நிலம் கிடைத்தால் தமிழகத்தில் ரப்பர் ஆராய்ச்சி மையம் அமைக்கத் தயார்: பொன். ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் சுமார் 272 ஹெக்டேர் நிலம் கிடைத்தால் ரப்பர் ஆராய்ச்சி மையம் அமைக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று மத்திய கப்பல், சாலை போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நிலம் கிடைத்தால் தமிழகத்தில் ரப்பர் ஆராய்ச்சி மையம் அமைக்கத் தயார்:  பொன். ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் சுமார் 272 ஹெக்டேர் நிலம் கிடைத்தால் ரப்பர் ஆராய்ச்சி மையம் அமைக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று மத்திய கப்பல், சாலை போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக தில்லியில் முதல்வர் ஜெயலலிதாவை செவ்வாய்க்கிழமை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் முக்கிய சாலை, கட்டுமானத் திட்டங்கள் குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்தினேன்.

குறிப்பாக, குளச்சலில் வர்த்தக துறைமுகம் வர வேண்டிய அவசியம் குறித்து பேசினேன். குளச்சலில் மீன்பிடித் துறைமுகம் அமைவதற்கு முன்பே அது குறித்து மீனவ சமுதாயத்தினர் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளதாக முதல்வர் சுட்டிக்காட்டினார். அந்தத் திட்டத்தால் மீனவர்கள் மிகவும் பலன் அடைவர் என்பதை அவரிடம் விளக்கினேன்.

கேரளத்தில் உள்ளது போல தமிழகத்தில் ரப்பர் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். அந்த மையம் அமைக்க சுமார் 272 ஹெக்டேர் நிலம் தேவைப்படும் என்றும், அந்த இடம் கிடைத்தால் ரப்பர் ஆராய்ச்சி மையத்தை உருவாக்க மத்திய அரசு தயார் என்றும் கூறினேன். இது பற்றி விரைவில் அதிகாரிகளுடன் பேசி முடிவெடுப்பதாக முதல்வர் கூறினார்.

கிழக்கு கடற்கரைச் சாலையில் சுமார் 150 கி.மீ. தூரம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்தச் சாலையை மத்திய அரசிடம் அளித்தால், கிழக்கு கடற்கரைச் சாலையை நான்கு வழிச்சாலையை மாற்ற முடியும் என்பதையும் முதல்வரிடம் தெரிவித்தேன் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

நிர்மலா சீதாராமன் சந்திப்பு: தில்லியில் முதல்வர் ஜெயலலிதாவை மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

விசாகப்பட்டினம்-சென்னை இடையிலான தொழிலக சாலை திட்டத்தை தூத்துக்குடி வரை விரிவுபடுத்துவது பற்றி முதல்வருடன் ஆலோசனை நடத்தினேன். இதுதொடர்பாக விரிவாக விவாதிக்க தமிழக அரசின் குழுவை அனுப்புவதாக முதல்வர் தெரிவித்தார்.

சிறிய துறைமுகமாக உள்ள குளச்சலை மத்திய அரசு ஏற்று மேம்படுத்த தமிழக அரசு இசைவு தெரிவித்துள்ளதால் தூத்துக்குடி முதல் குளச்சல் வரையில் சரக்கு பாதையை அமைப்பது குறித்து யோசனை தெரிவித்தேன். அதை வரவேற்ற முதல்வர், இக்கோரிக்கையை பிரதமரிடம் ஏற்கெனவே நினைவூட்டியதாகத் தெரிவித்தார் என்றார் நிர்மலா சீதாராமன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com