
புது தில்லி : இந்தியாவில் விவாகரத்து செய்யும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், அதிலும் படித்த தம்பதிகளே அதிகமாக விவாகரத்து கோருவதாகவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்ற விடுமுறைக் கால அமர்வான நீதிபதிகள் ஏ.எம். சாப்ரி மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு ஒரு விவகாரத்து வழக்கு விசாரணை நேற்று வந்தது.
விசாரணையின் போது பேசிய நீதிபதிகள், "ஏன் இப்படி படித்த நபர்கள் ஒரு சிறிய காரணத்துக்காக விவகாரத்துக் கோருகிறுர்கள்.. சண்டை போடுகிறீர்கள். இதனை ஒன்றாக அமர்ந்துபேசி உங்களுக்குள்ளேயே தீர்த்துக் கொள்ளக் கூடாதா" என்று கருத்துக் கூறினர்.
மேலும், இவர்கள் இருவரது தரப்பினரும் ஒன்றாக பேசி ஒருவருக்குள் ஒருவர் சமரசம் செய்து வைக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம். மேலும் உங்களை தம்பதியராகப் பார்ப்பதையே நீதிமன்றம் விரும்புகிறது என்றும் ஆலோசனை வழங்கினர்.
முன்பெல்லாம் திருமண பந்தம் தொடர்பான ஒரு சில வழக்குகள்தான் உச்ச நீதிமன்றத்துக்கு வரும். ஆனால், தற்போது தனிநபர் உரிமை விழிப்புணர்வு அடைந்துவிட்டதாலும், பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள் அதிகரித்திருப்பதும் (ஒரு சில பெண்கள் இதனை தவறாகப் பயன்படுத்துவதும் உண்டு), மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை போன்றவற்றால் உள்ளூர் நீதிமன்றங்களில் குடும்பப் பிரச்னை தொடர்பான வழக்குகள்தான் அதிகம் வருகிறது.
இந்த நீதிமன்ற அமர்வு முன்பு இதேபோன்ற விவகாரத்து வழக்கு வந்திருந்தது. எனவே, தம்பதிகள் விடுமுறை எடுத்து அதனை ஒன்றாகக் கழித்து மீண்டும் தங்களது வாழ்க்கையை புதிதாகத் துவக்குங்கள் என்று அறிவுறுத்தினர்.