இந்தியாவின் ஒற்றுமை நிலைக்க வட இந்தியாவில் திருக்குறள் கற்பிக்க வேண்டும்: தருண்விஜய்

இந்தியாவின் ஒற்றுமை நிலைத்திருக்க வட இந்தியாவில் திருக்குறள் கற்பிக்கவேண்டும் என்று பாஜக முன்னாள் எம்பி தருண்விஜய் தெரிவித்தார்.
இந்தியாவின் ஒற்றுமை நிலைக்க வட இந்தியாவில் திருக்குறள் கற்பிக்க வேண்டும்: தருண்விஜய்
Updated on
1 min read

இந்தியாவின் ஒற்றுமை நிலைத்திருக்க வட இந்தியாவில் திருக்குறள் கற்பிக்கவேண்டும் என்று பாஜக முன்னாள் எம்பி தருண்விஜய் தெரிவித்தார்.
பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் சார்பில் பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த திருவள்ளுவர் விழா மற்றும் பேரணியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவர் பேசியது:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டம் இந்தியாவுக்கே முன்னுதாரணமாகியுள்ளது. தமிழக மக்கள் உன்னதமானவர்கள் என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளனர்.
அசோகரும், சந்திரகுப்த மெüர்யா பற்றி அறிந்து கொள்வது மட்டும் இந்திய வரலாறு அல்ல. தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டியர்களும் இந்திய வரலாற்றில் முக்கியமானவர்கள் என்பதை அறிய வேண்டும். ஆண்டாள், கண்ணகி, சுப்ரமணிய பாரதி, திருவள்ளுவர் ஆகியோரையும் வட இந்தியர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
தமிழர்களின் பண்பாடு மிகவும் தொன்மையானது. சிந்து வெளி நாகரிக காலத்திலேயே ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாகும். ஜல்லிக்கட்டுக்காக தமிழர்கள் அமைதி வழியில் நடத்தியபோராட்டம் உலக மக்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன் கங்கைக்கரையில் ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலையை வைத்தேன். அதேபோல, இந்தியா முழுவதும் திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாற்றைப் பரப்ப வேண்டும். வட இந்தியக் கல்லூரிகளில் திருவள்ளுவர் குறித்த வினாடி வினாவை பல்கலைக்கழக மானியக் குழு அல்லது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறேன். இதன் மூலம், திருவள்ளுவரை வட இந்தியாவுக்கு அறிமுகம் செய்யவுள்ளோம். உத்தரகண்ட் மாநிலத்தில் நான் பிறந்திருந்தாலும், நான் தமிழன்னையின் மகன் என்று அறியப்படவே விரும்புகிறேன்.
தமிழர்கள் தங்கள் பண்பாட்டுக்கூறுகளை எந்தக் காலத்திலும் சமரசம் செய்துகொள்ளக்கூடாது. உலகின் உன்னதமான பண்பாடு தமிழர்களுடையது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இந்தியாவின் ஒருமைப்பாடு காக்கப்படவேண்டுமானால், திருவள்ளுவரின் திருக்குறளை வட இந்தியர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். நாடாளுமன்றத்தில் திருவள்ளுவர் விழா நடத்தியபோது அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர். அரசியல் கட்சிகளைப் போல தமிழர்களை ஒன்றுசேர்க்கும் திருவள்ளுவரின் சிந்தனைகளை உலகம் முழுவதும் பரப்புவதே என் குறிக்கோள் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com