
நாட்டை தவறான பாதையில் வழி நடத்தமாட்டேன் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்து 2 ஆண்டுகள் ஆனதையொட்டி ‘விகாச பர்வ‘ என்ற பெயரில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கர்நாடக மாநிலம் தாவணகெரே நகரில் இன்று சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பேசினார்.
நாட்டின் வளர்ச்சி பற்றி உங்களிடம் பேச எனக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஏசி அறையில் அமர்ந்து கொண்டு ஏராளமான மக்கள் வெயிலில் ஏன் அவதிப்படுகின்றனர் என யோசித்தால் முடிவு எதுவும் வராது.
நாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, அரசின் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்கள். இதற்கு காரணம், நாட்டில் ஜனநாயகத்தை ஆதரித்து பேசும் சிலர் இருக்கின்றனர். ஆனால், அவர்கள் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்க மறுப்பதேயாகும்.
ஒரு ரூபாய்க்கு டீ வாங்க முடியாத மக்களால், இன்று 1 ரூபாய்க்கு காப்பீடு பெற்றுள்ளனர். இதனால் பலர் பயன்பெற்றுள்ளனர்.
தூய்மை இந்தியா திட்டம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இது பல ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை வழங்கும் போது, அவர்கள் மண்ணிலிருந்து தங்கத்தை அறுவடை செய்வார்கள்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநில முதல்வர்களை சந்தித்துள்ளேன். அவர்களிடம் வறட்சியை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் எனக் கூறியுள்ளேன். இடைத்தரகர்கள் இல்லாத அரசை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
நம் நாட்டு மக்கள் தேவையில்லாத பல சட்டங்களால் கடும் துன்பப்பட்டு வருகின்றனர். அதுபோன்ற மக்களுக்கு சுமையாக உள்ள 1200 சட்டங்களை நீக்கியுள்ளோம்.
இன்னும் ஒரு சில விஷயங்கள் செய்யாமல் இருக்கலாம், ஆனால் நாட்டை தவறான பாதையில் செல்ல விட மாட்டேன். பல்வேறு திட்டங்கள் பல்வேறு துறைகளில் கொண்டு வரப்பட்டுள்ளன.
உங்களை போன்ற ஏராளமான மக்கள் என் மீது அன்பு வைத்துள்ளனர். இதனால், தவறான பாதையில் செல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நாட்டை தவறான பாதைக்கு அழைத்து செல்ல மாட்டேன்.
மக்கள் மாற்றத்தை உணர்கிறார்கள். நாட்டை புதியதோர் உச்சத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். அதற்கு மக்களின் ஆதரவு தேவை எனக் கூறினார்.