முழு மரியாதையுடன் திருவள்ளுவர் சிலையை நிறுவ உத்தரகண்ட் மாநில அரசு உறுதி :தருண் விஜய் விளக்கம்

ஹரித்துவாரில் கங்கை நதிக் கரை அருகே உள்ள அரசு விருந்தினர் இல்ல வளாகத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை, முழு மரியாதையுடன் வேறு பகுதியில் நிறுவப்படும் என்று உத்தரகண்ட் மாநில அரசு உறுதியளித்துள்ளதாக அம்மாநிலத்தைச் சேர்ந்த பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜய் தெரிவித்தார்.

ஹரித்துவாரில் கங்கை நதிக் கரை அருகே உள்ள அரசு விருந்தினர் இல்ல வளாகத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை, முழு மரியாதையுடன் வேறு பகுதியில் நிறுவப்படும் என்று உத்தரகண்ட் மாநில அரசு உறுதியளித்துள்ளதாக அம்மாநிலத்தைச் சேர்ந்த பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜய் தெரிவித்தார்.

சிலைக்கு எதிர்ப்பு: தமிழகத்தின் நாமக்கல்லில் வடிவமைக்கப்பட்ட 12 அடி உயர திருவள்ளுவர் சிலை, கடந்த ஜூன் 29-ஆம் தேதி நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் திருவள்ளுவர் சிலையை கங்கை நதிக் கரையின் ஓரமாக நிறுவ அங்குள்ள சாதுக்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அச்சிலையை கங்கைக் கரை அருகே உள்ள மாநில அரசு பொதுப்பணித் துறை விருந்தினர் இல்ல வளாகத்தில் தாற்காலிகமாக நிறுவ உத்தரகண்ட் அரசு நடவடிக்கை எடுத்தது.

இதையடுத்து, சிலையை உத்தர பிரதேச மாநில ஆளுநர் ராம் நாயக், மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் மற்றும் தமிழறிஞர்கள் முன்னிலை சிலை திறந்து வைக்கப்பட்டது. அப்போது திருவள்ளுவர் சிலையை மரியாதைக்குரிய வகையில் பொது இடத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, திருவள்ளுவர் சிலையை வேறு இடத்தில் நிறுவுவதற்கான பணிகளை உத்தரகண்ட் மாநில அரசு மேற்கொண்டு வந்தது.

நாளிதழ் செய்தி: இந்நிலையில், ஒர் ஆங்கில நாளேட்டில், "ஹரித்துவாரில் திருவள்ளுவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை' என்ற தலைப்பில் திங்கள்கிழமை புகைப்படத்துடன் செய்தி வெளியானது. அதில் "திருவள்ளுவர் சிலை அகற்றப்பட்டு பிளாஸ்டிக் பையில் போட்டு கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் மேளா பவன் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. சிலை வைக்க உரிய அனுமதியை தருண் விஜய் பெறத் தவறி விட்டார்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை அமைய காரணமாக இருந்த தருண் விஜய் சீனாவில் உள்ளதால், அவரை "தினமணி' நிருபர் தொடர்பு கொண்டு உண்மை நிலவரத்தை கேட்டறிந்தார். அப்போது தருண் விஜய் கூறியதாவது:

ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியைப் படித்ததும் அதிர்ச்சி அடைந்தேன். அதன் நிருபர் விஷமத்தனமாக இந்த விஷயத்தின் தன்மையை அறியாமலும் தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையிலும் செய்தியைப் பதிவு செய்துள்ளார்.

மேளா பவன் வளாகத்தில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டிருந்த நிலை பற்றி மாநில அரசு தலைமைச் செயலரைத் தொடர்பு கொண்டு பேசினேன்.

"சிலை அப்புறப்படுத்தப்படவில்லை; வேறு இடத்தில் வைப்பதற்கு ஏதுவாக அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் வேறு இடத்தில் முழு மரியாதையுடன் திருவள்ளுவர் சிலையை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விஷயத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை உத்தரகண்ட் அரசு மதிக்கிறது' என மாநில அரசு தலைமைச் செயலர் கூறியதாக தருண் விஜய் எம்.பி. கூறினார்.

மாவட்ட நிர்வாகம் மீது புகார்:

திருவள்ளுவர் சிலையை கங்கை நதிக் கரைப் பகுதியில் நிறுவுவதற்கான ஒப்புதலை உத்தரகண்ட், உத்தர பிரதேசம் ஆகிய இரு மாநில அரசுகள் இணைந்தே வழங்கின. சிலை திறப்பு விழாவுக்கு முந்தைய நள்ளிரவில் ஒரு பிரிவு சாதுக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், எங்கள் அனுமதியின்றி சிலையை கங்கை கரைப் பகுதியில் இருந்து அகற்றி வேறு இடத்தில் வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த விஷயத்தில் பொறுப்பின்றி செயல்பட்டதற்காக மாவட்ட ஆட்சியரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

மேலும், திருவள்ளுவர் சிலையை வேறு இடத்தில் வைக்க வேண்டியது உத்தரகண்ட் மாநில அரசின் பொறுப்பு. திருவள்ளுவர் சிலைக்கு அவமரியாதை இழைக்கக் காரணமாக இருந்த மாவட்ட நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரகண்ட் முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.

இந்த விஷயத்தில் ஒரு பிரிவு சாதுக்கள் தெரிவித்துள்ள ஆட்சேபம் குறித்து அவர்களுடன் பேசித் தீர்வு காணப்படும்.

திருவள்ளுவரை ஹரித்துவாரில் இருந்து அகற்ற எந்த சக்தியாலும் முடியாது. சீனாவில் இருந்து இரு தினங்களில் தில்லி திரும்புவேன். அதன் பிறகு நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு திருவள்ளுவர் சிலை முழு மரியாதையுடன் வேறு இடத்தில் வைக்கப்படுவதை உறுதிப்படுத்துவேன்' என்றார் தருண் விஜய்.

ஹரித்துவாருக்கு பயணம்:

இதற்கிடையே, அகில இந்திய தமிழ்ச் சங்கங்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் இரா. முகுந்தன் தில்லியில் இருந்து ஹரித்வாருக்கு திங்கள்கிழமை இரவு சென்றுள்ளார். இது பற்றி அவர் "தினமணி' நிருபரிடம் கூறுகையில், "உத்தரகண்ட் மாநில ஆளுநர், முதல்வர், ஹரித்வார் மாவட்ட ஆட்சியர், பிரச்னை எழுப்பும் சாதுக்கள் உள்ளிட்டோரை சந்தித்து, திருவள்ளுவர் சிலையை வேறு இடத்தில் வைக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ள இருக்கிறோம். இந்த விஷயத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து தமிழர்களும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்' என்றார்.

சிலை புறக்கணிப்பு தேசிய அவமானம்:வைரமுத்து

கங்கைக் கரையில் திருவள்ளுவர் சிலை புறக்கணிக்கப்பட்டுக் கிடப்பது திருவள்ளுவருக்கு நேர்ந்த அவமானம் அல்ல. இந்திய தேசியத்திற்கு நேர்ந்த அவமானம் என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.

இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கங்கைக் கரையில் திருவள்ளுவர் சிலை புறக்கணிக்கப்பட்டுக் கிடப்பது உணர்வுள்ள தமிழர்கள் நெஞ்சில் வெட்டுக்கத்தி வைத்ததுபோல் வேதனை தருகிறது. அறிவு ஒன்றுதான் மொழி பாராதது; இனம் பாராதது; மதம் பாராதது.

அந்த அறிவே அவமானமுறும்போது தமிழர்கள் மட்டுமல்ல; இந்தியாவின் அறிவுலகமே தலைகுனிய வேண்டியுள்ளது. வால்மீகி, காளிதாசன், தாகூர் போன்ற இந்திய இலக்கியச் சிற்பிகளைத் தமிழர்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடும்போது திருவள்ளுவர் வடநாட்டில் தலைகீழாய்க் கிடப்பது இந்திய இலக்கியத்துக்குப் பெருமை சேர்ப்பது ஆகாது.

ஹரித்துவாரில் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற பிறகே திருவள்ளுவர் சிலை அங்கு கொண்டு செல்லப்பட்டது. சிலை நிறுவப்படுவதற்கு முதல்நாள் சில மதவாதிகள் நள்ளிரவில் வந்து சர்ச்சையில் ஈடுபட்டுத் தடுத்ததாக அறிகிறோம்.

திருவள்ளுவர் எந்த மதத்துக்கும் உரியவரும் அல்லர்; எந்த மதத்துக்கும் பகைவரும் அல்லர்.

வெந்த புண்ணில்...:

திருவள்ளுவர் ஒரு தலித் என்பதாகக் கருதப்பட்டு நிராகரிக்கப்படுகிறார் என்ற செய்தி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது. திருவள்ளுவரின் சாதி, சமூகம் எதற்கும் இதுவரை ஆதாரமில்லை. ஆதாரமென்று காட்டப்படுவன எல்லாம் வெறும் புனை கதைகளே. அவர் தலித் என்று கொள்ளப்பட்டாலும் தாழ்த்தப்பட்ட ஒரு தமிழனின் ஞானம் கொண்டாடப்பட வேண்டுமே தவிர மறுதலிக்கப்படக்கூடாது.

ஹரித்துவாருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன தொடர்பு என்று சிலபேர் வினா விடுக்கிறார்களாம். "யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு'' என்ற திருவள்ளுவரின் கூற்றுப்படி கற்றவனுக்கு நிலவுலகில் எல்லா மண்ணும் சொந்த மண்தான்.

திருவள்ளுவருக்கும் ஹரித்துவாருக்கும் தொடர்பில்லை என்றால் தமிழனுக்கும் இந்தியாவுக்கும் தொடர்பில்லை என்றாகிவிடும். அப்படி ஆவதை யாரும் விரும்பமாட்டார்கள்.

நேரடியாகத் தலையிட்டு...:

உத்தரகண்ட், மேகாலயம் ஆகிய இரண்டு மாநில ஆளுநர்களும் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்ட பிறகும் திருவள்ளுவர் சிலை புறக்கணிக்கப்படுவது அரசைவிட அந்த மாநிலங்களின் மதவாத சக்திகள் மேலோங்கி இருக்கின்றன என்று அடையாளங்காட்டும் அத்தாட்சிகளாகும். உத்தரகண்ட் அரசு இந்த விஷயத்தில் நேரடியாகத் தலையிட்டுத் திருவள்ளுவரின் பெருமையை மீட்டுக் கொடுக்க வேண்டும்.

திருவள்ளுவரின் பெருமை...:

உத்தரப்பிரதேச அரசும் சிலையின் நிலைப்பாட்டுக்குத் துணையிருக்க வேண்டும். தலைகீழாய்ப் பிடித்தாலும் நெருப்பு மேல் நோக்கித்தான் எரியும். கவிழ்க்கப்பட்டாலும் திருவள்ளுவரின் பெருமை நிமிர்ந்தே நிலைக்கும். தமிழ் உணர்வாளர்கள் கிளர்ச்சிக்குத் தள்ளப்படும் முன் திருவள்ளுவர் மீட்கப்படுவார் என்று நம்புகிறோம் என்று வைரமுத்து அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com