
வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் 5 கோடி குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் 1.5 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கப்பட உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 5 கோடி இலவச இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தின் பாலியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் இத்திட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில்,
பல பிரதமர்களை வழங்கிய உத்திரப்பிரேசத்தில் இன்னும் வறுமை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஏழைகள் ஏற்றம் பெற்றால் மட்டும்தான் வறுமையை ஒழிக்க முடியும். ஏழைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்புகள், வீடுகள், குடிநீர், மின்சார வசதிகள் வழங்கப்பட வேண்டும். வறுமையை ஒழிக்கும் போராட்டத்தில் எனது தலைமையிலான அரசு ஈடுபட்டுள்ளது.
60 ஆண்டுகாலத்தில் 13 கோடி சமையல் கேஸ் இணைப்புகள்தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அடுத்த 3 ஆண்டுகளில் 5 கோடி கேஸ் இணைப்புகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு உருளை ஆண்டுக்கு 12 எண்ணிக்கையில் மானிய விலையில் வழங்கப்படுகிறது. மானியச்சுமையை குறைக்கும் வகையிலும், முறைகேடுகளை தடுக்கவும் வங்கிக்கணக்கு மூலம் நேரடியாக மானியம் வழங்கப்படுகிறது.
இதுதவிர, வசதிபடைத்தவர்கள் மானியத்தை கைவிட வேண்டும் என்ற பிரசாரத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஜனவரியில் துவக்கி வைத்தார். மானியத்தை கைவிட்டதன் மூலம் சேமிக்கப்படும் நிதியில் ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்குகிறது மத்திய அரசு.
மானியத்தை கைவிடுங்கள் என்ற மோடியின் வேண்டுகோளை ஏற்று இதுவரை 1.13 கோடி பேர் மானியத்தை கைவிட்டு, சந்தை விலையில் சமையல் எரிவாயு உருளை வாங்குகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 16.44 லட்சம் பேர் மானியத்தை கைவிட்டுள்ளனர். உத்தர பிரதேசம் (13 லட்சம் பேர்), டெல்லி (7.26 லட்சம் பேர்) என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், தில்லி, கர்நாடகா, தமிழ்நாடு ஆகியவற்றில் உள்ள மொத்த வாடிக்கையாளர்களில் ஏறக்குறைய பாதி பேர் மானியத்தை கைவிட்டுள்ளனர்.