

இந்தியாவிடம் புகலிடம் கோரி, பலூசிஸ்தான் குடியரசுக் கட்சியின் தலைவர் பிரஹம்தக் புக்தி தாக்கல் செய்த மனுவை பாதுகாப்பு அமைப்புகள் ஆய்வு செய்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்கக் கோரி நீண்டகாலமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிராக அந்நாட்டு ராணுவத்தினர் அங்கு பல்வேறு அடக்குமுறைகளைக் கையாண்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்தத் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி அங்கு மிகப் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தி வந்த பலூசிஸ்தான் குடியரசுக் கட்சித் தலைவரான பிரஹம்தக் புக்தியை பாகிஸ்தான் அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாடு கடத்தியது.
இதையடுத்து, அவர் ஸ்விட்சர்லாந்தில் தஞ்சமடைந்திருக்கிறார். இந்நிலையில், தனக்கு புகலிடம் கோரி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் புக்தி அண்மையில் விண்ணப்பித்தார். எனினும், இது உள்நாட்டு விவகாரம் என்பதால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுப்பியது. இதையடுத்து, இந்த மனுவை உள்துறை அமைச்சக அதிகாரிகள் பரிசீலித்து வந்தனர். இந்நிலையில், இது சற்று தீவிரமான விவகாரம் என்பதால் இந்த மனு குறித்து மத்திய அமைச்சரவை முடிவெடுக்கும் எனக் கூறப்படுகிறது.
எனவே, மத்திய அமைச்சரவைக்கு அனுப்புவதற்கு முன்பு புக்திக்கு புகலிடம் கொடுப்பதால் ஏற்படும் சாதக-பாதக அம்சங்கள் குறித்து உளவுத்துறை, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகள் ஆய்வு செய்து வருகின்றன.
இதுதொடர்பாக பாதுகாப்பு அமைப்புகள் அளிக்கும் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சரவை முடிவெடுக்கும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.