ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவு திமுகவுக்கு சாதகம் என்று கூற முடியாது: ப.சிதம்பரம்

ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் முடிவு, காங்கிரஸ் கட்சியின் தோழமை கட்சியான திமுகவுக்கு சாதகமாக இருக்கும்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவு திமுகவுக்கு சாதகம் என்று கூற முடியாது: ப.சிதம்பரம்

பெங்களூரு: ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் முடிவு, காங்கிரஸ் கட்சியின் தோழமை கட்சியான திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்றோ, அதிமுகவின் வாக்குகள் இரு கூறுகளாக பிரியும் என்றோ கூற இயலாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
  பெங்களூரு புனித வளனார் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், "அச்சமில்லா எதிர்ப்பு: அதிகாரம்- பொறுப்புடைமை' என்ற தனது ஆங்கில நூலை ப.சிதம்பரம் வெளியிட்டார். பின்னர், அவர் விழாவில் பங்கேற்றவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து, மேலும் கூறியதாவது:-
 தமிழக சட்டப்பேரவையில் அதிமுக (அம்மா) கட்சிக்கு உள்ள எம்எல்ஏக்கள் தங்களது பதவிக்காலம் 4 ஆண்டுகள் 2 மாதங்கள் மீதமிருப்பதை உணர்ந்துள்ளதால், அதை முழுமையாக அனுபவிக்க முடிவுசெய்துள்ளனர்.
 ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே ஆட்சியை தக்கவைத்து கொள்ள இயலும் என்பதால், அவர்கள் ஒன்றுபட்டுள்ளனர். ஒற்றுமை குலைந்தால், ஆட்சி கவிழும்.
 தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக மக்களின் மனப்போக்கு உள்ளது. எனினும், அது ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் வெளிப்படாமல் இருக்கலாம்.
 இடைத்தேர்தல்கள் காவல்துறை, ஆள் பலம், பணபலத்தால் ஆதிக்கம் பெற்றவை. எனவே, மக்களின் எதிர்ப்புணர்வு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில்தான் வெளிப்படும். உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் உணர்வு வெளிப்பட வாய்ப்பிருக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com