யோகா மேம்பாட்டுக்கு 2 விருதுகள்: பிரதமர் மோடி அறிவிப்பு

தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் யோகா மேம்பாட்டுக்காகப் பணியாற்றுவோருக்கு அடுத்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
யோகா மேம்பாட்டுக்கு 2 விருதுகள்: பிரதமர் மோடி அறிவிப்பு
Updated on
2 min read

தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் யோகா மேம்பாட்டுக்காகப் பணியாற்றுவோருக்கு அடுத்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

2-ஆவது சர்வதேச யோகா தினம் செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சண்டீகரின் கேபிடால் வளாகத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பொதுமக்களுடன் இணைந்து யோகாசனம் செய்தார். பள்ளிச் சிறார்கள் முதல் பாதுகாப்புப் படை வீரர்கள் வரை பலதரப்பட்ட மக்கள் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:

உடலும், உள்ளமும் நலமாக இருக்க வேண்டுமென்றால் அனைவரும் யோகாசனப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில் நீரிழிவு நோயாளிகள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. யோகாசனத்தை முறைப்படி தவறாமல் செய்துவந்தால் இந்த நோயின் பாதிப்புகளில் இருந்து பெருமளவில் விடுபட முடியும். இந்நோயைக் கட்டுப்படுத்த யோகா பயிற்சியாளர்கள் உதவ வேண்டும். யோகா பயற்சி மூலம் நீரிழிவு நோயில் இருந்து விடுபட முடியும் என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த இந்த ஆண்டு முழுவதும் முயற்சி மேற்கொள்ள உறுதியேற்க வேண்டும்.

இதுபோல ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு நோய்களுக்கு யோகா எவ்வாறு தீர்வுகொடுக்கும் என்பது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். யோகா பயிற்சி செய்வதால் உடல் உபாதைகளில் இருந்து விடுபடுவது மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும். மனிதகுலம் வாழ்க்கையை முழுமையாகவும், ஆக்கப்பூர்வமாகவும் வாழ்வதற்கு யோகாசனப் பயிற்சி மேற்கொள்வது மிகச்சிறந்த வழிமுறையாகும்.

2 விருதுகள்: உலகத்துக்கு இந்தியா அளித்த முக்கியக் கொடை யோகாசனம். சர்வதேச யோகா தினத்தை ஐ.நா. அறிவித்தது நமது பாரம்பரியத்துக்குக் கிடைத்த அங்கீகாரமாகும். இரண்டாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் இந்த தினத்தில் இந்திய அரசு சார்பில் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன்.

யோகாசனத்தின் மேம்பாட்டுக்காக சிறப்பாகப் பணியாற்றுவோர் அடுத்த ஆண்டு முதல் விருது வழங்கி கெளரவிக்கப்படுவார்கள். சர்வதேச அளவில் சிறந்த பங்களிப்புக்கு ஒரு விருதும், தேசிய அளவில் சிறந்த பங்களிப்புக்கு மற்றொரு விருதும் வழங்கப்படும்.

வாழ்வின் அங்கம் யோகா:

யோகாசனம் என்பது மதம் சார்ந்தது அல்ல; அது வாழ்க்கைக்கான அறிவியல். இந்தியா போன்ற வளரும் நாட்டில் யோகாசனம் மூலம் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதால் மருத்துவச் செலவை பெருமளவில் குறைக்க முடியும். எனவே, மக்கள் அனைவரும் இனிமேலும் தாமதிக்காமல் யோகாசனத்தை தங்கள் வாழ்வில் ஓர் அங்கமாக்க வேண்டும். இப்போது செல்லிடப்பேசி எப்படி உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டதோ, அதுபோல யோகாவும் இருக்க வேண்டும். இது கடினமான காரியமல்ல.

யோகாசனம் என்பது தொழிலாகவும் மாறி பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது. சர்வதேச அளவில் யோகாவின் சிறப்புகளை முன்னெடுத்துச் செல்ல மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று மோடி பேசினார்.

மாற்றுத் திறனாளிகள் பங்கேற்பு:

மோடியுடன் இணைந்து 150-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளும் யோகாசனப் பயிற்சி மேற்கொண்டனர். அவர்கள் சக்கர நாற்காலியில் அமர்ந்து யோகாசனம் செய்தனர். இவர்களில் பலர், ராணுவத்தில் பணியாற்றி பல்வேறு சண்டைகளின்போது காயமடைந்து உடல் உறுப்புகளை இழந்தவர்களாவர். பயிற்சிக்கு முன்பு இவர்களுடன் மோடி கலந்துரையாடினார். யோகாசனப் பயற்சியில் மாற்றுத்திறனாளிகள் அதிகஅளவில் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.

யோகா பயிற்சியை முடித்த பிறகு நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்களுடனும் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர்களின் வேண்டுகோளை ஏற்று "செல்பி' எடுத்துக் கொண்டார்.

மக்களுடன் இணைந்து... இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர், மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ், மாநில பாஜக தலைவர் சுபாஷ் பராலா, எம்.பி., எம்எல்ஏக்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் மோடி முதல் வரிசையைத் தவிர்த்துவிட்டு கடைசி வரிசைக்குச் சென்று பொதுமக்களுடன் இணைந்து யோகாசனப் பயற்சியில் ஈடுபட்டார்.

மோடியின் கோரிக்கையை ஏற்று ஜூன் 21-ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. கடந்த ஆண்டு அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com