ராணுவத்தில் மகளிர் படைப்பிரிவு:மனோகர் பாரிக்கர் யோசனை

ராணுவத்தில் முழுவதும் மகளிர் மட்டுமே உள்ள படைப்பிரிவை உருவாக்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் யோசனை தெரிவித்துள்ளார்.
ராணுவத்தில் மகளிர் படைப்பிரிவு:மனோகர் பாரிக்கர் யோசனை
Updated on
1 min read

ராணுவத்தில் முழுவதும் மகளிர் மட்டுமே உள்ள படைப்பிரிவை உருவாக்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் யோசனை தெரிவித்துள்ளார்.

தில்லியில் இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் (ஃபிக்கி) மகளிர் பிரிவு திங்கள்கிழமை நடத்திய மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியதாவது:

ஜான்சி ராணி லட்சுமிபாய் முதல், கடவுளர்களில் துர்கா தேவி வரையிலான வீரப் பெண்களின் வரலாற்றைக் கொண்டது நமது தேசம். பின்னாள்களில் பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் போர்களங்களில் இருந்து விலக்கி வைக்கப்பட்டனர்.

மத்திய பாதுகாப்பு அமைச்சராக நான் பொறுப்பேற்றபோது, மகளிருக்கு பாதுகாப்புப் படையில் முக்கியத்துவம் அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யோசித்தேன். தேசிய பாதுகாப்பு அகாதெமியிலும், சைனிக் பள்ளிகளிலும் பெண்களைச் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும். ஏனெனில், அதன் மூலம்தான் பெண்களை ராணுவத்துக்கு தயார்படுத்த முடியும்.

ராணுவத்திலும், கடற்படையிலும் போர்முனையில் களமிறங்கும் பிரிவுகளில் மகளிர் சேர்க்கப்பட்டால், அமெரிக்கா, இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக மகளிருக்கு இத்தகைய முக்கியத்துவத்தை அளித்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணையும். இப்போதைக்கு அந்த இரு நாடுகளில் மட்டுமே பெண்கள் போர்முனைக்கும் செல்கின்றனர்.

ராணுவத்தில் பெண்கள் உயர்பதவிகளை வகிக்கும்போது அவர்களுக்கு கீழ் பணியாற்றும் வீரர்கள் உத்தரவுகளை ஏற்று செயல்படமாட்டார்கள் என்று கூறப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

மகளிருக்கு ராணுவத்தில் உரிய முக்கியத்துவம் அளிப்பதில் நமக்கு இப்போதுள்ள ஒரே பிரச்னை உள்கட்டமைப்பு வசதிகளில் உள்ள குறைபாடுகள்தான். மற்றபடி பெண் அதிகாரிகளால் ஆண்கள் படைப்பிரிவுக்கு தலைமை தாங்க முடியும்.

ராணுவத்தின் முப்படைகளுக்கும் பெண்களே தளபதிகளாகப் பொறுப்பேற்று அவர்களுடன் நான் அமர்ந்திருக்கும் காலம் விரைவில் வரலாம். மகளிருக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை எடுப்பது குறித்து மும்படைத் தளபதிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்த இருக்கிறேன் என்றார் மனோகர் பாரிக்கர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com