
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தொலைக்காட்சிப் பெட்டி, ஸ்மார்ட்போன், எல்இடி விளக்குகள் உள்ளிட்டவை மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
உள்நாட்டில் அந்த சாதனங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், இந்நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இறக்குமதி செய்யப்படும் தொலைக்காட்சிப் பெட்டிக்கு தற்போது விதிக்கப்படும் 10 சதவீத வரி, 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன் (செல்லிடப்பேசி) மீதான வரி பூஜ்யம் என்பதிலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. எல்இடி விளக்குகள் மீதான வரி 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோ ஓவன் மீதான வரி 20 சதவீதமாகவும், தொலைக்காட்சி காமரா போன்ற விடியோ பதிவு சாதனம் மீதான வரி 15 சதவீதமாகவும், செட்டாப் பாக்ஸ் சாதனம் மீதான வரி 20 சதவீதமாகவும், மின்னணு மீட்டர் மீதான வரி 15 சதவீதமாகவும், அலங்கார விளக்குகள் மீதான வரி 20 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது என்று அந்த அறிவிக்கையில் வருவாய்த் துறை குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் போட்டியை சமாளிப்பதற்கு ஏதுவாக, குறைந்த விலையில் ஸ்மார்ட் போன்களை வழங்கி, அதற்கு பல்வேறு சலுகைகளை செல்லிடப் பேசி நிறுவனங்கள் அளித்து வருகின்றன. இந்நிலையில், இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள் மீதான வரியை மத்திய அரசு அதிகரித்திருப்பது, அதன் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். இதனால் பல்வேறு சலுகைகளுடன் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை அளிக்கும் செல்லிடப் பேசி நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.