தேசிய அளவில் மகா கூட்டணி அமைத்தால் 2019-ல் பாஜகவை அகற்றலாம்:  நிதீஷ்குமார் பேட்டி

தேசிய அளவில் மகா கூட்டணி அமைத்தால் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவை அகற்றலாம்:  நிதீஷ்குமார் வலியுறுத்தல்
தேசிய அளவில் மகா கூட்டணி அமைத்தால் 2019-ல் பாஜகவை அகற்றலாம்:  நிதீஷ்குமார் பேட்டி
Published on
Updated on
1 min read

பாட்னா: பாஜகவின் எழுச்சியைத் தடுத்து நிறுத்த தேசிய அளவில் மகா கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதீஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பிகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உத்தரப் பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றதற்கான முக்கிய காரணம் அங்கு பிகாரில் அமைக்கப்பட்டதைப் போன்ற மகா கூட்டணி அமைக்கப்படாததே ஆகும். அங்கு சமாஜவாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் சட்டப் பேரவைத் தேர்தலில் பெற்ற வாக்குகளைக் கூட்டினால் அது பாஜக பெற்ற வாக்குகளைக் காட்டிலும் 10 சதவீதம் கூடுதலாகும்.
எனவே, பாஜகவின் எழுச்சியைத் தடுத்து நிறுத்துவதற்கு பிகாரில் உருவாக்கப்பட்டதைப் போன்ற மகா கூட்டணியை தேசிய அளவில் ஏற்படுத்துவதே தீர்வாகும். அவ்வாறு தேசிய அளவில் ஏற்படுத்தப்படும் மகா கூட்டணியானது மிகப்பெரிய வெற்றியைப் பெறும். பாஜக அல்லாத அனைத்துக் கட்சிகளையும் அந்தக் கூட்டணியில் சேர்ப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டிய பொறுப்பு, பெரிய கட்சி என்ற முறையில் காங்கிரஸூக்கு உள்ளது.  
இது தொடர்பாக நான் சில இடதுசாரித் தலைவர்களுடன் பேச்சு நடத்தினேன். அவர்களும் வரும் 2019-இல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக முயற்சியெடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
அண்மையில் நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்கள் வெற்றி-தோல்வி என்ற கலவையான முடிவுகளை அளித்திருந்தன. இந்தச் சூழ்நிலையில் தனக்கு இரு மாநிலங்களில் கிடைத்த வெற்றியை பாஜக கொண்டாடியது அவசியமற்றது. காங்கிரஸ் கட்சி பஞ்சாபில் வெற்றி பெற்றது. கோவா, மணிப்பூர் ஆகிய இரு மாநிலங்களில் அக்கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
எனவே, தேர்தல் முடிவுகள் முற்றிலும் பாஜகவுக்குச் சாதகமாக அமைந்து விட்டதாக கருதுவது தவறானது. பாஜக-வால் கோவாவிலும், மணிப்பூரிலும் எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்றே ஆட்சியமைக்க முடிந்தது என்றார் நிதீஷ்குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com