தேடப்படும் குற்றவாளி மல்லையா :நீதிமன்றம் அறிவிப்பு

தொழிலதிபர் விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக மும்பையில் உள்ள சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் (பிஎம்எல்ஏ) செவ்வாய்க்கிழமை அறிவித்தது. நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு, விஜய் மல்லையாவுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
தேடப்படும் குற்றவாளி மல்லையா :நீதிமன்றம் அறிவிப்பு

தொழிலதிபர் விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக மும்பையில் உள்ள சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் (பிஎம்எல்ஏ) செவ்வாய்க்கிழமை அறிவித்தது. நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு, விஜய் மல்லையாவுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

ஐடிபிஐ வங்கியிடம் இருந்து ரூ.900 கோடியை கடனாக வாங்கிக் கொண்டு திரும்பச் செலுத்தாத விவகாரத்தில், விஜய் மல்லையாவுக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் விஜய் மல்லையா நேரில் ஆஜராகாததால், அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்று அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடியாணையை மும்பை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்தது. இதேபோல், மேலும் சில வழக்குகளிலும் விஜய் மல்லையாவுக்கு எதிராகக் கைது ஆணைகளை நீதிமன்றங்கள் பிறப்பித்துள்ளன.

இதனிடையே, பிரிட்டன் தலைநகர் லண்டனில் தற்போது இருக்கும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பும்படி அந்நாட்டு அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், அந்தக் கோரிக்கையை பிரிட்டன் அரசு நிராகரித்து விட்டது. மல்லையாவை நாடு கடத்தும்படி கோரிக்கை விடுத்தால் பரிசீலிக்கத் தயார் என பிரிட்டன் அறிவித்தது.

இதையடுத்து, மும்பையில் உள்ள பிஎம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 82ஆவது பிரிவின் கீழ் அமலாக்கத் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், காசோலை மோசடி உள்பட பல்வேறு வழக்குகளில் விஜய் மல்லையாவுக்கு எதிராகக் கைது உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன என்றும், சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கிலும் அவர் தேடப்படுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு, மும்பையில் உள்ள பிஎம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பி.ஆர். பாவ்கே முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பி.ஆர். பாவ்கே கூறுகையில், "அமலாக்கத் துறையின் மனு ஏற்கப்படுகிறது; விஜய் மல்லையா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுகிறார்' என்றார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 82ஆவது பிரிவின்படி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் 30 நாள்களுக்குள் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றத்தால் எழுத்துப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும். அதன்படி நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று விஜய் மல்லையா ஆஜராகாதபட்சத்தில், அவருக்கு எதிராகக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 83ஆவது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை வலியுறுத்த முகாந்திரம் உள்ளது.

இதன்மூலம், விஜய் மல்லையா தலைமறைவுக் குற்றவாளியாகக் கருதப்பட்டு, அவருக்குச் சொந்தமான அனைத்து சொத்துகளையும் அமலாக்கத் துறையால் முடக்க முடியும். அதேபோல், பிரிட்டனில் இருக்கும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கும் நீதிமன்றத்தின் அறிவிப்பு உதவிகரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com