
குறைந்த கட்டணத்தில் உள்நாட்டில் விமானப் பயணம் மேற்கொள்ளும் 'உடான்' திட்டத்தை ஹிமாசாலப் பிரதேச மாநிலம், சிம்லாவில் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடங்கி வைக்கிறார்.
உள்நாட்டில் செயல்படாமல் இருக்கும் விமான நிலையங்களையும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வைக்கும் நோக்கிலும், குறைந்த கட்டணத்தில் பல்வேறு பகுதிகளை விமானப் போக்குவரத்து மூலம் இணைக்கும் நோக்கிலும் மத்திய அரசால் 'உடான்' திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சிம்லா-தில்லி, கடப்பா-ஹைதராபாத், நாந்தேட்-ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு இடையே குறைந்த கட்டண விமான போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டத்தை சிம்லாவில் இருந்து அவர் தொடங்கி வைக்கிறார்.
1 மணி நேரத்துக்குள்ளான பயணத்துக்கு ரூ.2,500 வரை விமானப் போக்குவரத்துக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமராக பதவியேற்ற பிறகு சிம்லாவுக்கு மோடி முதல்முறையாக வருகை தர உள்ளார்.
இதுகுறித்து சுட்டுரையில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், 'உலகிலேயே முதல் முறையாக இதுபோன்ற ஒரு திட்டம் நமது தேசத்தில்தான் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம், நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் குறைந்த கட்டணத்தில் இணைக்க முடியும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.