருந்ததாக குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மகேஷ் ஷா தற்போது விசாரணை வளையத்துக்குள் வைக்கப்பட்டுள்ளார்.
அவருடன் பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் தொடர்புப்படுத்தி
பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அவற்றை மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நிராகரித்தார்.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது: காங்கிரஸ் மூத்த தலைவர்களும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்களும் குழந்தைத்தனமாக பேசி வருகின்றனர்.
132 ஆண்டு கால பாரம்பரியத்தை அக்கட்சி பிரதிபலிக்கவில்லை. தொழிலதிபர் மகேஷ் ஷாவுடன் பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை.
ஏதேனும் ஆதாரம் வைத்திருந்தால் இதுதொடர்பாக காங்கிரஸ் பேசட்டும். அவ்வாறும் இல்லையெனில், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுப்பது குறித்து சிந்திப்போம்.
பிரதமர் மோடிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம், ஊழலுக்கு எதிராக அவர் எடுத்துவரும் நடவடிக்கைகளை பலவீனப்படுத்தி விடலாம் என்று சிலர் கருதுகின்றனர்.
அந்த எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. ஊழல், கருப்புப் பணத்துக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை தொடரும். காங்கிரஸ் அரசு எப்போதும் ஊழலை ஆதரித்து வருகிறது.
உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் நடவடிக்கைக்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி தேர்தல்களில் தோல்வியைத் தழுவியபோதும், அதிலிருந்து எந்தவொரு பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை.
மேற்கு வங்க மாநிலம், துலாகர் பகுதியில் மத வன்முறை தூண்டிவிடப்படுகிறது.
ஆனால், போலீஸார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. குஜராத்தில் 2002-இல் நடைபெற்ற கலவரம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியவர்கள், இப்போது மேற்கு வங்கத்தில் நடைபெறும் வன்முறைகள் குறித்து கேள்வி எழுப்பாமல் இருப்பது ஏன்?
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பிறகு, மின்னணு பணப் பரிவர்த்தனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com