
இருதரப்பு உறவை மேம்படுத்துவதே, ஆப்பிரிக்க நாடுகளில் தான் மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணத்தின் நோக்கம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
4 ஆப்பிரிக்க நாடுகளில் பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 7ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் 11-ஆம் தேதி வரை 5 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணத்தின் முதல்கட்டமாக, பிரதமர் நரேந்திர மோடி மொசாம்பிக் நாட்டுக்கு வியாழக்கிழமை புறப்பட்டுச் செல்கிறார். அங்கு அவர், அந்நாட்டு அதிபர் பிலிப் நியூசியுடன் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
அதைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவில் வெள்ளிக்கிழமையும் (ஜூலை 8), சனிக்கிழமையும் (ஜூலை 9) மோடி சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். இந்தப் பயணத்தின்போது, தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா மற்றும் அந்நாட்டுத் தலைவர்களை சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார். அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியாவை உறுப்பினராகச் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளில் தென்னாப்பிரிக்காவும் ஒன்று எனக் கூறப்படுகிறது. இந்த பயணத்தின்போது, தென்னாப்பிரிக்க தலைவர்களுடன் இதுகுறித்து பிரதமர் மோடி பேசி, அந்நாட்டின் ஆதரவைத் திரட்டலாம் எனத் தெரிகிறது.
அதன்பின்னர், தான்சானியா நாட்டுக்கு மோடி 10ஆம் தேதி செல்கிறார். ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் கடைசிக்கட்டமாக கென்யாவில் மோடி சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.
அப்போது நைரோபி பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே அவர் உரையாற்றவுள்ளார். தனது ஆப்பிரிக்க பயணம் குறித்து சுட்டுரையில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
இந்தியா-ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவை மேம்படுத்துவதே, எனது ஆப்பிரிக்க பயணத்தின் நோக்கமாகும். இந்த ஆப்பிரிக்க பயணமானது, மொசாம்பிக்கில் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின்போது, தேசப் பிதா மகாத்மா காந்தியுடன் நெருங்கிய தொடர்புடைய இடங்களான பீனிக்ஸ் செட்டில்மென்ட், பீட்டர்மேரிட்ஸ்பர்க் ரயில் நிலையம் ஆகிய இடங்களுக்குச் செல்ல இருக்கிறேன். தென்னாப்பிரிக்காவின் மறைந்த முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா அறக்கட்டளை அமைப்புக்குச் சென்று, அவருக்கு அஞ்சலி செலுத்த உள்ளேன்.
கென்ய சுற்றுப்பயணத்தின்போது, நைரோபியில் இருக்கும் மகாத்மா காந்தி சிலைக்கும், மறைந்த அந்நாட்டு முதல் அதிபர் மிஜி ஜோமோ கென்யாட்டா சிலைக்கும் மரியாதை செலுத்தவுள்ளேன். நைரோபி பல்கலைக்கழகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், அந்நாட்டு மாணவர்களுடன் கலந்துரையாட இருக்கிறேன். கென்ய பயணத்தின்போது, அந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியினரை சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி ஆகியோர் ஆப்பிரிக்க நாடுகளில் அண்மையில் சுற்றுப்பயணம் செய்தனர். அதையடுத்து, பிரதமர் மோடியும் ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் செய்யவிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.