குறைந்த விலையில் தரமான மருந்துகள்: மருத்துவர்கள் பரிந்துரைக்க விரைவில் சட்டம்

ஏழைகளுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைக்கும் வகையில் 'ஜெனரிக்' மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்க விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி
சூரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி.
சூரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி.

ஏழைகளுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைக்கும் வகையில் 'ஜெனரிக்' மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்க விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பெரு நிறுவனங்களால் 'பிராண்ட்' பெயர்களில் தயாரிக்கப்படும் மருந்துகளைவிட பல மடங்கு குறைவான விலையில், ஆனால் அதற்கு இணையான தரத்தில் 'ஜெனரிக்' மருந்துகள் (அடிப்படை மூலக்கூறு மருந்துகள்) கிடைப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நோயாளிகள் குறைந்த விலையில் தரமான மருந்துகளைப் பெற முடியும்.
ரூ.400 கோடியில் மருத்துவமனை: குஜராத் மாநிலம் சூரத்தில் தொண்டு அமைப்பு சார்பில் ரூ.400 கோடி செலவில் கட்டப்பட்ட 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆய்வு மையத்தை திங்கள்கிழமை தொடங்கி வைத்த மோடி இது குறித்துப் பேசியதாவது:
சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் அரசு புதிய சுகாதாரக் கொள்கையைக் கொண்டு வந்து மருந்துகள், இதய நோயாளிகளுக்குப் பொருத்தப்படும் 'ஸ்டென்ட்' சாதனம் ஆகியவற்றின் விலையைக் குறைத்து நிர்ணயித்தது. இதனால், மருந்துகளைத் தயாரிக்கும் பெருநிறுவனங்கள் சில எங்கள் அரசு மீது கோபம் கொண்டுள்ளன.
மக்கள் உருவாக்க வேண்டும்: நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழும் மக்கள், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ முன்வர வேண்டும். இந்த நாடு அரசர்களாலும், தலைவர்களாலும் உருவாக்கப்பட்டதல்ல, முழுவதும் மக்களால் உருவாக்கப்பட்டது. கிராமங்களில் கோசாலைகள் அரசால் உருவாக்கப்படவில்லை, மக்களால் உருவாக்கப்பட்டன. நூலகங்கள் பலவும் மக்களால் இணைந்து உருவாக்கப்பட்டவை. அதேபோல கிராமப்பகுதிகளில் மக்களே இணைந்து மருத்துவமனைகளை உருவாக்கி அவற்றை நடத்திவர வேண்டும்.
ஜெனரிக் மருந்துகள்: ஏழை எளிய மக்களுக்கு புரியாத வகையில் மருத்துவர்கள் மருந்துகளை எழுதிக் கொடுக்கின்றனர். மக்கள் தனியார் மருந்தகங்களுக்குச் சென்று அந்த மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர்.
இனி மருந்துவர்கள் 'ஜெனரிக்' மருந்துகளைத்தான் பரிந்துரைக்க வேண்டும் என்று விரைவில் மத்திய அரசு சட்டம் கொண்டு வரும். 'ஜெனரிக்' மருந்துகள்தான் ஏழை மக்கள் வாங்கும் வகையில் குறைவான விலையில் கிடைக்கின்றன.
மருந்துகளின் விலை: நமது நாட்டில் மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் மருத்துவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளன. ஆனால், மருந்துகளின் விலை அதிகமாக உள்ளது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் ஒருவர் நோய்வாய்ப்பட்டால், அவரது குடும்பத்தின் நிதிநிலை மோசமாக பாதிக்கப்படுகிறது. அவர்களால் வீடு வாங்க முடிவதில்லை. பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க கஷ்டப்படுகிறார்கள்.
புதிய சுகாதாரக் கொள்கை: குறைவான செலவில் அனைவருக்கும் மருத்துவ வசதி அளிக்க வேண்டியது இந்த அரசின் பொறுப்பு. சமீபத்தில் நாங்கள் புதிய சுகாதாரக் கொள்கையை அறிவித்தோம். இதற்கு முன்பு அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சியில்தான் சுகாதாரக் கொள்கை கொண்டு வரப்பட்டது. அதற்கு இடையில் எந்த மத்திய அரசும் மக்களின் சுகாதாரம், மருத்துவ விஷயத்தில் அக்கறை செலுத்தவில்லை.
என் மீது பலருக்கு கோபம்: முன்பு நான் குஜராத் முதல்வராக இருந்தபோது எடுத்த முடிவுகளால் பலரது கோபத்துக்கு ஆளானேன். இப்போது, தில்லிக்கு சென்ற (பிரதமரான) பிறகு மக்கள் நலனுக்கான எனது பணிகளால் சிலருக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது.
மிக அதிக லாபமாக ரூ.1200-க்கு விற்கப்பட்டு வந்த ஊசி மருந்து விலையை, மக்கள் நலன் கருதி ரூ.700ஆக குறைத்து நிர்ணயித்தோம். இதனால் சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மத்திய அரசின் மீது கோபத்தில் உள்ளன. இதய நோயாளிகளுக்கு பொருத்தப்படும் 'ஸ்டென்ட்' சாதனத்தின் விலையையும் குறைத்துள்ளோம். இது, அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு தரமான மருத்துவ வசதி, நியாயமான விலையில் கிடைக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
வருமுன் காப்போம்: பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள மருந்தகங்களில் மக்கள் குறைந்த விலையில் 'ஜெனரிக்' மருந்துகளை வாங்க முடியும். நோய்களைத் தடுக்க மக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
நோய் வருமுன் காப்பது மிகவும் முக்கியமானது. எனவேதான் தூய்மை இந்தியா போன்ற திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது. யோகப் பயிற்சிகளை முறையாகச் செய்வதன் மூலமும் பல்வேறு நோய்களில் இருந்த நம்மைக் காத்துக் கொள்ள முடியும் என்றார் மோடி.
வைர மையம் திறப்பு: சூரத் நகைக்கடையில் வைரத்தை பட்டை தீட்டும் மையத்தையும் மோடி தொடக்கி வைத்தார். அப்போது, 'இந்தியாவில் தங்க நகை தயாரிப்பு, வைர ஏற்றுமதித் தொழிலில் சூரத் முன்னிலை வகிக்கிறது. இங்கு வடிவமைக்கப்படும் நகைகள் சர்வதேச அளவில் பிரபலமாக உள்ளன. இது நமது நகைத் தொழிலாளர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி' என்று மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com