
புதிதாக வாங்கிய குளிர்பதனப் பெட்டியை மாற்றித் தர உதவுமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு சுட்டுரையில் (டுவிட்டர்) சமூக வலைதளப் பயன்பாட்டாளர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுபோன்ற விவகாரங்களில் தன்னால் உதவ இயலாது என்று அதற்கு சுஷ்மா ஸ்வராஜ் பதில் பதிவிட்டுள்ளார்.
ஐஆர்விபாஸ்வான் என்ற சுட்டுரை முகவரியிலிருந்து சுஷ்மா ஸ்வராஜுக்கு அனுப்பப்பட்ட அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
அன்புக்குரிய அமைச்சருக்கு, சாம்சங் நிறுவனத்தின் குளிர்பதனப் பெட்டியொன்றை அண்மையில் வாங்கினேன். அது இரு மாதங்களில் செயலிழந்து விட்டது. குறைபாடுடைய அந்தக் குளிர்பதனப் பெட்டியை மாற்றி தருவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் மறுத்து விட்டனர். எனவே, இந்த விவகாரத்தில் தலையிட்டு எனக்கு நீங்கள் (சுஷ்மா) உதவ வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கு சுஷ்மா ஸ்வராஜ் அளித்த பதில் பதிவில், "சகோதரரே, இதுபோன்ற விவகாரங்களில் என்னால் உதவ இயலாது; இதைவிட முக்கியமான மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் நான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.